மொசூல்: மொசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை எதிர்த்து, கடும் போர் நடத்தி வருகின்ற ஈராக் சிறப்பு படைப்பிரிவுகள் மொசூல் புறநகர்ப் பகுதிகளில் நுழைந்துள்ளன. ஏவுகணை குண்டு தாக்குதல்கள், மோர்ட்டர் மற்றும் சிறிய ஆயுதக் குண்டு தாக்குதல்களோடு, தற்கொலை கார் குண்டு தாக்குதல்களையும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள்.
ஈராக் அரசப் படைப்பிரிவுகள் முன்னேறி செல்வதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், அமெரிக்க தலைமையிலான கூட்டணி படைப்பிரிவுகள் நான்கு அல்லது ஐந்து முறை கட்டிடங்களில் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
முன்னதாக, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை சரணடையச் சொல்லி போர் சீருடையில் தோன்றிய ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வலியுறுத்தினார். இல்லாவிட்டால் கொல்லப்படுவர் என்று எச்சரித்தார். ஈராக்கின் வட பகுதியிலுள்ள விமானத் தளத்தில் அபாதி பேசுகிறபோது, எல்லா கோணங்களில் இருந்தும் அரசப் படைப்பிரிவுகள் நெருங்கி வருதாகவும், ’’பாம்புகளின் தலைகள் வெட்டப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.