பீஜிங்: வட அமெரிக்காவின் பொருளாதார உடன்படிக்கையான நஃப்டா வை மாற்றியமைக்க போவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்போவதாகவும், அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான செலவை 30 வீத இறக்குமதி வரி விதித்து மெக்சிக்கோவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, மெக்சிக்கோ நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் தனது அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி மெக்சிக்கோ காலடி எடுத்து வைத்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சீனா, தற்போது தென் அமெரிக்கா நாடுகளில் கால் பதிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக மெக்சிக்கோவில் பல மில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பனாமா கால்வாய்க்கு நிகராக புதிய மாற்று வழித்திட்டங்களையும் சீனா ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பசுபிக் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நோக்கில் நிக்கரகுவா நாட்டுடன் இணைந்து புதிய கால்வாய் ஒன்றை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டால் பனாமா கால்வாயில் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவுக்கு பாரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நிக்கரகுவாவின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்திருப்பதால், சீனாவின் யோசனைக்கு நிக்கரகுவாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், டொனால்ட் ட்ரம்பின் தவறான சில அணுகுமுறையால் சீனாவின் ஆதிக்கம் அமெரிக்காவின் தென் பகுதியில் மேலோங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.