parliament (2)கொழும்பு: இலங்கையின் வேடிக்கையும் விநோதமும் நிறைந்த அரசாங்கத்தில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை தொடர்ந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அதில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் 6

அமைச்சர்கள் உள்ளடங்கலாக, 15 பேர் எதிர்த்தரப்புக்கு சென்றமை ஆகிய நிலைமைகளால் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யவே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.

இதனை ஒரு விஞ்ஞான ரீதியிலான அமைச்சரவை மாற்றம் என்று ஜனாதிபதி வர்ணித்திருந்தார். ஆனாலும், இது குறித்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் காணப்படுகின்றன.

கூட்டணி அரசாங்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிக்கட்டவும், அமைச்சரவையில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பவுமே இந்த மாற்றங்களை செய்தது என்று பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதாவது ஜனாதிபதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பொறுத்தவரை உள்ளூராட்சி தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னிலை பெற்ற பின்னர் அவருடன் போவதே தமக்கு எதிர்காலம் என்ற கருத்து அவர்கள் மத்தியில் பலமாக காணப்படுகின்றது.

அவர்களது அழுத்தம் ஜனாதிபதியையும் முடிவு எடுப்பதில் தயக்கங்களை காண்பிக்கச் செய்தது.

ஆனால் இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக பொறுப்புக்களை கொடுத்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அடுத்த இரு வருடத்துக்காவது தொடர்வது என்ற முடிவிலேயே அவர் இருப்பதாக தெரிகிறது.