மகா நடிகன் மஹிந்த: பலியாவார்களா முஸ்லிம்கள் ?

mahindaஇனவாதத்தை நம்பி அரசியல் அநாதையானவர்களுக்கு சிறந்த உதாரணம்தான் மஹிந்த ராஜபக்ஸ.சிறுபான்மை இன மக்களை ஒதுக்கி தனிச் சிங்கள வாக்குகளால் தனது அரசியல் வாழ்வை நிலை நிறுத்துவதற்காக எடுத்த முயற்சியில் படுதோல்வியடைந்து இப்போது துவண்டு போய்க் கிடக்கின்றார் அவர்.

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கின்றபோதிலும், இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இனங்களையும் அரவணைத்துக் கொண்டு-அனைத்து இனங்களையும் சமமாக நடத்திக் கொண்டு அரசியல் செய்தால்தான் அரசியலில் நீடிக்க முடியும் என்ற யதார்த்தத்தை மஹிந்த இப்போது உணர்ந்துள்ளார் என்றே தெரிகின்றது.அதனால்தான் அவர் சிறுபான்மை இன மக்களுள் ஒரு பிரிவான முஸ்லிம் மக்களை வளைத்துப் போடும் நடவடிக்கையில் இப்போது ஈடுபட்டுள்ளார்.

அவரது ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்குப் போன்று முஸ்லிம்களுக்கும் கொடுமை இழைத்திருந்ததை நாம் அறிவோம்.யுத்த வெற்றியால் கட்டி எழுப்பப்பட்ட அவரது ஆட்சி பின்னர் மெல்ல மெல்ல ஆட்டங்காணத் தொடங்கியதும் அதைச் சரி செய்வதற்கு மஹிந்த எடுத்த ஆயுதம்தான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்.

சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து கொண்டு சென்ற அவரது செல்வாக்கை இந்த இந்தவாத செயற்பாடுகளின் ஊடாகக் கட்டியெழுப்ப முடியும் என்று அவர் தப்புக்கு கனக்குப் போட்டார்.

இந்தியாவில் நரேந்திர மோடி பின்பற்றிய முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாட்டை ஒட்டிய செயற்பாட்டை மஹிந்த தேர்ந்தெடுத்தார்.அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் இனவாதக் குழுக்கள் போன்றே இங்கும் இனவாதக் குழுக்கள் உருவாகின.எந்தவித அடிப்படையும் இன்றி முஸ்லிம்களுக்கு எதிராக இந்தக் குழுக்கள் பிரச்சினைகளைக் கிளப்பின.

உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழில் இருந்து பிரச்சினைகள் தொடங்கப்பட்டன.அதை அடிப்படையாக வைத்துக் கொண்டே நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள்-தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மேலும் பல தலைப்புக்கள் பிரச்சாரத்துக்கு விடப்பட்டன.முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா மற்றும் புர்காவுக்கு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.சில இடங்களில் அபாயா அணிந்து சென்ற பெண்கள் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளாகினர்.

மாத்தறையில் அபாயா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகள் இனவாதிகளால் தாக்கப்பட்டனர்.அதேபோல்,வெலிக்கந்தையில் வைத்தும் ஒரு பெண் தாக்கப்பட்டார்.பஸ்களில் பெண்கள் தொல்லைகளுக்கு உள்ளாகினர்.பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவிகளின் ஆடைகளுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சில அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அபாயா அணிந்து செல்வதற்கு அங்குள்ள உயர் அதிகாரிகள் தடை விதித்தனர்.

இவ்வாறு அபாயா மற்றும் புர்கா எதிர்ப்புப் பிரசாரம் முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.இதனால் முஸ்லிம் பெண்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர்.

அடுத்ததாக பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் நாட்டில் உள்ள பல பள்ளிவாசல்கள் கல் வீச்சுக்கு இலக்காகின.புதிதாகக் கட்டப்படும் பள்ளிவாசல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலையும் அந்தப் பள்ளிவாசல் பலவந்தமாக மூடப்பட்டதையும் நாம் மறக்கவில்லை.

இதனால் முஸ்லிம்கள் தொழுவதற்காக பள்ளிவாசல்களுக்கு செல்வதற்கும் அஞ்சினர்.அதிலும்,இரவு நேரத் தொழுகைக்குச் செல்லாமல் எத்தனையோ முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுதனர்.

மதரஸாக்களில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுகின்றது என்று பிரசாரம் செய்யப்பட்டது;அவற்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.முஸ்லிம்களின் வர்த்தகத்தின்மீதும் குறி வைக்கப்பட்டது.முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடாது என்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களில் சிங்களவர்கள் தொழில்புரியக்கூடாது என்றும் பிரசாரம் செய்யப்பட்டது.

mahinda

பெஷன் பக் மற்றும் நோலிமிட் போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடை நிறுவனங்கள் தாக்கப்பட்டன.பெப்பிலியானவில் அமைந்துள்ள பெஷன் தாக்கப்பட்டதோடு மொரட்டுவை நோலிமிட் தீ வைக்கப்பட்டது.

இவ்வாறு மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதலை புள்ளிவிவரங்களுடன் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்தத் தாக்குதல்களின் உச்சக்கட்டமாகத்தான் அழுத்தகமை மற்றும் தர்கா நகர் கலவரம் இடம்பெற்றது.முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் வாகனங்களும் முற்றாக அழிக்கப்பட்டன.இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அந்தக் கலவரத்தையேனும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது மஹிந்தவும் கோட்டாவும் வெளிநாடுகளில் இருந்து நிலைமைகளைக் கண்காணித்தனர்.கண்காணித்தனர் என்பதைவிட கண்டு கழித்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இந்த இனவாத செயற்பாடுகள் அனைத்தையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது பல சேனா,சிங்கள ராவய மற்றும் ராவண பலய போன்ற அமைப்புகளுக்குப் பூரண அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரைக்கூட கட்டுப்படுத்தும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால்,இவற்றுள் ஒன்றையேனும் தடுத்து நிறுத்துவதற்கு மஹிந்த நடவடிக்கை எடுக்கவில்லை.முழு உலகமும் அறிந்த இந்த விடயம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று மஹிந்த கூறினார்.ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு இவை எதுவுமே தெரியாது என்பது நம்பக்கூடிய கதையா?முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் தடுப்பதில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இறுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாதம் மஹிந்தவின் ஆட்சிக்கு ஆப்பாய் அமைந்துவிட்டது.தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து மஹிந்தவை நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இப்போது உண்மையை உணர்ந்து மீண்டும் முஸ்லிம்களின் காலடிக்கு வருகின்றார் மஹிந்த.அப்போதும் அவர் செய்த அநியாயத்துக்கு வருந்தவோ அல்லது மன்னிப்புக் கேட்கவோ இல்லை.இது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

நான் எந்தவொரு தப்பையும் முஸ்லிம்களுக்குச் செய்யவில்லை என்று வெட்கமில்லாமல் கூறுகின்றார்.பத்ரமுல்லையில் அவரைச் சந்தித்துள்ள சில முஸ்லிம்களும் வெட்கமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

இவ்வளவு நடந்திருந்தும்கூட அவை எதுவுமே நடக்கவில்லை என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களின் ஆதரவைப் பெறத் துடிக்கும் மஹிந்த முஸ்லிம்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.குறிப்பாக,மஹிந்தவுக்கு கூஜாத் தூக்குகின்ற முஸ்லிம்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தனது அரசியல் லாபத்துக்காக-சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியலில் நிலைக்க முடியாது என்பதற்காக மஹிந்த மீண்டும் முஸ்லிம்களை வளைத்துப் போடப் பார்க்கின்றார்.முஸ்லிம்கள் இதற்கு ஒருபோதும் பலியாகமாட்டார்கள்;மகா நடிகன் மஹிந்தவின் நாடகத்தைப் பார்த்து மயங்குவதற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் இல்லை என்பதை மஹிந்தவும் அவரின் அழுக்கைக் கழுவும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

[ எம்.ஐ.முபாறக் ]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s