கூச்சல் குழப்பத்துடன் முடிந்த கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு

eastern (2)திருகோணமலை: பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் முடிவடைந்தது.  சனிக்கிழமை (30) நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது. வியாழக்கிழமையும்  வெள்ளிக்கிழமையும் 86-வது அமர்வு நடைபெறும் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் வியாழக்கிழமையுடன் (28) இறுதி அமர்வு முடிவடைந்தது.

காலை அமர்வுக்கு துணை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் மாலை அமர்வுக்காக சபை கூடியது. அவசர பிரேரனையொன்றை முன் வைத்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் “மாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடம் தொடர்ந்து இருக்க கூடாது. விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என்றார்.

” சட்டத் திருத்தங்கள் என கூறிக் கொண்டு காலத்தை இழுத்தடிக்காமல் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களினால் முற்றுகைக்குள்ளான சம்பவத்திற்கு கண்டனத் தீர்மானமும் கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் தரப்பு உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரால் இது தொடர்பான தனிநபர் பிரேரனைகள் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

“இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாதவாறு அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போது பூசா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,” என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என அவைத் தலைவரால் சபையில் அறிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் முடிவடைந்த அமர்வு இறுதி அமர்வாக இருந்தாலும் அரசியலமைப்பு 20வது திருத்ததத்திற்கு ஆதரவு அளித்தமை தொடர்பான சர்ச்சை மற்றும் ஆளும் எதிர் தரப்பு உறுப்பினர்களின் சொற் பிரயோகங்களினால் கூச்சலுடனும் குழப்பத்துடனும் அமர்வு முடிவடைந்தது.

2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தலின் பின்னர் சபை கூடிய நாளிலிருந்து 5 வருடங்கள் அதன் பதவிக் காலமாகும்.

சப்ரகமுவ மாகாண சபை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் கலைந்தது.

சனிக்கிழமையும் வட மத்திய மாகாண சபை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றதுன. அரசியலமைப்பு 13வது திருத்தத்தின் கீழ் அடுத்த தேர்தல் வரை ஆளுநர் ஆட்சியின் கீழ் மாகாண சபை நிர்வாகம் கொண்டு வரப்படும்.

அரசாங்கம் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஓரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில் முன் வைத்த அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தம் காரணமாக இம்மாதத்துடன் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு , சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் பதவிக் காலம் குறிப்பிட்ட காலம் நீடிக்கும் வாய்ப்பு இருந்தது. இதற்கு கிழக்கு மாகாண சபையும் ஆதரவை தெரிவித்திருந்தது.

குறித்த திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெருன்பான்மை மூலமும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை காரணமாக இறுதி நேரத்தில் அரசு அதனை கைவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு 20வது திருத்ததத்திற்கு ஆதரவு அளித்த, சிறுபான்மை இனத்துக்கு துரோகமிழைத்த “மகிழ்வு”டன் விடைபெற்றனர் உறுப்பினர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s