வில்பத்து விவகாரம் : தென்னிலங்கை அரசு போன்றே வட மாகாண சபையும் பாரபட்சம்

  • ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

inamullah1990 ஆண்டு வடக்கில் இருந்து முற்றாக விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட பொழுது மன்னார் முசளி பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் புத்தளம உற்பட நாட்டின் பல பாகங்களிற்கும் சென்று அகதிகளாக குடியேறியமை நாடறிந்த உலகறிந்த விடயமாகும்.

வடக்கில் இருந்து விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தமை ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அதற்காக வருந்துவதாகவும் தமிழ்த் தலைமைகள் கூறினாலும் யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களது மீள்குடியேற்றத்தின் பொழுது முஸ்லிம்கள் மீள் குடியேறுவதனை தடுப்பதற்கான சகல வழிமுறைகளையும் தமிழ்த் தலைமைகள் உற்பட வட மாகாண சபை மேற் கொண்டமை கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் உதவிய பொழுது முஸ்லிம்களை பழைய அகதிகள் என வகைப்படுத்தி பாகுபாடு கட்டுவதில் தென்னிலங்கைத் தலைமைகளும் வடபுல தமிழ்த் தலைமைகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர், இன்னும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை அரச படைகள் மாத்திரமன்றி தமிழ் ஆயுதக் குழுக்களும் ஆக்கிரமிப்பாளர்களும் கைப்பற்றியமையும் இன்று வரை அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றமையும் அண்மைக் காலமாக பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விவகாரம் இவ்வாறு இருக்க, மன்னார் மாவட்ட முசளிப்பிரதேச மக்களின் பூர்வீக இடங்களான மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கொண்டச்சி, கரடிக்குழி ஆகிய கிராமங்களை அரச வர்த்தமாணி அறிவித்தல்கள் மூலம் வில்பத்து வனப் பிரதேசத்துடன் 2009, 2012, 2017 ஆகிய காலப்பகுதிகளில் அரசாங்கம் இணைத்துள்ளமை முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அராஜகமாகும்.

அனுராதபுர மாவட்டத்திற்கு உற்பட்ட வில்பத்து வனப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு காடழிப்பு இடம்பெற்றுள்ள நிலையில், (அங்கு காட்டு யனைகளிற்கும் மனிதர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று இதுவரை சுமார் 43 யானைகள் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனைக் கண்டுகொள்ளாத அரசும் சூழலியலாளர்களும் வில்பத்து வனத்திற்குள் சேராத மன்னார் மாவட்டத்திற்குற்பட்ட முசளிப்பிரதேச மக்களின் பூர்வீக இடங்கள் விடயத்தில் கைக்கொள்ளும் அநீதியான நிலைப்பாடுகள் சிறுபான்மையினர் மீது காட்டப்படும் கொடூரமான பாரபட்சமாகும்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்களும் ஊடகங்களில் அரசியல் போர் நடத்திய பொழுதும் மக்களுக்கு தீர்ர்வினைப் பெற்றுக் கொடுக்கத் தவறியுள்ளனர், தற்பொழுது முஸ்லிம்களிற்குச் சொந்தமான சுமார் 85 % அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றுவரை, மேற்படி பிரதேசங்களில் இருந்து விரட்டப்பட்ட மக்களின் சரியான புள்ளிவிபரங்கள், அவர்களது காணிகள் வதிவிடங்கள் இழப்புக்களின் தரவுகள், ஆவணங்கள், கடந்த 27 வருடங்களில் அவர்களது சனத்தொகை அதிகரிப்பு, அவர்களில் மீள்குடியேற விருப்புபவர்களது விபரங்கள் என எதுவுமே எந்தவொரு தரப்பினாலும், அரசியல் கட்சியினாலும், அரச யந்திரத்தினாலும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவோ, முறையாக அரசினதோ சர்வதேச அமைப்புக்களினதோ கவனத்திற்கு கொண்டுவரப்படவோ இல்லை என்பதே மிகவும் கசப்பான உண்மையாகும்.

இந்த வருடம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய ஜனாதிபதியினால் ஒரு உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது அந்த உப குழு பல்வறு விடயங்களை ஆய்வு செய்து சில தீர்வுகளை முன்வைத்த பொழுதும் அவை முழுமையாக பறிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை பெருக் கொடுப்பதற்கான எத்தகைய முன்மொழிவுகளையும் முன்வைக்கவில்லை.

மாறாக கீழ்காணும் ஐந்து பிரதான அம்சங்களிற்குள் மக்களிடம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது:

தற்பொழுது இருக்கின்ற குடியிருப்புக்களில் தொடர்ந்தும் மக்கள் இருக்கலாம்.
தற்பொழுது இருக்கின்ற வதிவிடங்களிற்கு மேலதிகமாக விவசாய மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளிற்காக காணிகள் தேவைப்படின் அரசுடன் வேண்டுகோள் விடுக்கலாம்.
வனப்பிரதேசங்களில் குடியிருப்புக்களை அமைக்காது சேனைப்பயிர்ச் செய்களில் ஈடுபடலாம்.

அரச படைகள் கைப்பற்றியுள்ள நிலப்பிரதேசங்களிற்கு மாற்றீடாக காணிகள் தேவைப்படுவோர் அத்தட்சிப்படுத்தல்களோடு விண்ணப்பிக்கலாம்.
கைத்தொழில் நடவடிக்கைகளிற்காக இடங்கள் தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம்.

உண்மையில் தமது பறிபோயிருக்கின்ற பூர்வீக இடங்களை மீளப்பெற்றுக் கொள்ள தமக்கிருக்கின்ற உரிமை மறுக்கப்பட்டு அரசின் தயவில் சலுகையடிப்படியிலேயே மேற்படி தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தப்பிரதேச மக்கள் மேற்படி உப குழுவின் முடிவுகளை கருதுகின்றனர்.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் எதிர்வரும் 21 /08/2017 திங்கட்கிழமை மேற்படி உபகுழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளது, இந்த நிலையில் குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது விண்ணப்பங்களை மேற்படி குழுவினரிடம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, அந்த மக்கள் சார்பாக எந்தவொரு சிவில் அமைப்பும் அரசியல் கட்சியும் தரவுகள் அத்தாட்சிப்படுத்தல்களுடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப்பிரதேச மக்களிடம் கேட்கின்ற பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் கூறுகின்றார்கள், தத்தமது பூர்வீக இடங்களில் அல்லது தரப்படவுள்ள இடங்களில் சென்று குடியேறுவதற்கான எந்த வித முறையான ஏற்பாடுகளும் திட்டமிடல்களும் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை.

அங்கு இருக்கின்ற புதிய அரச அதிகாரிகளிற்கு எங்களை அறிமுகம் செய்வதிலும் எமது அத்தட்சிப்படுத்தல்களை முன்வைப்பதிலும் பல சிக்கல்களும் நெருக்கடிகளும் காணப்படுகின்றன, எமது பூர்வீக இடங்களிற்கான உரிமைப்பத்திரங்கள் மற்றும் அரச அனுமதிப்பத்திரங்களை சமர்ப்பிப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன, அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகிவிட்ட காரணங்கள் கூறப்படுகின்றன, என இன்னோரன்ன பிரச்சனைகளை அவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறான கையறுநிலையில் அப்பிரதேச மக்கள் பல கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்:

எமது பூர்வீக இடங்களை வில்பத்து வனப்பிரதேசமாக பிரகடனம் செய்துள்ள வர்த்தமாணி அறிவித்தல்களை இரத்துச் செய்யுங்கள்.
முஸலிப் பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கான முறையான திட்டமிடல்களை வகுத்து உட்கட்டமைப்புக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துங்கள்.
அந்தப்பிரதேசங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி இன்று வரை சனத்தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்களை கணக்கீடு செய்து அவற்றிற்கேற்ப மீள்குடியேறும் உரிமையினை அத்தாட்சிப்படுத்துங்கள்.
பதிக்கப்பட்ட மக்களின் காலடிக்கு அரச யந்திரத்தினை கொண்டு சென்று எம்மைப் பற்றிய தரவுகளையும் எங்களிற்குச் சேர வேண்டிய வதிவிடங்கள் காணி நில உரிமைகள் குறித்த அவனப்படுத்தல்களை செய்து தாருங்கள்.
விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட வடபுல மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வட மாகாண சபை தெளிவான வேலைத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும்.
முஸ்லிம் (பழைய அகதிகள்) மீள்குடியேற்றத்திற்கான விஷேட செயலணியை அமைத்து பழைய அகதிகள் என பாகுபாடுகட்டப்படும் புலிகளால் வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற ஏற்பாடுகளை செய்யுங்கள்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், உற்கட்டமைப்பு வசதிகள், அரச நிர்வாக கட்டமைப்புகள், அடிப்படை பொதுவசதிகளை குறிப்பிட்ட அமைச்சுகளின் வரவு செல்வுதிட்டங்களின் கீழ் கொண்டுவந்து உள்நாட்டு வெளிநாட்டு நிதியுதவிகளை கிடைக்கச் செய்யுங்கள்.

எதிர்வரும் 21/018/2017 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள உப குழுவின் அறிக்கையை காலம் தாழ்த்தி, அது சமர்ப்பிக்கப் படுவதற்கு முன்னர் அரச யந்திரங்களூடாக அல்லது விஷேட செயலணியூடாக பதிக்கப்பட்ட மக்களின் தரவுகளை விண்ணப்பங்களினை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.

இந்த நாட்டின் சம அந்தஸ்துள்ள, சம உரிமையுள்ள, வரியிருப்பாளர்களான பதிக்கப்பட்ட மக்கள் , மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், அரச யந்திரங்கள், உநாட்டு வெளிநாட்டு உதவிகள் என சகல தரப்பினரதும் சேவைகளைப் பெற உரித்துடையவர்கள் என்ற வகையில் அவர்கள் விடயத்தில் சகல தரப்புக்களும் பாகுபாடு கட்டுவதனை ஒரு பொழுதும் அங்கீகரிக்க முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s