இலங்கை முஸ்லிம்கள் நோக்கி சுழற்றப்படும் இருபக்கமும் கூர்மையான கத்தியே சிங்களப் பேரினவாதமாகும்

bothu boduஇலங்கையில் முஸ்லிம் மக்களை நோக்கி சுழற்றப்படும் இருபக்கமும் கூர்மையான கத்தியே சிங்களப் பேரினவாதமாகும், இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று கருத்து ரீதியானது, மற்றையது வன்முறை சார்ந்தது. இலங்கையில் அண்மைக்காலமாக “பொதுபலசேனா” “ராவணபலய” போன்ற அமைப்புகளின் இனவாத செயற்பாடுகளின் மூலதத்துவங்களே இனவாதக் கத்தியின் ஒரு கூர்மையான பக்கமாகும், கருத்து ரீதியான மூலதத்துவங்கள் குறித்து நாம் ஆராய்கின்றபோது அவை மிகவும் ஆபத்தானவை என்பதையும் நாம் அறியமுடியும். அவர்கள் முன்வைக்கும் மூலதத்துவங்களாக,

· இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய ஒரே நாடாகும், இதில் வேறு எந்த இனத்துவங்களுக்கும் உரித்துக் கிடையாது. முஸ்லிம் மக்கள் பௌத்தர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமித்திருக்கின்றார்கள், இவற்றை உடனடியாகப் பாதுகாத்தல் அவசியமாகும், (இருப்பு சார்ந்த சவால்)

· முஸ்லிம் சிங்கள மக்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடாத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள், இதன் காரணத்தினாலேயே சிங்கள பௌத்தர்களின் சங்கைபொருந்திய நகரங்கள், வணக்கஸ்தலங்களுக்கு அண்மையில் அதிகளவிலான பள்ளிவாயல்களை நிறுவி தம்மைப் பலப்படுத்துகின்றார்கள். (பாதுகாப்பு சார்ந்த சவால்)

· முஸ்லிம்கள் சிங்களவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றார்கள், இதன்காரணமாகவே அவர்கள் வர்த்தகத்தில் சிறந்துவிளங்குகின்றார்கள், சிங்கள பௌத்தர்களின் பணமே முஸ்லிம்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றது. (பொருளாதாரம் சார்ந்த சவால்)

· முஸ்லிம்கள் தமது பணத்தாலும் செல்வாக்கினாலும் சிங்கள அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கியிருக்கின்றார்கள், எனவே சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் சிங்கள பௌத்த எழுச்சியை ஒடுக்குவதற்கு அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள். (அரசியல் சார்ந்த சவால்)

· முஸ்லிம்களின் ஹலால் உணவு முறைமை, பெண்களின் ஹிஜாப் முறைமைகள் இந்த நாட்டின் பௌத்த கலாசாரத்தையும் பண்பாட்டினையும் சீர்குலைப்பதற்கு உரிய செயற்பாடுகளாகும், இந்த நாட்டுக்கு வருகின்ற வெளிநாட்டவர்கள் இந்த நாட்டை ஒரு பௌத்த நாடு என்று நோக்குவதை விடவும், முஸ்லிம் நாடு என்றே நோக்குகின்றார்கள் இது ஆபத்தானதாகும், (கலாசார பண்பாடு சார்ந்த சவால்)

இந்த ஐந்து விடயங்களை மையமாகவைத்து சாதாரண பாமர சிங்கள மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது நீண்டகாலமாக இடம்பெறும் செயற்பாடாகும். அனகாரிக தர்மபால காலம் முதல் இந்த விடயங்கள் பௌத்த உயர்மட்டங்களில் பேசப்பட்டு வந்தபோதிலும் இப்போது அவை தீவிரமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம்கள் ஞானசாரர் என்கின்ற ஒரு குற்றவாளியை நோக்கி தமது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கின்றார்கள், இதே சந்தர்ப்பத்தில் பேரினவாதிகள் சாதாரண பாமர மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை வேகமாக முடுக்கிவிட்டிருக்கின்றார்கள்.

bothu bodu

“ஞானசாரர் என்பது சிங்கள பேரினவாதத்தின் ஒரு அடையாளம் மாத்திரமே அவர் மூலதத்துவம் அல்ல” இதன் காரணமாக ஞாசராரை நோக்கிய எமது கவனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரை நோக்கிய சாதாரண சிங்கள பாமரமக்களின் கவனமும் அதிகரித்துக் கொண்டேசெல்லும். இந்த அடிப்படையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முஸ்லிம் மக்கள் “சிங்கள பௌத்த பேரினவாத மூலதத்துவங்களுக்கு எதிராகவே தங்களது கருத்துக்களை ஒழுங்கு நிலைப்படுத்த வேண்டுமே தவிர ஞானசாரர் போன்ற அடையாளங்களுக்கல்ல”.

இத்தகைய மூலதத்துவங்களின் மூலம் கருத்து ரீதியாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்களை ஒழுங்குபடுத்துவதும்; அதன் தொடரிலே முஸ்லிம் மக்களுக்கு எதிரான மக்கள் ஆணையொன்றை சிங்கள மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதும்; அதனைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களை சட்டரீதியாக இந்த தேசத்தில் இருந்து அப்புறப்படுத்தும் ஒரு நீண்ட முயற்சிக்கான மூலதத்துவங்களே இவையாகும் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதன் மூலம் உலக அரங்கிலும் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டிற்குரியவர்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள், என்னும் தோற்றப்பாட்டினை உருவாக்க முயல்வதையும் நாம் காணமுடியும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால்; இந்த நாட்டிலே சுதந்திரத்திற்கு மிகக் கிட்டிய காலம் முதல் பிரிபடாத ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் தமக்கான ஒரு அதிகாரப் பகிர்வையே வேண்டி நின்றார்கள்; ஆனால் ஒரு தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி தமிழ் மக்களைத் தள்ளிவிட்டது சிங்களப் பேரினவாதிகளேயாகும்; தமிழ் மக்களின் மிகப் பிரதான அம்சமாக இருந்த கல்வியின் மீது பாரிய நெருக்குதல்களை சிங்களப் பேரினவாதிகள் முன்னெடுத்தார்கள், இதன் விளைவாக தமது கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழ் இளைஞர்கள் தீவிரவாதம் குறித்துச் சிந்தித்தார்கள், அதனுடைய நீட்சியாகவே தனிநாட்டுக் கோரிக்கையே தீர்வு என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள், அவர்களை ஆயுத ரீதியாக அடக்கி, அந்த சமூகத்தை பல வருடங்கள் பின்தள்ளி ஈடுசெய்யமுடியாத இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி, சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகளாக அவர்களைக் காட்டி, அனுதாபத்திற்குரிய, இன்றும்கூட எழுந்து நிற்கமுடியாத சமூகமாக அவர்களை மாற்றியமைத்திருக்கின்றார்கள். இதுவே இங்கு கவனிக்கவேண்டிய கசப்பான உண்மையாகும். அதேபோன்று இப்போது முஸ்லிம் மக்களின் பிரதானமான அம்சமாக இருக்கின்ற வர்த்தகத்தை சிங்களப் பேரினவாதிகள் இலக்கு வைத்திருக்கின்றார்கள்; இதன் மூலம் முஸ்லிம் மக்களை வன்முறைப் போராட்டமொன்றை நோக்கித் தள்ளும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கருத்துரீதியான போராட்டம் ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டிருக்க முஸ்லிம்களை வன்முறையாளர்களாக மாற்றும் செயற்த்திட்டங்களும் கனகச்சித்தமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. பௌத்த பேரினவாதத்தின் உயர் மட்டங்களே இத்தகைய செயற்பாட்டிற்குப் பின்னால் இருக்கின்றன, எனவேதான் இந்த நாட்டின் அரசியல் உயர்மட்டங்களினால் கூட பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டும் சட்டம் ஒழுன்கினை அமுலாக்க முடியாமல் இருக்கின்றது.

சிங்களப் பேரினவாதம் என்கின்ற இருபக்கமும் கூர்மையான கத்தியை இலங்கை முஸ்லிம் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை முஸ்லிம் சமூகத்தின் சமயோசிதமான சிந்தனைகளும், வழிகாட்டுதல்களும், ஒழுங்கமைப்புமே தீர்மானிக்கப் போகின்றது.

  • அபூ அப்துல்லாஹ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s