காத்தான்குடி தேர்தல் களம் – 2018

kattankudy local election 2018காத்தான்குடி: சுமார் 30000 வாக்காளர்களைக்கொண்ட காத்தான்குடியில் இதுவரை 300 அரசியல் கூட்டங்களுக்கு மேல் அரங்கேறி இருக்கின்றன.

‘இஞ்சங்க பிள்ளைக்கு சுகமில்ல. டொக்டர்ட கூட்டிட்டுப் போகனும் நேரத்தோட கடய மூடிட்டு இன்றைக்கு வாரீங்களா’?

என்று மனைவி கேட்டாலும்,

‘இல்ல நீ உம்மாவ… இல்லாட்டி.. ராத்தாவ கூட்டிட்டுப் போ கடைல நிறைய வேல இருக்கு, நாளைக்கு செக் பிரச்சினை வேற இருக்கு’

என்று பிஸியாக இருக்கும் நம்மட முதலாளி மாரெல்லாம்,  நேரத்தோடயே கடைகளை மூடிவிட்டு, ஜூம்ஆவுக்குப் போற வாக்கில வெளிக்கிட்டு அரசியல்வாதிகளின் மேடைகளுக்கு முன்னால் தங்களை அர்ப்பணிக்கும் காலம் – அது எமது ஊர் தேர்தல் காலம்.

காத்தான்குடியில் பொதுவாக இத்தேர்தலை நோக்குமிடத்து மும்முணைப் போட்டி இடம்பெறுகிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
அவற்றுள் ஹிஸ்புல்லாஹ் அணி, சிப்லி பாரூக் அணி மற்றும் NFGG ஆகிய அரசியல் குழுக்களை இங்கு குறிப்பிடலாம்.

இம்மூன்று போட்டியாளர்களும் தங்களது பிரச்சார நேரங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளை இரு எதிர் அணிகளை விமர்சிப்பதற்காக ஒதுக்கிக்கொள்கின்றனர்.

ஹிஸ்புல்லாஹ் அணி:

கை சின்னத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இம்முறை ஹிஸ்புல்லாஹ் அணி போட்டியிடுகிறது. ‘ஜனாதிபதி எந்தக் கட்சியோ அதுதான் எனது கட்சி’ என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தமைக்கு அமையவே, கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘ஹிஸ்புல்லாஹ் அணி’ என நாம் எழுதிவருகிறோம்.

இது ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடும் தேர்தல் இல்லை என்றாலும், முழுக்க முழுக்க ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியும், அவரது செல்வாக்கும் இத்தேர்தலில் உயிர்நாடியாக மறைந்திருக்கிறது.

தான் ஆதரித்த 2015 ஜனாதிபதித் தேர்தல் தோல்வி, தான் போட்டியிட்ட 2015 பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், தன் செல்வாக்கை மீண்டும் இவ்வூரில் நிலைநாட்ட என்ன விலை கொடுத்தாவது இத்தேர்தலில் வெற்றிபெற ஹிஸ்புல்லாஹ் அதிகப்பிரயத்தனம் எடுத்துவருவது கண்கூடு.

‘சிப்லி பாரூக் எனக்கு எந்தச் சவாலும் இல்லை. ஆனால் அப்துர் ரஹ்மான் எனக்கு ஓர் சவாலாகவே அமைவார்’ என கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தல் நேர்காணலின் போது ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியிருந்தார்.

ஆனால் இன்று ராஜாங்க அமைச்சருக்கு இருக்கும் ஒரே ஒரு சவால் பொறியியலாளர் சிப்லி பாரூக்தான் என்பதை அவரது தேர்தல் பிரச்சார வார்த்தைகள் வெளிப்படையாகவே காட்டிக்கொடுக்கின்றன.

தோல்வியடைந்த பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஊர் பேசும் அளவிற்கு யாரையும் ஹிஸ்புல்லாஹ் களமிறக்காவிட்டாலும், தன்னோடு இருந்தவர்களுக்கு இத்தேர்தலில் சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்.

இதற்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தலிலோ, பாராளுமன்றத் தேர்தலிலோ இவர்களால் ஹிஸ்புல்லாஹ் அணியில் வேட்பாளராக களமிறங்க முடியாது. தகுதியும் கிடையாது.

ஏனெனில் மாகாணசபைத் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும், இதைவிட பலப்பரீட்சை மிக்கதாகவே அமையும். அதற்காக தனது மகனை ஹிஸ்புல்லாஹ் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்களின் வாய்த்தடுமாற்றத்தின் பின்னர், தேர்தல் மேடைகளில் வேட்பாளர்களைவிட ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்தான் மணிக்கணக்கில் உரை நிகழ்த்துகிறார்.

நல்ல மரியாதையாக கடந்த காலங்களில் உரை நிகழ்த்திவந்த ராஜாங்க அமைச்சர் இன்று, “பைத்தியக் காரன்”, “மௌத்தாகப் போகிறார்”, “அரை லூசு”, “பச்சப் பேயன்”, “மடையன்” போன்ற தகாக வாரத்தைகளை அடிக்கடி தனது பிரச்சார மேடைகளில் தன் எதிரிகளை குறிவைத்து மொழிந்து வருவது அவரது மன அழுத்தத்தை தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறது.

பணமும், பொட்டலங்களும், ரிதிதெண்ணையில் உள்ள சில காணிகளும் பிற வெகுமதிகளும் தேர்தல் பரிசாக ஹிஸ்புல்லாஹ் தரப்பால் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பலம்: பணம்
பலவீனம்: ஊழல் மாநாடு

kattankudy local election 2018

 

சிப்லி பாரூக் அணி:

கட்சிகளுக்கு அப்பால், ஹிஸ்புல்லாஹ் போன்று தனக்கொரு செல்வாக்கை காத்தான்குடியில் பெற்றுக்கொண்டவர். கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் + NFGG கூட்டுக் கட்சியில் இணைந்திருந்தார். இன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து நிலையானதோர் கட்சி இல்லாமையினால் ‘சிப்லி பாரூக் அணி’ என எழுதி வருகிறோம்.

கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலோடு இவ்வூரைத் துறந்து சென்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தோற்றாலும் இவ்வூருக்கு தனது சேவையைச் செய்யவேண்டும் என்ற நோக்கில் இன்றுவரை அரசியல் சவால்களுக்கு மத்தியில் தனது சேவையைத் தொடர்ந்து வருகிறார்.

ரஊப் ஹகீமை விமர்சித்து அரசியல் இலாபம் தேடும் எதிரிகளால் சிப்லி பாரூக் நாள் தோரும் விமர்சனங்களை எதிர்நோக்கின்றாரே தவிர, அவரைப்பற்றிய வேறு எந்த விமர்சனங்களையும் இதுவரை எவரும் முன் வைக்கவில்லை.

தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்களுக்கு, பகிரங்கமாக அழைப்பு விடுத்தும், குற்றம் சுமத்தியோர் எவரும் சத்தியத்தைக் கண்டுகொள்ளாமல் நழுவிவிட்டனர்.

ஹிழுரியா வட்டாரம் ஓர் சவால் மிக்க வட்டாரமாக அமைகிறது. மும்முணைப் போட்டி என்றாலும் கூட, அஸ்பருக்கும் சிப்லிக்குமான ஓர் பலப்பரீட்சை இவ்வட்டாரத்தில் அமையும்.

பலம்: தன்நம்பிக்கை
பலவீனம்: கட்சி

 

NFGG

பொறியியலாளர்கள், கல்விமான்களைக் கொண்டமைந்த, பசுமைக்கட்சியாக திகழ்ந்த இக்கட்சி, எதிர்காலத்தில் இவ்வூரை ஆளும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வியாபார நோக்கத்தின் காரணமாக பகுதி நேர அரசியலாக பின்னர் மாற்றம் பெற்றது.

மக்களின் குறை கேட்க ஓர் அலுவலகம் தொடர்ந்து இயங்க முடியவில்லை.

கடந்த தேர்தலோடு அபிவிருத்தி, சமூக சேவைகளை இவ்வூரில் நிறுத்திக்கொண்ட இவர்கள் இத்தேர்தலில் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளைக் கொடுத்திருக்கின்றனர்.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் சொந்த முயற்சியில் இன்று உலகம் பேசும் ஓர் கெம்பஸ் ஆகத் திகழும் BCAS இல் கல்வி கற்று வெளியேறிய பலர் இன்று தலைநகரத்திலும், வெளிநாடுகளிலிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

தனது கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களை நம்பித்தான் இன்று காத்தான்குடிக்கு வெளியிலும் NFGG களமிறங்கி இருக்கிறது.

சொந்த ஊரில், தனது சொந்தத் தொகுதியில் இக்கட்சியின் தவிசாளர் நேரடியாகப் போட்டியிட முடியாத நிலையில் இக்கட்சியின் பரிதாபம் தொடர்கிறது.

‘நல்ல திட்டங்கள் இருக்கின்றன. சந்தர்ப்பம் தாருங்கள்’ என வழமை போன்று கேட்கின்றனர்.

பலம்: இலட்சியம்
பலவீனம்: விடுமுறை அரசியல்

ஏனைய கட்சிகள்-குழுக்கள்

மேற்படி 3 கட்சிகளையும் விரும்பாதவர்கள் அல்லது தானும் இத்தேர்தலில் ஓர் அரசியல்வாதியாக அறிமுகமாக வேண்டும் என்ற நோக்கில் வண்ணத்துப்பூச்சி, மணி, யானை, தாமரை மொட்டு மற்றும் மயில் போன்றனவும் களமிறங்கி இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களையும், முகநூல் நண்பர்களும் ஆதரவு தருவர் என்ற நம்பிக்கையில் இவர்களுள் பலர் களமிறங்கியுள்ளனர்.

இணையத்தள ஆதரவாளர்கள் அல்லது வெளிநாட்டில் வசிப்போர்:

முகநூல் நேரடி தேர்தல் பிரச்சாரங்களை ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களே அதிகமாக காண்கின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் அதிகமானவர்கள் ராஜாங்க அமைச்சரின் ஆதரவாளராகவே இருக்கின்றனர்.

முகநூல் நேரடி தேர்தல் பிரச்சாரங்களை NFGG ஆதரவாளர்கள் இதற்கு அடுத்ததாகப் பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளில் வசிப்போரின் இரண்டாவது பெரும்பாண்மை ஆதரவு NFGG இற்கே இருக்கின்றன.

கூடுதலாக முகநூலில் உலாவும் கள்ள ஐ.டிகள் வெளிநாடுகளில்தான் இயங்கி வருகின்றன. இவ்வாறான கள்ள ஐ.டிகளாளோ வெளிநாடுகளில் வசிக்கும் தீவிர ஆதரவாள்ர்களாலோ எவ்வித மாற்றத்தையும் இத்தேர்தல் சந்திக்காது.

நிச்சயமற்ற வாக்குகள்:

5000 க்கும் அதிகமான வாக்காளர்கள் தலம்பல் அல்லது யாருக்கு வாக்களிப்பது என்ற நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றனர்.

இந்த வாக்குகள்தான் ஆட்சியை தீர்மானிக்கப்போகும் வாக்குகளாக அமையும்.

பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாக்கு வங்கி இவர்கள்தான்.

விருப்பமற்ற தேர்தல்:

இத்தேர்தல் தங்களுக்கு பிடிக்கவில்லை என்ற அடிப்படையிலும் எமது தளத்தில் பல வாசகர்கள் வாக்களித்திருக்கின்றனர். இதனையும் இந்நேரத்தில் கருத்திற்கொள்ளவேண்டும்.

முடிவுரை:

ஆட்சி அதிகாரத்தை வழங்குவது அல்லாஹ் மாத்திரமே. இதைவிட வேறு எந்த தனிப்பட்ட விரோதங்களும் எமக்குக் கிடையாது. காத்தான்குடியின் தேர்தல் களத்தை இங்கு தெரியப்படுத்தியிருக்கிறோம்.

தலம்பல் வாக்குகளின் இறுதித் தீர்மானம் இதைவிட இன்னும் மாற்றத்தைக் கொண்டு வரலாம். அதனையும் இனியவன் குழு பொருந்திக்கொள்ளும்.

(முற்றும்)

இனியவன் தேர்தல் கணிப்புக் குழு
யுவர்காத்தான்குடி

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s