ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட முன்வரல் வேண்டும்!

inamullahமுஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு பின்னால் பல்கோண, பல்பரிமாண அரசியல் இராஜதந்திர பின்புலன்கள் இருக்கின்றன, அவற்றிற்கு முகம் கொடுக்கும், சாணக்கியம், திராணி, தகைமை எமது முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் இல்லை என்பது யதார்த்தம், பல கூறுகளாக பிளவுப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல், சமூகம் எதிர் கொள்ளும் சவால்களில் ஒரு பகுதியாக அன்றி தீர்வுகளின் அங்கமாக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

அமைச்சரவை, பாராளுமன்ற மட்டங்களில் கையாளப்பட வேண்டிய விவகாரங்கள் அந்தி சந்ததிகளுக்கு வந்து விடுகின்றன, சிவில் சன்மார்க்கத் தலைமைகள் அவர்களது அரசியல் பணியை செய்ய முடியாது, ஆனால் பக்கபலமாக மாத்திரமே இருக்கலாம், பிளவுப்பட்டுள்ள அரசியல் தலைமைகளை ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலை நோக்கி கட்டாயமாக நகர்த்த வேண்டிய கடப்பாடு அவற்றிற்கு இருக்கின்றது.

அடிப்படையில் கோளாறு உள்வீட்டில் இருக்க ஆத்திர அவசர எதிர்வினைகளால் நாம் அரசுடனும் ஏனைய பேரின சக்திகளுடனும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்கின்றோம், இருக்கின்ற பிரச்சினைகளுக்கு மேலால் இன்னும் பல பிரச்சினைகளை வளர்த்துக் கொள்கின்றோம்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் போன்ற சிவில் சன்மார்கத் தலைமைகள் நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து பல்வேறு சமகால விவகாரங்களையும் கையாள எடுக்கின்ற நடவடிக்கைகைகள் நம்பிக்கை தருகின்றன.

அழைப்புகள் விடுக்கப் பட்ட பொழுதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரம் தனிவழி செல்வதனையே விரும்புகின்றார்கள். சமூகத்தின் ஏனைய அங்கங்களை புறக்கணிப்பதும், அவைகளை நிராகரிப்பதும், காரசாரமாக விமர்சிப்பதும் ஆரோக்கியமான வழிமுறைகள் அல்ல.
இவ்வாறான ஒரு நிலையில் தான் அண்மையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தனிவழி செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்புகூற முடியாது என்பதனை உணர்த்தியுள்ளார்கள்.
என்றாலும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனிமைப் படுத்தப்படுவதனை தனிப்பட்ட முறையில் நானும் விரும்பவில்லை, வேகத்துடனும், ஆனால் விவேகத்துடன் அடிப்படையில் கோளாறுகள் நிறைந்த அரசியலில் அவர்களது ஆளணியும் தூய்மை வாதமும் இருக்கக் கூடாதா என்று பல சந்தர்ப்பங்களில் நான் யோசித்ததுண்டு.
சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் எல்லா மட்டங்களிலும் ஒருங்கிணைக்கின்ற பொறிமுறையாக தேசிய ஷூரா சபையை நாம் ஸத்ஸபித்த பொழுது இணைந்து கொள்ள மறுத்ததோடு என்னையும் சில முக்கியஸ்தர்களையும் பொது மேடைகளில் காரசாரமாக அவர்கள் விமர்சித்தார்கள், ஞான சாரா தேரரும் ஏக காலத்தில் பெயர் கூறி விமர்சித்தார்.
இந்த ஒரு தீர்க்கமான நெருக்கடியான கால கட்டத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் எமது உரிமைகள், இருப்பு, பாதுகாப்பு போன்ற பொதுவான விவகாரங்களில் நாம் இணக்கப் பாடுகளை எய்த முற்படல் வேண்டும்.
இந்த நாட்டில் இன்றைய தலைமுறை மாத்திரமன்றி எதிர்கால சந்ததிகளும் நிம்மதியாக வாழவேண்டும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இலக்கு வைக்கின்ற சர்வதேச பிராந்திய சக்திகளிடம் இருந்து சமூகத்தை மாத்திரமன்றி தேசத்தையும் பாதுகாக்கின்ற பாரிய பணி எம்முன்னுள்ளது.
முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் இணைந்து செயற்பட முடியாவிட்டாலும், புரிந்துணர்வுடன் செயற்பட முன்வரமாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை வேண்டுவதோடு அதற்கான அழுத்தத்தை வழிகாட்டளை வழங்குமாறு அதன் மூத்த இளம் உறுப்பினர்களையும் சமூகத்தின் ஏனைய அங்கங்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.
குறிப்பு: ஆலோசனைகள் தேவைப்படின் வழங்குவதற்கும் கலந்துரையாடுவதற்கும் நானும் கருத்தொற்றுமையுள்ள நண்பர்களும் தயாராகவே இருக்கின்றோம்.

உள்வீட்டில் பிரத்தியேகமாக கூட்டாக விரிவாக ஆராயப்பட வேண்டிய தனித்துவமான பல அரசியல் சமூக கலாசார பொருளாதார விடயங்கள் இருக்கின்றன.

அவ்வாறான பல்வேறு விவகாரங்கள் சந்திக்கு கொண்டுவரப்பட்டு இரண்டாவது மூன்றாவது தரப்புக்களின் தலையீடுகள் காரணமாக தீர்க்க முடியாத பிணைக்குகளாக மாறுவதற்கு எமது ஒற்றுமையின்மையே காரணமாகும், ஏனைய சமூகங்களை நாம் குறை கூறவே முடியாது.

குறிப்பிட்ட ஒரு பொதுவான சமூக விவகாரத்தை சமூகத்தின் அரசியல் தலைமைகள் எவ்வாறு கையாளுக்கின்றன, சன்மார்கத் தலைமைகள் எவ்வாறு அணுகுகின்றன, சிவில் தலைமைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை ஒருவருக்கொருவர் அறியாதிருப்பது போல் சமூகத்தின் சிந்தனைப் பள்ளிகளும் வெவ்வாறான நிலைப்பாடுகளை எடுத்து செயற்படுகின்றன.

இங்கு ஒரு தரப்பு மற்றொரு தரப்பிற்கு விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. எல்லோருமாக தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அவற்றை உரிய தரப்புக்கள் கூட்டுப் பொறுப்புடன் உரிய காலத்தில் செய்யத் தவறிவிடுவதால் தான் இடைவெளிகள் பிழையான தரப்புக்களால் நிரப்பப் படுகின்றன, நாம் வழமைபோல் காலம் கடந்து கைசேதப் படுகின்ற சமூகமாகவே இருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு சார்ந்த பல்வேறு விடயங்கள் விரிவாக துறைசார் நிபுணர்கள் துணையுடன் ஆராயப்பட்டு ஏகோபித்த நிலைப்பாடுகள் எய்தப்பட வேண்டியுள்ளன.

பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன.

பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன, அங்கு மதத்திற்கு மதம் பிடிக்கின்றது, வெறிபிடிக்கின்றது, அங்கு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமயோசிதம், உணர்வுகளை மதித்தல் மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க விழுமியங்கள் உயிர்வாழ்வதில்லை.

நாம் எமக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப ஆயிரம் நியாயங்கள் இருக்க வெவ்வேறு முகாம்களாக முரண்பட்டுக் கொள்வதற்கு ஒருசில நியாயங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக எனது மனம் சொல்லுகின்றது.

இவ்வாறு ஒரு காலத்தில் முரண்பாடுகளை பேச்சு எழுத்து மொழிகளில் வளர்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று துப்பாக்கி ரவைகளின் மொழியால் பேசிக் கொண்டிருப்பதனை உலகின் பல பாகங்களிலும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறான முரண்பாட்டு முகாம்களை உம்மத்தின் பொது எதிரிகள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பயன்படுத்தி வருவதனையும், அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளதனையும் நாம் காணுகின்றோம்.

அதிகம் பேசப்பட வேண்டிய தலைப்புக்கள், குறிப்பாக அடுத்து வரும் குத்பாக்களில்:

கூட்டுப் பொறுப்பு, சமூக ஐக்கியம், அடக்கி வாசித்தல், அடிமட்ட தலைமைத்துவ கட்டமைப்புகள், கட்டுக் கோப்பு, சகிப்புத் தன்மை, உஷார் மடையர்களை கட்டுப் படுத்தல், ஆக்ரோஷம் ஆவேசம் தவிரத்தல், அறிவு பூர்வமான கருத்தாடல், அவதானம், விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை, வருமுன் காத்தல், சட்டம் ஒழுங்கு , பாது காப்பு ஏற்பாடுகள், சமாதான சகவாழ்வு, ஊர் மட்ட ஆலோசனை ஷூரா சபைகள்.

ரஸுல் (ஸல்) அவர்களது மக்கா வாழ்வு ஹிஜ்ரத் மதீனா வாழ்வு செய்து கொண்ட உடன்பாடுகள், மக்கா வெற்றி அல்குர்ஆன் அருளப்பட்ட ஒழுங்கு என்பவற்றில் சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களிற்கு அழகிய முன்மாதிரிகளும் படிப்பினைகளும் இருக்கின்றன.

அன்பின் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

இலங்கை இஸ்லாமிய தஃவாக்களத்தில் உங்களிற்கென தனியான ஒரு இடத்தை நீங்கள் அடைந்துள்ளீர்கள், உங்களுடைய தீவிரமான சீர்திருத்தப் பணிகள் குறித்து பலரும் பல்வேறு கோணங்களில் விமர்சிப்பதனை நீங்கள் அறிவீர்கள், பொதுவாக குறைகளையே பேசி நிறைகளை மறந்துவிடுகின்ற ஒரு சமூகக் கட்டமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதனால் நாங்கள் ஒருவரை மற்றவர் மதிப்பதும் அங்கீகரிப்பதும் இல்லை, இணைக்கப் பாடுகளிற்குப் பதிலாக முரண்பாடுகளையே உள்வீட்டில் இஸ்லாத்தின் பெயரால் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம், குறிப்பாக எனது நிலைப்பாடுகளையும் அறிவீர்கள் எனவே அவை பற்றி இங்கே நான் பேசுவதற்கில்லை.

இஸ்லாமிய தஃவா களத்தைப் பொறுத்தவரை இலங்கையில் கருத்துவேறுபாடுகள் அணுகுமுறை வேறுபாடுகள் இருக்கின்றமை எல்லோரும் அறிந்த விடயமாகும், என்றாலும் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு, உரிமைகள் என்று வருகின்ற பொழுது வேறுபாடுகளிற்கு மத்தியிலும் எமக்குள் ஒரு புரிந்துணர்வும் இணைக்கப் பாடும் இருத்தல் வேண்டும் என்பது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமான எளிமையான உண்மையாகும்.

குறிப்பாக போருக்கு பின்னரான இலங்கையில் ஹலால் முதல் அளுத்கமை வரை சமூகம் எதிர்கொண்ட தென்னிலங்கை காழ்ப்ப்புணர்வு பிரச்சாரங்கள் வன்முறைகள் என்பவற்றிற்குப் பின்னால் இருந்த அரசியல் இராஜ தந்திர பின்புலங்கள் அவற்றின் பல்வகை பரிமாணங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு சமூகத் தலைமைகளை ஒன்றுகூட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டன, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றோடு தேசிய ஷூரா சபையும் பல்வேறு சிவில் சமூக முன்னெடுப்புக்களை மேற்கொண்டன.

தேசிய ஷூரா சபையின் உருவாக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு உங்களிற்கு அழைப்பு விடுக்கப் பட்ட பொழுது திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததோடு அதனை காரசாரமாக விமர்சித்தீர்கள், குறிப்பாக ஏக காலத்தில் பொதுபலசேனா என்னை இலக்கு வைத்து விமர்சித்த பொழுது நீங்களும் என்னையும் மற்றும் ஒருசில பிரபலங்களையும் பொதுக் கூட்டங்களில் விமர்சித்தீர்கள், தூற்றினீர்கள், காணொளிகள் இன்னும் வலைதளங்களில் இருக்கின்றன.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசோ அல்லது பிறநாட்டு சக்திகளோ கைவைப்பதில் சமூகத்தின் எந்தத் தலைமைக்கும் உடன் பாடுகள் இல்லை என்பதனை நீங்கள் அறிவீர்கள், தேசிய ஷூரா சபை, ஜம்மிய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் உற்பட ஏனைய எல்லா இஸ்லாமிய அமைப்புக்களும் அதே நிலைப்பாட்டில் இருந்தாலும் ஷரஆ சட்டங்களோடு முரண்படுகின்ற விடயங்கள், காதி நீதிமன்ற கட்டமைப்பு, நீதிபதிகளின் தகைமைகள், இஸ்லாத்திற்கு முரணான வழக்காறுகள், அநீதிகள் இடம் பெற முடியுமான ஓட்டைகள் என்பவை மீள்பரிசீலனை செய்யப் படுவதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டு உள்ளக கலந்துரையாடல்களை தீவிரப் படுத்தியுள்ளார்கள். நீங்களும் அதே நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றீர்கள் மாத்திரமன்றி உங்கள் முன்மொழிவுகளையும் தயாரித்துள்ளீர்கள்.

இவ்வாறு எல்லோரும் உடன்படுகின்ற ஒரு விடயத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிதானமாக செயற்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ஜனாநாயக வழிப் போராட்டம் செய்யும் உரிமை இருக்கின்றது, மறுப்பதற்கில்லை அவை மேற்கொள்ளப் படவும் வேண்டும், அதற்கு முன்னர் குறிப்பிட்ட விடயத்தில் சிறுபான்மை சமூகமான எங்கள் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் என்ன நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள், குறிப்பாக அரசியல் தலைமைகள் எவற்றை எவ்வாறு எப்போது செய்திருக்க வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளவோ ஆல்லது குறிப்பிட்ட தரப்புகளுடன் ஆலோசிக்கவோ முனையாமை மிகப் பெரிய தவறாகவே எனக்குத் தெரிகின்றது.

முந்திக் கொண்டு ஆர்பாட்டம் நீங்கள் செய்தீர்கள், அதற்கான உங்கள் தரப்பு நியாயங்களையும் முன்வைத்துள்ளீர்கள் என்றாலும் ஆக்ரோஷமான உங்கள் பேச்சுக்கள், வார்த்தைப் பிரயோகங்கள், குறுகிய மற்றும் நீண்டகால எதிர்வினைகளை, பின்விளைவுகளை வன்முறைகளை வரவழைப்பது போன்று அமைந்திருந்தமை தான் என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு இது தான் என சற்று உரத்த தொனியில் அழகிய வார்த்தைப் பிரயோகங்களில் சுருக்கமாக அழகாக நீங்கள் பேசியிருக்க வேண்டும்.

உங்களை சமூகத் தலைமைகள் நேரடியாக வந்து சந்தித்து கலந்துரையாடிய பொழுதும் நீங்கள் கிழக்கில் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளீர்கள், அதையும் கண்ணுற்றதன் பின்னரே நான் இந்த வரிகளை எழுத உத்தேசித்தேன்.

அன்பின் சகோதரர்களே, கோளாறு எங்கு இருக்கின்றது என்பதனை நாம் பார்க்க வேண்டும், ஹலால் முதல் அளுத்கமை வரை எமது சமூகம் எதிர்கொண்ட அத்தனை சவால்களிற்குப் பின்னாலும் அரசியல் இராஜதந்திர பின்புலங்கள் இருந்த நிலையிலும் எமது அரசியல் தலைமைகள் சராணாகதி நிலையில் இருந்தார்கள், இப்பொழுதும் அமைச்சரவை தீர்மாணம் அறிவிக்கப் படும் வரை அவர்கள் அமைதியாக இருந்திருக்கின்றார்கள், இன்று அவர்கள் செய்ய வேண்டிய வேலையை தான் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் செய்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் அவசரப்பட்டு தேசிய அரசையோ, ஏனைய பெரும்பான்மை இனவாத சக்திகளையோ, சர்வதேச சமூகத்தையோ, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கங்களையோ நாம் முரண்பாட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கொள்வது சமயோசிதமான சாணக்கியமான அறிவுபூர்வமான நடவடிக்கையாக நான் கருதவில்லை.

நீங்கள் தேசிய அரங்கிலோ, சமூகத் தளத்திலோ தனிமைப் படுவதனையோ, தனிமைப் படுத்தப் படுவதனையோ தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை, முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் இணைந்து செயற்பட முடியாவிட்டாலும், புரிந்துணர்வுடன் செயற்பட முன்வரமாறு உங்களை அன்போடு வேண்டிக் கொள்கின்றேன், அதற்கான அழுத்தத்தை வழிகாட்டளை வழங்குமாறு அதன் மூத்த இளம் உறுப்பினர்களையும் சமூகத்தின் ஏனைய அங்கங்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.

அன்பின் சகோதரன்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s