policeலண்டன்: இங்கிலாந்து, மில்டன் கெய்ன்ஸின் புறநகர்ப்பகுதியில் சஞ்சய் டாங்க் வசிக்கின்ற வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “அவர்கள் இங்கிருந்து வந்தார்கள்,” என்று அவர் தனது வீட்டில் உள்ள ஒரு கதவை சுட்டி காண்பித்தார். அதன் பின்னர், சிதைந்த கதவுகளின் படங்களை என்னிடம் காட்டினார்.

கொள்ளையர்கள் அவரது மனைவியின் தங்க ஆபரணங்களை மட்டுமே திருடினர். வேறு எதையுமே எடுக்கவில்லை. பள்ளியை முடித்துவிட்டு வீட்டின் பிரதான கதவு வழியாக உள்நுழைந்த அவரது மகளுக்கு அது ஒரு மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது.

“நான் வேலைக்காக லண்டனில் இருந்ததால், என் மகளிடம் வீட்டிற்கான சாவி இருந்தது. அவள் வீட்டிற்குள் வந்தபோது, கதவுகள் திறந்திருந்தன. மேலும், அவள் தனது பையை வைக்கும் படிக்கும் அறையில் உள்ள அனைத்து இழுப்பறைகளும், அலமாரிகளும் திறந்திருந்தன,” சஞ்சய் மட்டுமல்ல, அப்பகுதியிலுள்ள இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் கவுன்சிலர் எடித் பால்ட் தனது சொந்த வார்டில் என்ன நடக்கிறது என்று கவனித்து வருகிறார்.

“இது தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு போல தோன்றுகிறது. இது இந்திய சமூகத்தை இலக்காகக் கொண்ட ஒரு வழக்கு அல்ல என்று போலீசார் கூறுகின்றனர்.”

ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இருபத்தி நான்கு இந்திய குடும்பங்கள் இலக்கு வைத்து கொள்ளையடிக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். “இச்சம்பவங்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட அதிகமாகவும் மற்றும் மில்டன் கெய்ன்ஸின் சராசரியை விடவும் அதிகமானதாக உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

police
yourkattankudy/worldnews

மற்றொரு குடியிருப்பாளரும் மற்றும் உள்ளூர் கவுன்சிலருமான கீதா மோர்லா வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது. “ஒரு சங்கிலியை அணிந்துகொள்வது, திருமணத்தை குறிக்கிறது. மோதிரம் அணிவது, வளையல்கள், காதணிகள் ஆகிய அனைத்தும் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஒரு பெண் பிறந்த நாளிலிருந்து எட்டு விழாக்கள் அரங்கேறுகின்றன. அந்த ஒவ்வொரு நிகழ்விற்கும், ஏதோ ஒருவகையில் தங்க ஆபரணம் ஒன்று வழங்கப்படுகிறது” என்று மோர்லா கூறுகிறார்.

மில்டன் கெய்ன்ஸ் 1960களில் மக்கள் தங்கியிருந்து, அங்கிருந்து வேலைக்காக லண்டனுக்கு பயணிக்கக்கூடிய ஒரு பயணிகள் நகரமாக உருவானதாக விவரிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், மில்டன் கெய்ன்ஸ் அதிக இடம்பெயர்வாளர்களை கண்டது. அதில் பலர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்களாவர்.

மில்டன் கெய்ன்ஸில் உள்ள தேம்ஸ் வேலி போலீஸ் படை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.பல போலீஸ் படைகள் இந்த பிரச்சனையைப் பற்றி அறிந்து, இதுகுறித்து மக்களை எச்சரித்துள்ளனர்.

இந்திய குடும்பங்கள் நாட்டில் எங்கெங்கெல்லாம் அதிகளவில் உள்ளார்களோ அங்கெல்லாம் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

லெஸ்டர், பேர்மிங்கம், லண்டன் மற்றும் மன்செஸ்டர் போன்ற நகரங்களில் உள்ள இந்திய குடும்பங்கள் வழக்கமாக திருடர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எசெக்ஸ் காவல்துறையை சேர்ந்த புலன் விசாரணை காவல் அதிகாரியான ஜிம் வொயிட்,”ஆசிய பாரம்பரியத்தில் தங்க நகைகளில் எப்போதும் ஒரு வலுவான முக்கியத்துவம் தரப்படுவதுடன், தங்கத்தில் முதலீடு செய்வதென்பதும் உள்ளது. மத விழாக்களில் தங்கம் முக்கியமான பங்கையும் வகிக்கிறது. அதில் பல பொருட்களை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைகின்றனர்” என்று கூறுகிறார்.

கடந்த நிதியாண்டில் மட்டும், லண்டனில் மட்டும் இருக்கும் ஆசிய வீடுகளில் இருந்து 50 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு லண்டனின் பல்வேறு பகுதிகளிலிலுள்ள ஆசிய குடும்பங்களிடமிருந்து தங்கம் அல்லது நகைகள் திருடப்பட்டது தொடர்பாக 3,463 குற்றங்கள் இருந்தன.

இது இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் நிலவும் ஒரு பிரச்சனையாகும். தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், சில மக்கள் இந்த பிரச்சனையை எதிர்த்து போராடுவதற்கு பெரிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.