• அஸ்லம் எஸ்.மௌலானா

british islamic schoolகல்முனை நகரில் இயங்கி வருகின்ற பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டும் புனித ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தியும் “அல்குர்ஆன் சம்பியன் விருது” வழங்கும் போட்டியொன்றை நடாத்த அப்பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

புனித ரமழான் மாதத்தை பயனுள்ளதாக்கி ஈருலக வாழ்வுக்கும் ஈடேற்றம் தரும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்போட்டியில் 3 வயது தொடக்கம் 14 வயது வரையான சிறுவர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும் 100 பேருக்கான அனுமதிகளே வழக்கப்பட உள்ளதாகவும் விண்ணப்ப படிவங்களை 203, பிரதான வீதி, கல்முனை எனும் முகவரியில் அமைந்துள்ள பாடசாலை அலுவலகத்திலோ http://www.britishislamicschool.edu.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்தோ பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதன் பிரதம இயக்குனரும் ஜஷாஹ் குழும கம்பெனிகளின் தவிசாளருமான ஜெஸீம் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

பங்குபற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்படுவர். அத்துடன் அம்மூவரும் கனடாவில் நடாத்தப்படும் சர்வதேச இஸ்லாமிய போட்டிகளுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டி தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு 0672059259, 0716229259 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

british islamic school

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சென்ற ஆண்டு கனடாவில் நடைபெற்ற இவ்வாறான சர்வதேச போட்டியில் ஐக்கிய ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொண்டு குர்ஆன் மனன இதர மற்றும் போட்டிகளில் வெற்றி ஈட்டிய தனது மகளும் பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஸ்தாபக மாணவியுமான மர்யம் ஜெஸீம் அவர்களின் எண்ணத்தில் உருவானதே இவ்விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டமாகும்.

தான் அடைந்த வெற்றி அனுபவத்தை போல் இலங்கையில் உள்ள சிறுவர்களும் பெற தனக்காக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை மூலம் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி அவர் என்னை தூண்டியதன் வெளிப்பாடே இம்முயற்சியாகும்.

சர்வதேச தரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளதும் சர்வதேச தரத்தில் ஒழுங்கு செய்யப்படுவதுமான இவ் ‘அல்குர்ஆன் சம்பியன் விருது’ இன்ஷா அல்லாஹ் வருடா வருடம் சர்வேதேச ரீதியில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் முதலில் தனது தாய் நாட்டில் விசேடமாக தான் பிறந்த பிரதேசத்திலிருந்து இதனை ஆரம்பித்து வைப்பதில் உளத் திருப்தி கொள்வதாகவும்” ஜெஸீம் குறிப்பிட்டார்.