பிரமாண்டமான ஆதரவு அலை: மகிந்தவின் பலம் குறையவில்லை

mahinda may dayகொழும்பு: நடந்து முடிந்த மே தின பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு பெருமளவில் மக்கள் கூடியது இலங்கை அரசியல் வட்டாரங்களில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி, புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. ஜனாதிபதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இருக்க, பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பணியாற்றுகிறார்.

இலங்கையின் மிகப்பெரிய இரு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாக இது பொதுவாக பார்க்கப்படுகின்றது. ஆனால், ஆளும் அதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒரு குழுவினரும் ஏனைய சில சிறு கட்சிகளும் சேர்ந்த நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக தம்மை கூறிக்கொண்டு செயற்படுகிறார்கள்.
இந்த கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டமே பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு அணியை தம்வசம் வைத்திருப்பதால், தாம் அரசியலில் முன்னணி சக்தியாக ஐக்கிய தேசிய கட்சியை மேலும் வளர்க்கலாம் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்துக்கு இது ஒரு அடி என்று கூறுகிறார் மூத்த பத்திரிகை ஆசிரியரான வீ. தனபாலசிங்கம். இந்த மே தினத்துக்காக கூட்டப்பட்ட கூட்டம் எந்த வகையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், மஹிந்த தலைமையில் உள்ள கட்சிக் குழு இன்னமும் முன்னணியில் இருக்கிறது, அது பலம் குறைந்துவிடவில்லை என்பதையே இந்தக் கூட்டம் காண்பிப்பதாக அவர் கூறுகிறார்.

கடந்த இரு வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடே மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு அதிகரிக்க காரணம் என்று கூறும் தனபாலசிங்கம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரை மைத்திரிபால ஆட்சியில் இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் தொடர்வதையே இந்த மக்கள் கூட்டம் காண்பிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தாலும், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் தென்னிலங்கையில் மிகவும் செல்வாக்கு மிக்கவராகவே அவர் அப்போதும் பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது இந்த மேதினக் கூட்டத்தை பார்க்கும் போது, அவரது செல்வாக்கு இன்னமும் அப்படியே இருக்கிறது அல்லது கூடியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுவதாக கூறுகிறார், கொழும்பில் இருந்து செயற்படும் ஒரு மூத்த இந்தியச் செய்தியாளர்.

mahinda may day

தற்போதைக்கு இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்குமானால், இந்த நிலவரத்தை அது நேரடியாகவே பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறுகிறார். ஆனாலும், இப்போதைக்கு அப்படியான தேர்தல் நடக்குமா என்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்த்தனவினால் 1978இல் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தேசியக் கட்சிகள் இரண்டும் சிங்கள வாக்குகளை பிரிக்க, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஆட்சியமைப்பது யார் என்பதை ஓரளவு தொடர்ச்சியாக முடிவு செய்து வந்தன.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு இராணுவம் வெற்றிபெற்றதை அடுத்து வந்த 2010 ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றிருந்தார். (அந்த தேர்தலில் சிறுபான்மைமக்களின், குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் அவருக்கு எதிராக அளிக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.)

ஆனாலும், கடந்த 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது கட்சியை சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார். அவரது வெற்றியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான சிறுபான்மை மக்களின் வாக்குகள் கணிசமான பங்களித்திருந்தன. ஆனால், தற்போதைய நிலைமை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக மாறிவிடுமோ என்று அச்சம் ஆளும் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் பார்க்கிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s