“உலமா சபையை இப்ப யார் வச்சிருக்கா…?”

  • இர்ஷாட் ஏ. காதர்

duaகாத்தான்குடி: ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆரோக்கியத்துக்காக நேற்று (17) இஷாத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலில் “துஆ”ப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது. இந்த துஆப் பிராத்தனைக்கான அழைப்பை ராஜாங்க அமைச்சரின் விசுவாசிகள் சிலர் முகநூலில் பதிவு செய்திருந்தனர்.

அழைப்பிற்கு கீழ், மெத்தைப் பள்ளி நிருவாகம் எனவும், காத்தன்குடி ஜம்மிய்யத்துல் உலமா எனவும் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

எனினும், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா உத்தியோகபூர்வமாக இப்பிரார்த்தனை நிகழ்விற்கான அழைப்பினை விடுத்திருந்ததா என இதுவரை தெரியவில்லை.

ஊரில் மிகப்பெரும் பொறுப்புள்ள அமைப்பாக ஒருகாலகட்டத்தில் செயற்பட்டுவந்த காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா, அண்மைக்காலமாக பலவீனமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

தொடரும் ஊரின் சமூக சீரழிவிற்கு இதுவரைக்கும் ஏதும் பொறுப்புவாய்ந்த நடவடிக்கை ஒன்றையாவது இவ்வமைப்பு எடுத்ததா என்பது கேள்விக்குரியதாகும்.

ஒரு தனிநபரின் ஆரோக்கியத்துக்காக, ஓர் பள்ளிவாயல் நிர்வாகமும், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவும் பின்னின்று செயற்படுவது வெட்கத்தக்கது.

தனிநபர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்கொடை அல்லது அழுத்தம் காரணமாக இவ்வாரான செயற்பாடுகள் அண்மைக்காலங்களில் அரசியலில் கலந்திருப்பதைக் காண முடியும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆசி வேண்டி காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் துஆ பிரார்த்தனை இடம் பெற்றிருந்ததும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஊரில் எத்தனையோ ஏழைகள் தங்களது நோய்களைக் குணப்படுத்த வசதியின்றி, வைத்தியச் செல்வாக்கின்றி மரணித்திருக்கின்றனர். பலர் இன்னும் படுத்த படுக்கையாக இருக்கின்றனர். இவர்களுக்காக என்றாவது இப்படியொரு பிரார்த்தனை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றார்களா இவர்கள்..?

மார்க்கத்தையும், அல்லாஹ்வின் இல்லத்தையும் அரசியலுக்காக ஒதுக்கும் பாரபட்சம் இவ்வூரில் களையப்பட வேண்டும்.

அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம் – இருக்க வேண்டும். ஆனால் பொது அமைப்புக்களும், பொது நிறுவனங்களும் மக்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது.

உலமாக்களுக்கெல்லாம் உலமாவும், என்றும் காத்தான்குடி மக்களின் கண்ணியத்துக்குரியவருமான அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள், தான் மரணிப்பதற்கு முன்னர் சுகவீனமுற்றிருந்தார். உண்மையில் இப்டியொரு பிரார்த்தனை ஹஸரத்துக்கு இடம்பெற்றிருந்தால் மார்க்கத்தில் கூடுமோ கூடாதோ ஏதாதொரு வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஒருவர் சுகவீனமுற்றிருந்தால் அவரைச் சென்று நலம் விசாரிப்பது ஒரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய அதி உயர் நன்மைகளில் ஒன்றாக இருக்கிறது.

ராஜாங்க அமைச்சர் ஒரு வி.ஐ.பி. என்பதால் அவர் கொழும்பில் சொகுசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அல்லது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். இதனால் ஏழைகளுக்கு அங்கு சென்று அவரை நலம் விசாரிக்க முடியாது.

dua

ஆவணப்படம்: yourkattankudysocialpicture

எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக அல்லது தொலைபேசி ஊடாக அவரது நலன் விசாரித்து ஆறுதல் கூற முடியும். இது எந்த வகையில் எத்தனைபேருக்கு வசதிப்படும் என்பது சாத்தியமில்லை.

எனவே முஸ்லிம் என்றவகையில் நாம் அவருக்காக அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வும் விரும்புகிறான்.

முகநூலில் நாங்கள் ‘சேரு’க்காகப் பிரார்த்திக்கிறோம் என கோசமெழுப்பி, அவரது புகைப்படத்துடன் தங்களையும் இணைத்து அவரது சுகயீனத்தில் குளிர்காயும் “பசைவாளி” அபிமானிகளையும் இந்நேரத்தில் நினைத்து வெட்கப்படுகிறேன்.YKK

இதேபோல் ஒரு சில சுகபோகங்களுக்காக உலமாக்களையும், பள்ளி நிருவாகிகளையும் விலைக்கு வாங்கி “துஆ”ப் பிராத்தனை என்ற பேரில் ஊருக்கும் உலகத்துக்கும் “வெளிச்சம்” போட்டுக்காட்டுவது நகைப்புக்குரியது.

இப்பிரார்த்தனை நிகழ்வுக்கு காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா பின் நிற்க வில்லை எனில், ஜம்மிய்யத்துல் உலமாவின் பெயரை உபயோகித்து அழைப்பு விடுப்பதற்கு விசுவாசிகளுக்கு அனுமதி கொடுத்தது யார் என்பதை உலமா சபை கண்டறிய வேண்டும்.

இப்படியான பிரார்த்தனை நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகளை தங்களது அலுவலகங்களில் நிகழ்த்தினால் யாருக்கம் பாரபட்சம் இருக்காது.

தனிமனிதருக்காக பள்ளிவாயல்களையும் மார்க்க சபையையும் அடகு வைக்காதீர்கள்.

சகோதரர் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு அல்லாஹ் முழு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

யுவர்காத்தான்குடிக்காக

  • இர்ஷாட் ஏ. காதர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s