இனவாதிகளின் முகவர் நிலையமா, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி?

akpஅக்/ அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை)யில் உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக சேர்க்கப்பட்ட A H. அப்துழ்ழாஹ் என்னும் மாணவர் ஒருவர் முகத்தில் தாடி வைத்திருந்தார் என்ற காரணத்தினால் குறித்த பாடசாலையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.‘மாணவர்கள் தாடி வைத்திருப்பது ஒழுக்கக்கோவைக்கு முரணானது’ என்றும் ‘அதற்கான ஒழுக்காற்று நடவடிக்கையாகவே இவ்வாறு பாடசாலையில் இருந்தும் இம்மாணவர் நீக்கப்பட்டதாகவும்’ இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற முஸ்லிம் அதிபரும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவரின் தந்தையாகிய கிழக்கிலங்கையின் பிரபல இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகரும் உளவளத் துணையாளருமான மௌலவி அப்துல் ஹமீத் (ஷரயி) பாடசாலை நிருவாகத்தை தொடர்புகொண்டு ‘என்னுடைய மகன் இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு கடமையையே நிறைவேற்றியுள்ளார், இதனால் எந்தவொரு ஒழுக்க நெறியும் சீர்குலையப்போவதில்லை, அத்தோடு என்னுடைய மகனுக்கு முகத்தில் சவரம் செய்தால் அது ஒவ்வாமையை ஏற்படுத்தும்” என விளக்கிக் கூறியுள்ளார்.

இதனை செவிமடுத்த பாடசாலை அதிபர் “உங்களுடைய மகனுக்கு ஷேவிங் செய்தால் ஒவ்வாமை ஏற்படும் என்று மருத்துவ சான்றிதழுடன் வாருங்கள், பின்னர் அவரை நாங்கள் பாடசாலையில் மீளிணைக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து மாணவன் அப்துழ்ழாஹ்வுக்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதன்மூலம் குறித்த மாணவருக்கு முகத்தில் சவரம் செய்தால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது என்ற மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டு, அது வலயக் கல்வி பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டு, பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

akp

ஆயினும் அதையும் கணக்கெடுக்காமல் புறக்கணித்துள்ள பாடசாலை நிருவாகம் மாணவன் அப்துழ்ழாஹ்வை பாடசாலையில் இருந்தும் நீக்குவதிலேயே குறியாக இருந்துள்ளது.

ஏற்கனவே பிறிதொரு பாடசாலையில் ஆங்கில மொழிமூலத்தில் கல்வி கற்ற இம்மாணவன் மிகவும் திறமையான முறையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஒருவராவார். இவரை உயர்தர பரீட்சையில் தோற்றுவிப்பதற்காகவே பெற்றோர்கள் அக்/ அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சேர்த்துள்ளனர். ஆனாலும் பெயரப்பலகையில் மாத்திரம் “முஸ்லிம் கல்லூரி” என்ற மகுட வாசகத்தை சுமந்துள்ள இக்கல்லூரி ஒரு முஸ்லிமுடைய வெளிப்படையான அடையாளமாகிய தாடியை பேணுதலாக வைத்திருந்த மாணவனை, அதையே காரணமாக காண்பித்து பாடசாலையை விட்டும் நீக்கியிருப்பதானது இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் பாரிய வெறுப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் இம்மாணவர் பாடசாலையில் இருந்து நீக்கிய விடுகைப்பத்திரத்தில் (Leaving Certificate) குறித்த மாணவர் பாடசாலையில் சேர்க்கப்பட்டதை மறைக்கும் விதமாக அவ்விடுகைப்பத்திரத்தினை வடிவமைத்திருப்பது அப்பாடசாலை நிருவாகத்தினுடைய தெளிவான பித்தலாட்டத்தையும் வெளிக்காண்பித்துள்ளது.

ஏற்கனவே கடந்த வருடங்களில் நமதுநாட்டில் மாற்றுசமயப் பாடசாலைகளில் இஸ்லாமிய மார்க்க விழுமியங்களை பேணுகின்ற விடயத்தில் முஸ்லிம் மாணவர்கள் அனுபவித்த துன்பங்களையும் சவால்களையும் நாம் நன்கறிவோம்.

ஆயினும் அம்மாணவர்களுடைய விடாப்பிடியான போராட்டத்தாலும் இஸ்லாமிய சமூகத்தின் ஒருமித்த குரல்களாலும் அவை தோற்கடிக்கப்பட்டுப்போன வரலாறுகளையும் நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது ஒரு முஸ்லிம் பாடசாலை ஒன்றே இவ்வாறு முஸ்லிம் மாணவர்களுடைய மார்க்கரீதியான அடையாளத்திற்கும் வலியுறுத்தலுக்கும் சர்வாதிகாரத்தனமாக எதிர்ப்புக்கொடி காட்டி அதற்காக அம்மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது எந்தவகையில் நியாயமானது?

இஸ்லாமிய மாணவர்கள் தமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு கடமையினை நிறைவேற்றவதற்கு இஸ்லாமியப் பாடசாலைகளே தடையாக இருந்தால் அவர்கள் வேறு எங்கே சென்று தம்முடைய கடப்பாடுகளை நிறைவேற்றுவது?

மாத்திரமல்லாது இலங்கையிலுள்ள எந்தவொரு அரசாங்கப் பாடசாலைகளிலும் மாணவர்களுடைய சமய ரீதியான கடமைகளுக்கும், வழிபாடுகளுக்கும் தடை விதிக்கின்ற விதத்திலான ஒழுக்ககோவைகள் இக்காலவரைக்கும் கிடையாது.

மாற்றமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய சமயம், கலாச்சாரம் தொடர்பான சகல விடயங்களையும் நடைமுறைகளையும் பேணி நடக்கக்கூடிய விதத்திலான ஒழுக்கக்கோவைகளே அன்று தொட்டு இன்றுவரைக்கும் நடைமுறையில் இருந்துவருகின்றன.

மேற்படி அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஒழுக்கக்கோவையும் அதைத்தான் வலியுறுத்துகிறது.

அப்படியிருக்கும்போது ஒரு மாணவன் தாடி வைத்திருப்பது ஒழுக்ககோவைக்கு முரணானது என்று கூறி அம்மாணவனை ஒழுக்காற்று(?) நடவடிக்கை என்னும் பெயரால் பாடசாலையில் இருந்தும் நீக்கியிருப்பது சட்டத்திற்கு முரணானதோடு இந்நாட்டின் மத சுதந்திரத்தில் அத்துமீறக்கூடிய பாரதூரமான ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது.

இந்நாட்டில் அரசியல், கல்வி, விளையாட்டு போன்ற சகல துறைகளிலும் அடர்ந்த தாடியை முழுமையாக வைத்திருகின்ற எந்தனையோ தலைவர்கள் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் தாடியை வளர்ப்பதும் மழிப்பதும் ஒரு மனிதனுடைய தனிப்பட்ட சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தாடி என்னும் உடல் உறுப்பானது ஒருபோதும் எந்தவொரு இடத்திலும் காலத்திலும் மனிதர்களுடைய ஒழுக்க நெறிக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் முன்னால் முரண்பட்டு நின்ற வரலாறுகள் இல்லை.

எனவே தேசிய பாடசாலையாக தரமுயர்ந்து நிற்கின்ற, முஸ்லிம் அதிபர் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களால் நிருவகிக்கப்படுகின்ற முஸ்லிம் பாடசாலையொன்று ஒரு திறமையான மாணவனை “தாடி வைத்திருந்தார்” என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டு பாடசாலையை விட்டே நீக்கியிருப்பதானது அப்பட்டமான ஒரு அடிப்படை மனித உரிமை மீறலே அன்றி வேறில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s