ஸ்ரீநகர்: இந்தியாவில் தஞ்சமடைந்த ரொஹிங்யா முஸ்லிம்களைப் போல தலாய்லாமா உள்ளிட்ட திபெத் அகதிகளையும் ஈழத் தமிழ் அகதிகளையும் நாடு கடத்துமா மத்திய அரசு? என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மியான்மரில் இனப்படுகொலைக்குள்ளான அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். இதுவரை சுமார் 5 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் அடைக்கலமாகியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எல்லையில் ஐநா அகதிகள் அமைப்பு உதவி வருகிறது. ஆனால் மத்திய அரசோ, பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்தப் போவதாக கூறி வருகிறது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா பதிவிட்டுள்ளதாவது: ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்கிறது மத்திய அரசு.
இந்தியாவில் தங்கியுள்ள தலாய்லாமா உட்பட திபெத் அகதிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றுவார்களா? ராஜீவ் காந்தியை கொன்றதற்காக ஈழத் தமிழ் அகதிகளை வெளியேற்றுவார்களா? நான் முதல்வராக இருந்தவரை உள்துறை அமைச்சக கூட்டங்களில் ரோஹிங்யா முஸ்லிம்களின் அச்சுறுத்தல் பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை.