உணர்ச்சிபூர்வமாக கையாளுவதை விட அறிவுபூர்வமாக கையாள்வோம்..

srilanka– முஹம்மது மஸாஹிம்

தற்போது எமது தாய்நாட்டின் சமாதான சூழலை விரும்பாத சில சக்திகள், சில அரசியல் மற்றும் சுயலாப நோக்குடன் மறுபடியும் ஒரு அசாதாரண சூழலுக்குள் நாட்டையும் மக்களையும் தள்ளிவிட பிரயத்தனங்கள் மேற்கொள்வதையும், மற்றுமொரு இனக் கலவரத்துக்கான முஸ்தீபுகள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் படுவதையும் சமூக வலைத்தளங்கள், செய்தி இணையங்களில் பார்க்க முடிகின்றது.

இது தொடர்பில், இருதரப்பு இளைஞர்களும் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்களில் ஈடுபட்டுவருவதும் அது விரும்பத்தகாத அளவு வீரியம் பெற்று வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில், எவராவது சமூக அக்கரையுடனும் தொலைநோக்குடனும் “பொறுமையாக இருங்கள்..” என்று சொன்னாலும் அவரை பொது எதிரியாக்கி “பயந்தாங்கொள்ளி” என விமர்சிக்கவும் மாற்றுகருத்து உடையவர்மீது நிதானமிழந்து வசைமாரி பொழியவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரு நாலுபேர் ஆங்காங்கே எரிகிற நெருப்பை தூண்டிவிடும் கைங்கரியத்தில் இறங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

நாம் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிப்பதால், நடக்கப்போவது என்ன..?

பிரச்சனைகள் இன்னமும் இடியப்ப சிக்கல் ஆகி நமக்கு நாமே ஆப்பினை அடித்துக் கொள்ள அது உதவுமே தவிர உரிய தீர்வுக்கு அது இட்டுச் செல்லாது என்பதே உறுதி.
கடந்த காலங்களில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கோபங்கொண்டு நாங்கள் எடுத்த பல்வேறுபட்ட முடிவுகள் ஒவ்வொருவர் தனிவாழ்விலும் சரி, பொதுவாழ்விலும் சரி பல உயிர்களையும் உடைமைகளையும் இழக்க காரணமாக இருந்திருக்கின்றது என்பதை நமது கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால் புரியும்.

எனவேதான், “கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்” என நபீ (ஸல்) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) – நூல்கள் : புகாரீ, முஸ்லிம்)

சகல வழிகளிலும் மிகவும் சக்திவாய்ந்த போராட்டமாக வெடித்து, கடந்த 30 வருடங்களாக அரசுக்கு சவாலாக நீடித்த ஒரு இனத்துக்கான உரிமைப் போராட்டமும் கடைசியில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில், மீளமுடியா துயரத்திலும் துன்பத்திலும் பலகோடி உடமைகளையும் பெறுமதியான உயிர்களையும் இழந்து இன்னமும் போராடிக்கொண்டு அந்த மக்கள் அரசியல் மூலமே இதற்கு உண்மையானதும் நிரந்தரமானதுமான தீர்வு கிடைக்கவேண்டுமென எதிர்பார்த்து காத்திருக் கிறார்கள்.

இவைகள் எல்லாம் எம் கண் எதிரே கடந்துபோயும், இன்னமுமா நாம் எம்மை நசுக்குவதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கும் இரும்புக் கரங்களின் சதிகளை எந்த கோணத்திலிருந்து முறியடிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை..?

கலவரக் காரர்கள் எம் இனத்தை அழித்தொழிக்க பாரிய திட்டங்களை வகுக்கும்போது, அதனை செயற்படுத்த காரணங்கள் எம்மில் இருந்தே பிறக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்தே எம்மை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்த முடியுமோ அத்தகைய முயற்சிகளில் எல்லாம் வீணாக வம்பை விதைப்பார்கள்.

கடந்த காலங்களிலும், சும்மா அதுபாட்டுக்கு இருந்த பள்ளிவாயல்களுக்குள் பன்றி இறைச்சியை வீசியதோடு, அல்லாஹ் வுக்கு உருவ பொம்மை செய்து கேவலப்படுத்தி எம் உணர்வுகளை கொதிக்கச் செய்ததன் தொடர்ச்சியில்தான் ஒரு அளுத்கம களவரத்தினை உருவாக்கி ஒரு சில மணித்தியாலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்களையும், பெறுமதியான உயிர்களையும் தீக்கிரையாக்கி கொன்றும் குவித்தார்கள்.

இன்றும் அதேபோல் இலங்கை முஸ்லிம்களின் இதயம் போன்று உள்ள ஒரு பிரதான ஊரை நேரடியாகவே பெயர்சொல்லி வம்புக்கு இலுப்பதும், எமது தனியார் சட்டங்களுடனான முரண்பாடுகளை அரசுடன் கோர்த்துவிட்டு குளிர்காய நினைப்பதும், இன்னபிற விரும்பத்தகாத நடவடிக்கைகளை கிழக்கில் அரங்கேற்ற வக்காளத்து வாங்குவதும் சில சுயநலவாதிகளினதும் சில அரசியல்வாதிகளினதும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலில் உள்ளவை என்பதை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

துடிக்கின்ற இள ரத்தங்களை எப்படி ஒரு ஆவேசப் பேச்சினால், அளுத்கம கலவரத்திற்கு பக்கபலமாக தூண்டிவிட்டார்களோ – அதுபோன்ற வழிகளில் மறுபடியும் குழிவெட்டி எம்மை புதைக்க நினைப்பதையும் நாம் உண்ணிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு பிரச்சனைகள் கண்ணெதிரே வரும்போது மட்டும் கொதித்தெழும் நாம், பாதிக்கப்பட்டவர் யாரோ ஒருவர்தானே என்று பின்னர் மறந்து விடுகின்றோம். அதற்கான நிரந்தர தீர்வையோ, தீர்வை பெற்று தரவேண்டிய பொறுப்பிலிருப்பவர் மீது அழுத்தங்களையோ பிரயோகிப்பதை மறந்து விடுவதனால்தான் அவர்களும் “பாட்டும், டான்ஸ்” உம் என சமூக வலைத்தளங்களை வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இருக்கின்ற பிரச்சனைகளை ஊதி ஊதி பெரிதாக்கிக் கொண்டே போகாமல், எம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், பொறுப்பிலுள்ளவர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீக தலைவர்கள், சமூக அமைப்புக்கள், ஆரோக்கியமாக சிந்திக்கும் இளைஞர்கள் அனைவரும் கலந்துபேசி சிறந்த தீர்வுகளை எம் சமூகத்திற்கு வழங்கவும், உரிய உயர் மட்டங்களுக்கு அழுத்தங்களை கொடுக்கவும் முன்வரவேண்டும்.

அத்துடன் மற்றுமொரு இனக்கலவரம் ஏற்படுமிடத்து மறைமுகமாக அனுசரணை வழங்கும் இன்றைய வல்லரசு அதிபர்களும் யாருக்கு சாதகமான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள், அதனால் இழப்புகள் யாருக்கு அதிகமாக இருக்கும் என்பதையும் தூரநோக்கோடு சிந்தித்து இவ்வாறான சூழ்நிலைகளில் சமயோசிதமாக நமது இளைஞர்கள் கலவரங்களை தூண்டும் விதமான பதிவுகளை பகிர்ந்து கொள்வதையோ, அவைகளுக்கு விருப்பங்கள் இடுவதையோ தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் – இணைய குற்றவியல் நிபுணர்களால், உங்கள் ஒவ்வொருவரின் சமூக ஊடக நடவடிக்கைகளும், நீங்கள் உலகில் எங்கிருந்து பகிர்ந்து கொண்டாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் எம்மைப் போன்ற ஓரிருவரின் வீம்பு பேச்சால், முட்டாள்களுடனான தர்க்கங்களால் ஒரு சமூகமே இழப்புகளை சந்திக்க நாமே காரணமாகிவிட்டால் – அல்லாஹ்வும் நாளை அதற்காக கடுமையாக விசாரிப்பான்.
ஆம்.. நாம் வீரப் பரம்பரை என பறைசாட்டி அழிந்துபோவதை விட சிலநேரங்களில் எம் விவேகமான தீர்மாணங்களே எம் சந்ததியை வாழ வைக்கும். தேடிவந்து கழுத்தறுக்கும்போது எம் கைகள் ஓங்கட்டும் – அது சுய பாதுகாப்புக்கானது. ஆனால், நாமாகவே அவர்களை கூப்பிட்டு, அவர்களின் தூண்டிலில் மாட்டவேண்டாம்.

நாம் என்றும்போல எம்மீது நேசம்கொண்ட அப்பாவி சகோதர இன மக்களின் மனதில் விதைக்கப்படும் நஞ்சுகளை நமது அழகான உபதேசங்களால் அகற்றுவோம். உண்மையான இன ஐக்கியத்தை விரும்புபவர்களுடன் கைகோர்த்து சதிகளை ஒற்றுமையுடன் முறியடிப்போம்.
எனவே, இன்றைய தேவை பிரச்சனைகளை – உணர்ச்சிபூர்வமாக கையாளுவதை விட அறிவுபூர்வமாக கையாள்வதே ஆகும்.

“அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் – 8:30,46)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s