நிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்

  • ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்

inamullah“அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் – ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.” (ஸுரத்துல் அன்ஆம் :119)

அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளுக்காக வேறு மார்க்கங்கள் இல்லாத பொழுது முஸ்லிம்கள் வங்கிகளூடாக வழங்கப்படும் சலுகைகளுடன் கூடிய அரச நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு சுய தொழில்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்ற சமூர்த்தி, ஜனசவிய, திவிநெகும போன்ற உதவித் தொகைகள் அரச வங்கிகளூடாக வழங்கப்படுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கும் அரச சலுகைகள் அரச மற்றும் தனியார் வங்கிகளூடாக வழங்கப்படுகின்றன.

நுகர்வோர் சமுதாயமாக இருக்கும் நாம் உற்பத்தித் துறைகளை நோக்கி நகர்வதற்குரிய வழிவகைகளை முன்னுரிமைகள் அடிப்படையில் கண்டறிதல் கடமையாகும், இந்த நாட்டின் வரியிறுப்பாளர்கள் என்ற வகையில் உணவு உற்பத்தி விவசாயம், கால்நடை வளர்ப்பு, நண்ணீர் மீன்வளர்ப்பு, கடற்தொழில், சிறு கைத்தொழில்கள், கிராமிய கைத்தொழில்கள், வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைகள், வர்த்தக பயிர்ச் செய்கைகள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் முயற்சிகள் என அரசினால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவர்களாவோம்.

மேற்கண்ட அரச சலுகைகள் பெறப்பட்டு செய்யப்படும் உணவு உற்பத்தி பொருளுற்பத்தி, மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ளும் நுகர்வோர் சமூகமாக மாத்திரம் நாம் இருக்கின்றோம், அது குறித்த சன்மார்க்க வரையறைகளையும் நாம் அறிந்திருத்தல் வேண்டும், எங்களுக்கு அடுத்தவர் உற்பத்தி செய்யும் பண்டங்கள் பொருட்களில் ஹராமான கலப்படங்கள் இருக்கக் கூடாது ஆனால் நாம் அவற்றை உற்பத்தி செய்வதில் பின்னிற்கின்றோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் அது சார்ந்த சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கும், அவர்களது வீடமைப்பு, காப்புறுதி மற்றும் தொழில் சார் நடவடிக்கைகளிற்கும் அரசினால் வங்கிகளினூடாக வழங்கப்படுகின்ற சலுகைகளையும் மாற்றீடுகள் இல்லாத நிலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோன்றே அரச சேவையில் உள்ளோரிற்கான ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், காப்புறுதிகள், மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கப்படுகின்ற காப்புறுதிகள் என்பவற்றை வேறு மாற்றீடுகள் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறன நிறுவனங்களில் தொழில் புரிவதற்கான அனுமதியும் இத்தகைய அடிப்படையில் தான் எமது முன்னோர்களால் வழங்கப்பட்டு வந்தன.

என்றாலும், வேறு மார்க்கமே இல்லாத நிலையில் நிர்பந்தம் இருப்பதால் மாத்திரமே இவ்வாறான அனுமதி வழங்கப்படுகின்றது, அதேவேளை ஹலாலான மாற்றீடுகளை கண்டறிவதும், ஏற்படுத்துவதும், அறிமுகம் செய்வதும், அமுல் படுத்துவதும் சமூகத்தின் மீது விதிக்கப்படுகின்ற கூட்டு பொறுப்பும் கடமையுமாகும்.

உதாரணமாக, நாம் சிறுபான்மையினராக இருக்கின்ற நிலையில் யதார்த்தமான வட்டியில்லாத இலாப நஷ்டப் பங்கீடுகளை அடிப்படையாகக் கொண்ட நுண் நிதி கடனுதவிகளை பெற்றுத்தரக் கூடிய கிராமிய கூட்டுறவு வங்கிகளை அரச அனுமதியுடன் தோற்றுவித்துக் கொள்ளவும், ஹலாலான மாற்றீடுகளை ஏனைய சேவைகளுக்காக அறிமுகம் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளவும் நிறுவன ரீதியிலான கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது சமூகத்தின் மீதுள்ள கூட்டுக் கடமையாகும்.

அவ்வாறான மாற்றீடுகள் குறித்து கடந்த காலங்களில் எமது இஸ்லாமிய நிறுவனங்களும் அமைப்புக்களும் தலைமைகளும் ஆய்வுகளை செய்து தீர்மானங்களை அமுலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறியுள்ளமையால் பல ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகள் கடல்கடந்து நிபுணத்துவங்கள் அற்ற பணிகளை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றமை பல ஹராமான சமூக பொருளாதார கலாசார சவால்களை தோற்றுவித்துள்ளமை பகிரங்க இரகசியமாகும்.

இன்று மஸ்ஜிதுகளில் கடமை புரியும் கதீப்மார்கள், முஅத்தின்கள், மதரசாக்களில் கடமைபுரியும் உலமாக்கள், முஅல்லிம்கள், உஸ்தாதுமார்கள் என எவருக்குமே ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேம இலாப நிதியம், ஓய்வூதியம், காப்புறுதிகள், தொழில்சார் சலுகைகள் உரிமைகள் இல்லாமைக்கு இந்த விவகாரமும் காரணமாகும்.

குறிப்பாக அரசினால் வழங்கப்படுகின்ற மேற்படி சேவைகளை அரச மற்றும் தனியார் வங்கிகளின் இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல் பிறிவுகளூடாக பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்கின்ற ஏற்பாடுகளை செய்து தருமாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள் கோரிக்கைகளை விடுப்பதோடு நல்லிணக்க அடிப்படையில் அவ்வாறான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

மாற்றீடுகள் இல்லாத நிலையில் கருப்புப் பணங்களை கையாளுவது, கடத்தல் முயற்சிகளில் ஈடுபடுவது, உண்டியல் வியாபாரம் செய்வது, பிரமிட் வியாபாரம் செய்வது, நம்பகமற்ற நிதி வர்த்தகத்தில் ஈடுபடுவது, அரச அனுமதியற்ற நிதி நிறுவனங்களை நிறுவன ரீதியில் நடத்துவது என்பன தவிர்க்கப் படல் வேண்டும்.

மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் தற்பொழுது அமுலில் உள்ள பாரம்பரிய வங்கித் தொழிற்பாடுகளை ஒத்த இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் தொழிற்பாடுகளும் இன்னும் ஆழமாக விரிவாக இஸ்லாமிய நிதியியல் நிபுணர்களால் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

இலாப நஷ்டப் பங்கீட்டின் அடிபடையில் நிதி சேவைகளை வழங்குவதாக கூறுகின்ற இஸ்லாமிய நிதிநிறுவனங்கள் இலங்கையில் இவ்வாறான தொழில் முயற்சியாளர்களிற்கு கை கொடுக்கின்ற பொறிமுறைகளை இதுவரை அறிமுகப் படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இலங்கையில் பல பாகங்களில் நிறுவன ரீதியிலான சகாத் பங்கீடு வெற்றிகரமாக அமுல் படுத்தப் பட்டு வருவதாலும், சில இடங்களில் மஸ்ஜித்களூடாக கர்ளுள் ஹஸன் நிதியுதவித் திட்டங்கள் அமுல் படுத்தப் பட்டு வருவதாலும் சமுதாயம் சில மாற்றீடுகளை நோக்கி நகர்வது திருப்தி தரும் விடயமாகும்.

அத்தியாவசிய தேவைகளிற்கான அவசரக் கடனுதவிகளை செய்வதற்கும் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான கடனுதவிகளை வழங்குவதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

இஸ்லாம் வழங்குகின்ற இவ்வாறான நிர்பந்த நிலை அனுமதிகளை துஷ்பிரயோகம் செய்வதும், வரம்பு மீறுவதும் பெரும் பாவங்களாகும், அவற்றையும் இயன்றவரை தவிர்ந்து பொறுமை காப்பது ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மீகப் படித் தரங்களை பொறுத்து இறைநேசத்தை வென்று தருகின்ற தனிப்பட்ட விவகாரமாகும், தத்தமது மனச் சாட்சியுடனும் இரட்சகனுடனும் தொடர்பு பட்ட விடயமாகும்.

அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் இல்லாத பட்சத்தில் அவற்றை நாடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும், அத்தகைய மாற்றீடுகள் உள்ள நிலையில் முஸ்லிம்கள் ஆகுமாக்கப் படாத வழிமுறைகளை நாடுவதனை சமூகம் அழகிய வழிமுறைகளால் தடுத்து நிறுத்துவதும் விதியாக்கப் பட்டுள்ள கடமையாகும்.

இறுதியாக, “வட்டி” எடுப்பது, கொடுப்பது அதற்கு ஒத்துழைப்பது அல்லாஹ்வால் தடுக்கப்பட்டுள்ளது அது அல்லாஹ்வோடு போரிடுவதற்கு சமனான மிகப் பெரிய பாவமாகும், இன்மையிலும் மறுமையிலும் அதற்கான தண்டனைகள் மிகவும் கொடியவையாகும், வட்டியை அடிப்படையாகக் கொண்ட கொடுக்கல் வாங்கல்களை அழிப்பதாகவும், சதகா சகாத் போன்ற நிதியுதவிகளை விருத்தி செய்வதாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் வாக்குறுதியளித்துமுள்ளான்.

விதிவிலக்குகளை நாம் விதிகளாக தாராளமாக கையாள முனைதல் வரம்பு மீறலாகும், அது ஹலாலை ஹராமக்குவதும், ஹராத்தை ஹலாலாக்குவதுமான பாரிய பெரும்பாவமாகும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் ஆழமாக மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.

“வட்டி” எடுப்பது, கொடுப்பது அதற்கு ஒத்துழைப்பது அல்லாஹ்வால் தடுக்கப்பட்டுள்ளது அது அல்லாஹ்வோடு போரிடுவதற்கு சமனான மிகப் பெரிய பாவமாகும், இன்மையிலும் மறுமையிலும் அதற்கான தண்டனைகள் மிகவும் கொடியவையாகும், வட்டியை அடிப்படையாகக் கொண்ட கொடுக்கல் வாங்கல்களை அழிப்பதாகவும், சதகா சகாத் போன்ற நிதியுதவிகளை விருத்தி செய்வதாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் வாக்குறுதியளித்துமுள்ளான்.

”மனிதர்களுடைய பொருட்களில் (சேர்ந்து உங்களின்; பொருட்களும்) பெருகி வளர்வதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கின்றீர்களே அது அல்லாஹ்விடத்தில் பெருகி வளர்வதில்லை. (மாற்றமாக) அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி ஸக்காத்திலிருந்து எதை நீங்கள் கொடுக்கின்றீர்களோ (அது அல்லாஹ்விடத்தில் பெருகி வளரும்) இத்தகையோர்களே (தமக்குரிய கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவர்.” (ஸூறா அர்ரூம்: 39)

விதிவிலக்குகளை நாம் விதிகளாக தாராளமாக கையாள முனைதல் வரம்பு மீறலாகும், அது ஹலாலை ஹராமக்குவதும், ஹராத்தை ஹலாலாக்குவதுமான பாரிய பெரும்பாவமாகும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் ஆழமாக மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.

inamullah

ஸுரதுல் பகராவில் வரும் வசனங்கள்:

”வட்டியை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் நினைவிழந்தவன் எழும்பு வது போலன்றி (மறுமையில்) வேறு விதமாக எழமாட்டார்கள். அந்த நிலைக்கு அவர்கள் ஆளானது, நிச்சயமாக ,வியாபாரம் வட்டியைப் போன்றதுதான் என அவர்கள் கூறியதால்தான். மேலும் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான். ஆகவே, எவருக்கு தனது இறைவனிடமிருந்து (வட்டியைக் கண்டித்து) உபதேசம் வந்து அவர் அதனை விட்டும் விலகிக் கொண்டாரோ (அவர் அதற்கு) முன் (வாங்கிச்) சென்று போனது அவருக்குரியதே. அவரின் விடயம் அல்லாஹ்வின்பாற்பட்டதாகும். (இக்கட்டளை கிடைத்த பின்) எவர்கள் (வட்டியின்பால்) திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்;கியிருப்பார்கள்.”

”அல்லாஹ், வட்டியை (அதில் எவ்வித அபிவிருத்தியும்-பரகத்தும் இல்லாது) அழித்துவிடுவான். மேலும் தர்மங்களை, அபிவிருத்தியைக் கொண்டு வளரச் செய்கின்றான். மேலும், பாவியான நிராகரித்துக் கொண்டிருக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

எவர்கள் விசுவாசங்கொண்டு,நற்கருமங்களையும் செய்து, தொழுகையை யும் நிறைவேற்றி, ஸகாத்தையும் கொடுத்தார்களோ நிச்சயமாக அத்தகையோருக்கு அவர்களுடைய கூலி அவர்களின் இரட்சகனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு (மறுமையில்) எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.

விசுவாசங் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள். மேலும், நீங்கள் (உண்மையாக) விசுவாசங் கொண்டவர்களாக இருப்பின், வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டு விடுங்கள்.

(கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். மேலும், நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்குண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன்பட்டோருக்கு) அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்களும் (மூலத் தொகையைப்) பெற்றுக் கொள்ள முடியாதவாறு அநியாயம் செய்யப்படலாகாது.

மேலும் (கடன்பட்டவர் அதனைக் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித்தர முடியாத வாறு) அவர் கஷ்டத்தையுடைய வராயிருந்தால் (கடனைத் தீர்க்கும்) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருத்தல் வேண்டும். மேலும், (அதைக் கடன்பட்டவருக்கே) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.இன்னும் ஒரு நாளைப் பயந்து கொள்ளுங்கள். அதில், நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படுவீர்கள். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலியான)தை பூரணமாகக் கொடுக்கப்படும். (அதில்) அவர்களோ அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.” (ஸுரதுல் பகரா : 275 -281)

வட்டி உண்பதை நபியவர்கள் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிட்டார்கள். இதுபற்றிய ஹதீஸ் பின்வருமாறு:

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், ஷஅவை யாவை? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவியபோது அண்ணலார் பின்வருமாறு விளக்கினார்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆன்மாவை நியாயமின்றிக் கொலை செய்தல், வட்டி உண்ணல், அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், யுத்தத்தில் புறமுதுகு காட்டுதல், கற்புடைய முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” (புகாரி, முஸ்லிம்)

மேலும் நபியவர்கள் வட்டி தொடர்பான செயற்பாட்டில் சம்பந்தப்படுகின்ற அனைவரையும் அல்லாஹ் சபித்துள்ளதாக கூறுகிறார்கள்.

”அல்லாஹ் வட்டி உண்பவனையும் அதனை உண்ணக் கொடுப்பவனையும் அதற்கு சாட்சியாக இருப்போரையும் அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்.” (புகாரி, முஸ்லிம்)

வட்டி விபசாரத்தை விடக் கொடிய பாவமாகும் எனவும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதுபற்றிக் குறிப்பிடும் ஹதீஸ் பின்வருமாறு:

”வட்டியாக பெறப்படும் ஒரு திர்ஹமானது பாவத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்விடத்தில் முப்பத்தாறு முறை விபச்சாரத்தில் ஈடுபடுவதை விடக் கொடியதாகும்.” (தாரகுத்னி)

வட்டி எனும் பொழுது நாம் பெறும் அல்லது வழங்கும் முதலிற்கு மிகச் சிறிய ஒரு பகுதியை இலாபமாக பிரதியுபகாரமாக பெறுவதாகும், ஆனால் ஹராம் ஹலால் எனும் பொழுது வட்டி மாத்திரமல்ல, இலஞ்சம் ஊழல் மோசடி, சீதனம் சீர்வரிசை, கைக்கூலி என பெண் வீட்டாரை சுரண்டுதல் ஏனெனில் அவை சில்லரையாகவன்றி மொத்தமாக அடுத்தவரை வரியிறுப்பாளர்களை சூறையாடுவதாகும், அதேபோன்று ஹலாலான வியாபாரம் தொழில் முயற்சியாகள் என்ற பெயரிலும் கொள்ளை இலாபமீட்டுதல், கலப்படம் பதுக்கல் வியாபாரம், ஏமாற்றுதல், பொய் கூறுதல், கடத்தல் வணிகம் என பல்வேறு ஹராமான வழிமுறைகளை பலரும் கையாளுகிறார்கள் இவையும் ஹராமான உழைப்பாகும்.

குறிப்பு :

இவாறான விதிவிலக்குகள் சார்ந்த மார்க்கத் தீர்ப்புகளை இதுவரை காலமும் உலமாக்கள் தனிநபர்களது சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டே வழங்கியுள்ளனர், நிறுவன ரீதியாக தீர்ப்புக்களை பொதுவாக கூறுவதில் மிகவும் பேணுதலாக அவதானமாக முன்னெச்செரிக்கையாக அவர்கள் நடந்து கொள்கின்றனர்.

நிர்பந்த நிலைகள் ஆளுக்கு ஆள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன, விதிவிலக்கான அனுமதிகள் ஒருபொழுதும் ஹராத்தை ஹலால் ஆக்குவதாக கொள்ளப் பட முடியாது.

என்னிடம் பலர் தனிப்பட்ட ரீதியில் கேட்கின்ற கேள்விகளிற்கு நான் கூறுகின்ற சில தீர்வுகளை மாத்திரமே இங்கு குறிப்பிட்டுள்ளேன், மேற்படி விடயங்களில் நிச்சயமாக முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன, அவற்றை நான் மதிக்கின்றேன், இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக கற்கவும் தயாராக இருக்கின்றேன், இயன்றவரை நம்பகமான உலமாக்களை அணுகி தனிப்பட்ட விவகாரங்கள் குறித்த வழிகாட்டலை பெற்றுக் கொள்வதோடு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வா பிரிவை நாடுவதன் மூலம் உங்களிற்கு தேவையான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Fatwa: +94 117 490420 | fatwa@acju.lk

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s