srilanka floodகொழும்பு: கடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. 17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6,000 திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 80 திற்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, காலி, குருநாகல், மொனராகலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும் அடை மழை, வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் ஆங்காங்கே மண் மேடுகள் சரிந்துள்ளன. இங்கு பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவும் பிரதேசங்களில் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

srilanka flood

“அடுத்த சில தினங்களுக்கும், தென் மேல் பருவப் பெயர்ச்சியினால் நாட்டில் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் எனவும்  ‘அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிப் பதிவாகும் ஏது நிலை இருக்கிறது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளையும் மழை பெய்யக்கூடும்.” எனவும் வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.