வரலாற்றுத் துரோகமிழைத்த அதாஉல்லாவின் அழைப்பை நிராகரிப்போம் – பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்

hareesஅம்பாரை: சரிந்து விழுந்த தனது அரசியல் கோட்டையை தூக்கி நிறுத்தவும் தான் முற்றாக இழந்த மக்கள் ஆதரவை மீண்டும் தேடிப்பிடித்துச் சேர்க்கவும் ‘வரலாற்றுத் தேவைக்காக ஒன்றுபடுவோம்’ என்று முஸ்லிம் அரசியலுக்கு வரலாற்றுத் தவறிழைத்த அதாஉல்லா மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இதைப் பார்க்கும் போது ஆடு நணைகிறது என்று ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா அண்மையில் ‘வரலாற்றுத் தேவைக்காக ஒன்றுபடுவோம்’ என ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் பேரியக்கமாக உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பை இல்லாதொழிக்கும் சதிகளையும் அதற்கான எதிர் அரசியலையும் கடந்த 15 வருடங்களாக செய்துவருகின்ற அதாஉல்லா, இன்று திடீரென்று ஞானம் பெற்ற ஒருவராக தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் வாரிசாகவும் அவர் வழியில் தான் அரசியல் செய்வதாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு நீலிக் கண்ணீர் வடித்து மக்கள் மன்றத்திற்கு வருவது ஒரு அரசியல் கபழிகரமே அன்றி வேறில்லை.

யார் இந்த அதாஉல்லா என்று மக்களுக்கு யாரும் புதிதாக விளக்கமளித்து தோலிருத்துக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. தனது அமைச்சர் கதிரை பறிபோகாதவாறு எந்த சமூக அக்கறைகளும் கரிசனைகளும் இல்லாமல் சுயநல அரசியலை மட்டும் இன்றுவரை முழுமையாக செய்துவரும் அதாஉல்லா, புதிதாக பெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் கொள்கைகளை ஏந்தியவராக அரசியல் பிழைப்பு நடத்த வந்திருக்கிறார். குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க நினைக்கும் அவரது அரசியல் தந்திரம் மக்களிடத்தில் எடுபடாது.

ஒரு அமைச்சராக இருந்தும் தனிக்கட்சியின் தலைவனாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் இதுவரை அதாஉல்லா செய்த எந்த செயற்பாடுகளிலும் மறைந்த பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களை முன்னிலைப்படுத்தி எதுவுமே செய்யாத நிலையில் இன்று தலைவர் விட்ட இடத்திலிருந்து தான் அரசியல் செய்வதாக கூறுவதற்கு அதாஉல்லாவுக்கு எந்த அருகாதையும் கிடையாது.

தான் கட்டிய கட்டிடங்களுக்கு வைக்கின்ற பெயராகக் கூட பெரும் தலைவரின் பெயரை வைக்காமல் அதாஉல்லா என்ற பெயரை மட்டுமே அலங்கரிக்கச் செய்த இவர் இன்று மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கு பெரும் தலைவரின் பெயரை அரங்கேற்றுவது பெரும் அரசியல் நாடகமும் பித்தலாட்டமுமாகும்.

கடந்த காலங்களுக்கெல்லாம் சென்று வரலாறு பேசி சமூக உரிமைகளையும் இழப்புகளையும் சொல்லி முஸ்லிம் சமூகத்தின் மீது தீராத அக்கறை வைத்தவராக இப்போது பேசுகின்ற அதாஉல்லா, தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது பெருந்தலைவர் வலியுறுத்திய கரையோர மாவட்டம் தொடர்பாக, முஸ்லிம் மாகாணம் அல்லது தென்கிழக்கு அலகு தொடர்பாக எதுவும் பேசாமலும் இதற்கான தீர்வுத் திட்ட யோசனைகள் பற்றி எங்குமே மூச்சு விடாதுமிருந்துவிட்டு, இன்று பெருந்தலைவரின் அரசியல் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக எப்படி வாய்கூசாது பொய் பேச முடியும்.

பேருவளை எரிந்த போதும், தம்புள்ள பள்ளி உடைக்கப்பட்ட போதும் என்ன பேசினார்? அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்? இப்படி கடந்த காலங்களில் எத்தனையோ சமூக பிரச்சினைகளும் பேரினவாத அடக்குமுறைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் வாய் மூடிய மௌனியாகவும் செவிகளை இறுக பொத்திய சுயநலவாதியாகவும் இருந்துவிட்டு இப்போது எரிகிற பொய்கைக்குள் நெருப்பு மூட்ட வந்திருக்கிறார்.

மேலும் பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரியக்கத்தை இந்த நாட்டிலுள்ள முழு முஸ்லிம் மக்களுக்குமான அரசியல் உரிமைக்காக உருவாக்கினார். அவருடைய காலத்தில் அதனை அவர் வெளிப்படையாகச் செய்தும் காட்டினார்.

இன்று அதாஉல்லா போன்றவர்களின் சுயநல அரசியலுக்காக இந்த பேரியக்கத்தை நாங்கள் பிரதேச வாதங்கள் என்ற வெற்றுக் கோஷத்தினால் ஒருபோதும் சிறுமைப்படுத்த முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் சிதைக்கப்படாமலும் துண்டாடப்படாமலும் அதன் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் வழிநடத்தி வருகிறார். இக்கட்சியின் தனித்துவமும் அரசியல் அடையாளமும் தேசிய அரசியலில் பலம் பெறுகின்ற வகையில் நாங்கள் எல்லோரும் அவரின் வழியில் இணைந்து செல்கிறோம்.

இவற்றுக்கப்பால் மக்கள் பலத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் மரம் முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் வேரூன்றி இருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக காலத்துக்கு காலம் சூழ்ச்சிகள் செய்கின்றவர்கள் ஏற்படுத்துகின்ற அர்த்தமற்ற குழப்பத்தினை வைத்து தான் குளிர்காய அதாஉல்லா முனைகிறார். இதற்கு எமது மக்கள் ஒருபோதும் வழிவிடமாட்டார்கள் அதாஉல்லாவின் அழைப்பை அவர்கள் நிராகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s