டெல்லி: 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வியாழக்கிழமை (22) வெளியிடப்பட்டுள்ளன.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இந்திய வீரர்கள் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுகளை வென்றுள்ளனர்.
தனக்கு ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின் குறிப்பிடுகையில், ”சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களை தொடர்ந்து என் பெயர் இந்த விருதுக்கு அறிவிக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே” என்று தெரிவித்தார். இந்த விருதினை தன் குடும்பத்தினருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்த அஸ்வின், 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும், 336 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.