கல்முனையில் பாடசாலை மாணவர்கள் சிலர் ‘மாவா’வுக்கு அடிமை

அஸ்லம் எஸ்.மௌலானா

Kalmunaiகல்முனை: “கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் ‘மாவா’ எனப்படும் போதைவஸ்த்துக்கு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.

தேசிய ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பில் இன்று நடத்தப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி டொக்டர் கே.எல்.எம்.ரயீஸ் மேலும் தெரிவிக்கையில்;

“சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது மீறப்படுகின்றபோது, அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருப்பது குற்றமாகும். அந்த அடிப்படையிலேயே எமது கல்முனைப் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் சுத்தம், சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது. மனித நுகர்வுக்கு உதவாத உணவுப்பொருட்கள் விற்கப்படுவதையும் ஹோட்டல்கள், உணவகங்கள், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் அசுத்தமான நிலையில் இருப்பதையும் அதிகாரிகளான எம்மால் அனுமதிக்க முடியாது.

உங்களது ஹோட்டல்களை சோதனையிட வருகின்ற பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, சமாளிக்க முறைபடாதீர்கள். உங்கள் பக்கம் பிழையிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சரியாக இருந்தால் ஏன் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இலஞ்சம் வாங்குவது போலவே கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

நீங்கள் கொள்வனவு செய்கின்ற மரக்கறி வகைகளின் சுத்தத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில சந்தைகளில் மரக்கறிகள் கீழே போட்டு விற்கப்படுகின்றன. கால்நடைகளின் கழிவுகள், பொது மக்களின் பாதணிகள் கூட அந்த மரக்கறிகளில் பட்டு விடுகின்றன. இவ்வாறான வியாபாரிகளை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இது விடயத்தில் நீங்களும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளினால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் உங்கள் மீதே குற்றம் சுமத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

உணவுத் தயாரிப்பில் அஜினமோட்டோ சேர்ப்பதை முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். அது இன்னும் சட்டத்தால் தடை செய்யப்படாவிடினும் அதனால் உடலுக்கு கேடு என்பதை எல்லோரும் அறிவோம். சட்டம் அமுலானால் ஒவ்வொரு உணவுப்பண்டத்தையும் பொதி செய்து, அதிலுள்ள சேர்மானங்கள் தொடர்பிலான விபரங்களை குறித்துக்காட்டப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அஜினமோட்டோ பாவிக்காத ஹோட்டல்களில் அது சேர்க்கப்படவில்லை என்பதை பொது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களை நாடி நுகர்வோர் அதிகம் வர வாய்ப்புள்ளது.

அதேவேளை ஹோட்டல்களில் சிகரெட் புகைப்பதை முற்றாக தடை செய்ய வேண்டும். ஹோட்டல்களில் யாராவது சிகரெட் புகைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஹோட்டல் உரிமையாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் புகைத்தவர் பத்து ரூபாவோ ஐம்பது ரூபாவோ மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்று தண்டப்பணம் செலுத்த வேண்டியேற்படும்.

அத்துடன் சட்டவிரோத சிகரெட் விறபனையை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தொடர்பில் நாம் திடீர் சோதனைகளை மேற்கொள்வோம். பிடிபட்டால் அவர் எத்தகைய சமூக அந்தஸ்த்தில் இருந்தாலும் எம்மிடம் எந்த மன்னிப்பையும் எதிர்பார்க்க முடியாது. பகிரங்கமாக கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

விலை குறைந்த சட்ட விரோத சிகரெட் மூலமே இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். எமது கல்முனைப் பிரதேசத்தில் சில பாடசாலை மாணவர்கள் ‘மாவா’ எனப்படும் போதைவஸ்த்துக்கு அடிமையாகியுள்ளனர். சில தீய நபர்கள், மாணவர்களுக்கு இதனை இலவசமாக வழங்கி, தமது துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதற்கு அடிமையாகின்ற மாணவர்கள் தொடர்ந்தும் அவற்றை காசு கொடுத்து வாங்கி நுகர்கின்றனர். பெண் மாணவிகள் சிலர் கூட இப்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தகைய சமூக விரோத செயல்களை எவரும் அனுமதிக்கக் கூடாது. எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

அத்துடன் பானின் நிறையை ஹோட்டல் உரிமையாளர்கள் பேணி நடக்க வேண்டும். அதில் மோசடிகளுக்கு இடமளிக்கக்கூடாது. ஹோட்டல்களின் கழிவு நீரை பொது வடிகான்களுக்குள் விடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுற்றாடல் பாதுகாப்பில் அனைவரும் அக்கறை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் சுகாதார பிரிவு தலைமை அதிகாரி ஏ.எம்.அஹ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.முனவ்வர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s