கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் விவகாரமும் அதன் பின்னணியில் உள்ள தில்லு முள்ளுகளும்

zahira collegeகல்முனை: கடந்த 2013 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற வலயக் கல்வி அதிகாரி ஒருவருக்கும் பிரதி அதிபர் ஒருவருக்குமிடையிலான கை கலப்பின் பின்னர் கல்முனைக் கல்வி வலயத்தில் கடமையாற்றிய பி.எம்.எம். பதுர்தீன் கல்லூரியின் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பல சவால்களுக்கு மத்தியில் தனது கடமையினை முன்னெடுத்து பாடசாலையினை ஒரு சுமுகமான நிலைக்கு கொண்டு வந்திருந்தார். அத்துடன் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் கொழும்புக் கிளையின் உதவியுடன் பல்வேறு முன்றேற்ற செயற்பாடுகளை செயற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்நியமனத்தை எதிர்த்து மேற்படி கை கலப்பில் ஈடுபட்ட கல்வி வலய அதிகாரியினால் கல்வி வலய பணிப்பாளருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் தற்காலிக அதிபராகக் கடமையாற்றும் பி.எம்.எம். பதுர்தீன் மீண்டும் வலயக் கல்வித் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பழைய மாணவர் அதன் கொழும்புக் கிளை மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு என்பவற்றின் முயற்சியால் பி.எம். பதுர்தீனை தொடர்ச்சியாக அதிபராக வைத்திருக்கும் செயற்பாடுகளும் சம்பந்தப்பட்டவர்களுடனான சமரச பேச்சு வார்த்தைகளும் முடிவுற்றிருந்த நிலையில் பாடசாலயில் உள்ள ஒரு குழுவினரின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகக் கல்லூரி அதிபர் மீண்டும் வலய கல்விப் பணிமனையில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாடசாலையின் சுமுக நிலையை கருத்திற்கொண்டு பாடசாலை சமுகம் ஒரு நிரந்தர அதிபரை நியமிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் கல்வி உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும் ஒரு சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதில் பிரதானமாக இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை அதிபராக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை கல்வி நிருவாக சேவையில் சித்தி பெற்ற ஒரு சிலருடன் பேசப்பட்டு வருதாக அறியக்கிடைக்கின்றது.

இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த A.L.M. முக்தார் அவர்களை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக நியமிக்குமாறு பல்வேறு மட்டத்தில் இருந்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளைக்கு அழுத்தங்கள் கிடைத்து வருதாக அதன் முக்கிய உறுப்பினர் ஒருவரூடாக தகவல் கிடக்க பெற்றுள்ளது.

இவர் இப்பிரதேசத்தை பொறுத்த வரையில் கல்வித்துறையில் உயர் பதவிகள் வகித்த ஒருவர் என்பதுடன், பலரின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார். பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தும் ஒருவர் என்பதுடன் ஒரு சிறந்த நேர்மையான அதிகாரியும், சகல மட்ட ஊழியர்களை மதிக்கும் சிறந்த பண்புடையவராகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தை மெரைன் டிரைவ் இல் உள்ள ஒலிவ் கிட்சென் ரெஸ்டோரண்டில் இரவு 8.30 மணியளவில் கொழும்புக் கிளையின் முக்கிய சில உறுப்பினர்களை சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஒரு குழுவினர் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் மேற்படி நியாயங்களையும் முன்வைத்து ஏனைய பாடசாலை அமைப்புகளுடன் பேசி ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தமை ஊர்ஜிதப்படுத்பட்டுள்ளது.

கொழும்புக் கிளையின் சில முக்கிய உறுப்பினர்கள் இவ்வேண்டுகோலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் கல்லூரியின் பழைய அதிபர்களுடனும், பள்ளிவாயல் நிருவாகத்துடனும், ஏனைய சமுக அமைப்புக்களுடனும் கலந்து பேசி இது சம்பந்தமான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் இறங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த வருடம் பிரபல அறிவிப்பாளரும் சிறந்த அதிபருமான A.R.M. ஜிப்ரியை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக கொண்டுவர கொழும்புக் கிளையினர் எடுத்த முயற்சிகள் சில அரசியல் தலையீடுகளினால் தடைப்பட்டுப் போனது. அதனால் இம்முறையும் அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுக்கள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதனையும் கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது.

ஏனென்றால் பிரதேச பிரதி அமைச்சர் ஒருவரின் உறவினரும் இவ்வெற்றிடத்தைக் குறிவைத்துள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. இவரது தலைமையில் இயங்கும் ஐந்து ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவினரே அதிபரை விரட்டியடிக்கும் நோக்கத்தில் தொடர்ச்சியாக மன உளைச்சல் தரும் விதத்தில் செயற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவர் எப்படியாவது அதிபர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வேறு அரசியல் கட்சி தலைமையையும் இக்குழுவினர் அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடியதும் அம்பலமாகியுள்ளது.

மேலும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை வீடு தேடி சென்று சந்தித்து அவர்களின் ஆதரவையும் கோரி வருகின்றது. பிரதேச அரசியல் வாதியின் கச்சிதமான காய் நகர்த்தலும், அதிகாரிகளின் முனாபிக் தனத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பழைய மாணவர் சங்கத்தினை இவ்விடயத்தில் தனக்கெதிராக செயற்படாமல் இருப்பதற்கு பிரதேச வாதத்தினை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு அதிபர் கதிரையினை தனது ஓய்வு காலத்துக்கு முன்னர் அடைந்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றார்.

இப்பிரதேசத்தில் உள்ள பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பியதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு பாடசாலையில் எதுவித அக்கறையும் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒரு முன்னேற்றகரமான நிலையை நோக்கி பயணித்த எமது கல்முனை ஸாஹிராத் தாயின் எதிர்காலம்தான் என்ன?

மீண்டும் அழிவை நோக்கி தள்ளப்படும் ஒரு சமூகத்தின் சொத்து பாதிக்கப்படுவதற்கு யார் பொறுப்புக் கூறுவர்?

அக்கறை அற்றிருக்கும் பெற்றோரா?
மௌனம் சாதிக்கும் பழைய மாணவர்களா?
அழுத்தங்களுக்கு அடிபணியும் அதிகாரிகளா?
காய் நகர்த்தும் அரசியல் வாதிகளா?

அல்லது

சுய லாபங்களுக்காக கல்லூரிக்கு வரும் அதிபர்களை விரட்டி அடிக்கும் குழுவினரா?

சிந்தியுங்கள், விழித்தெழுங்கள்!!!

எமது ஸாஹிராத் தாயை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் ஒன்றிணையுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s