லண்டன்: லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோ பேக் மோடி (திரும்பிப் போ மோடி) என்று கோஷமிட்டதுடன், பதாகைகளையும் ஏந்தி போராடினார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகவிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராடி வரும் தமிழர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை உலக மக்கள் பார்க்கும்படி செய்தனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள மோடிக்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களும் கோ பேக் மோடி என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். சிலர் மோடி ஒரு தீவிரவாதி என்று கோஷமிட்டனர்.
கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து லண்டனில் வசிக்கும் காஷ்மீர் மக்கள் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே எதுவும் நடக்காதது போன்று மோடி இருக்கிறார். லண்டனில் அவர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நான் டீ விற்ற காலம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அதனால் தான் நான் இன்னும் சாதாரண ஆளாக இருக்கிறேன். தினமும் 2 கிலோ விமர்சனம் கிடைக்கிறது. அது தான் என் ஆரோக்கியத்திற்கான ரகசியம். நான் விமர்சனங்களை வரவேற்பவன் என்று பேசினார். மோடியின் டீக்கடைக்காரர் பேச்சு போராட்டக்காரர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.