பத்கர்: ராமர் – சீதை குறித்து சமூக வலைத்தளத்தில் ஆட்சேபணக்குரிய கருத்து வெளியானதை அடுத்து, ஒரிஸா மாநிலத்தின் பத்கர் நகரில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.கலவரம் மற்றும் வன்முறையில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், பல இடங்களில் கொள்ளையடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அமைதியை ஏற்படுத்த, பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து, காவல் துறைத் தலைவர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோர் நகரில் முகாமிட்டுள்ளனர். சில இடங்களில் கொள்ளையடிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ள நிலையில், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
கலவரத்தைத் தொடர்ந்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கண்காணி்ப்பாளர் திலிப் குமார் தெரிவித்துள்ளார். அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளிகள் அடுத்த புதன்கிழை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.