அனுதாபத்துடன் நினைவுகூர்ந்து பிரார்த்திக்கின்றோம்

hasarath abdullah falahஉஸ்தாதுனா மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்மத் அப்துல்லாஹ் (றஹ்மானீ) அவர்கள் தென்னிந்தியாவின் தமிழ்நாடு – தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம் பட்டினத்தில் 21.03.1932இல் பிறந்தார்கள். இவர்களின் தந்தை அல்லாமா அல்ஹாஜ் அபூபக்கர் ஆலிம் ஆவார்கள். இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் இலங்கையின் அட்டாளைச்சேனையில் உள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்கள். இவர்களின் பாட்டனார் அல்லாமா ஷைகு அப்துல் காதிர் ஹஸ்ரத் அவர்களாவர்.

இவர்கள் பிரபலமான முஹிம்மாதுல் முதஅல்லிமீன், அஹ்ஸனுல் மவாஇழ், மஜ்மூஉல் கவாஇத் போன்ற அநேக அறபு நூற்களை எழுதியுள்ளார்கள். கொழும்பு மாநகரில்; இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்களுடன் கம்பீரமாகக் காட்சி தரும் ஜாமிஉல் அழ்பர் சம்மாங்கோட்டுப் பள்ளிவாயலைக் கட்டுவதற்கு நிலம் கொடுத்துதவி பலத்த பிரயாசையுடன் அதனைக் கட்டி முடித்தவர்கள் இவர்களே. இதனாலேயே இன்றுவரை இப்பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் பதவியை இவர்களின் குடும்பத்தினர் வகித்து வருகின்றனர். சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அவர்களே தற்போது இப்பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளராக இருக்கிறார்கள்.

ஷைகுல்பலாஹ் அவர்கள் தமது சொந்த ஊராகிய அதிராம் பட்டினத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்கள். பின்னர் இஸ்லாமிய மார்க்க கல்வியை அவ்வூரிலுள்ள அல்மத்றஸதுர் ரஹ்மானிய்யா உயர் கல்லூரியில் பயின்று 01.04.1954ல் மௌலவிப்பட்டம் பெற்றார்கள்.

03.05.1958ல் தமது தந்தையாருடன் இலங்கைக்கு வந்து சிறிது காலம் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்கள். பின்னர் அல்லாஹ்வின் பேருதவியாலும் ஜாமிஆ இயக்குனர்களின் முயற்சியாலும்; 13.10.1959ல் ஜாமிஅதுல் பலாஹ்வுக்கு பணியாற்ற வருகை தந்தார்கள். ஒரு வருட காலம் இங்கு உப அதிபராகக் பணியாற்றிய இவர்கள் பின்னர் இதன் அதிபர் பொறுப்பை ஏற்றார்கள். அன்றுமுதல் இன்றுவரை சுமார் 57 வருடங்களாக அதன் அதிபராயிருந்து அளப்பரிய கல்விச்சேவை செய்துள்ளார்கள். ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியிலிருந்து இதுவரை 405 உலமாக்களும் 400 ஹாபிழ்களும் இவர்களிடம் கற்று வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் காழி நீதிபதிகளாக, உயரதிகாரிகளாக, இமாம்களாக, கதீப்மாராக, அறபுக்கல்லூரி அதிபர்களாக, முதர்ரிஸீன்களாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக, அரச பாடசாலை அதிபர்களாக, ஆசிரியர்களாக, சமாதான நீதிவான்களாக மற்றும் சமூக சேவையாளர்களாக புரியும் சேவைகள் அனைத்துக்கும் அத்திவாரமாகத் திகழ்பவர்கள் உஸ்தாதுனா ஷைய்குல் பலாஹ் அவர்களே!

ஷைய்குல் பலாஹ் அன்னவர்கள் சாமானியமானதொரு தனிமனிதரல்லர். அவர்கள் தனித்துவமிக்கதோர் தலைவர். ஆத்மீக வழிகாட்டியான மனிதப்புனிதர். அவர்கள் காத்தமாநகருக்குக் காலடியெடுத்து வைத்த அந்தநாள் முதல் இன்றுவரை தம் வாழ்வை மார்க்கத்தின் மறுமலர்ச்சிக்காகவும், சமூக எழுச்சிக்காகவும் செலவிட்ட தியாகச்செம்மல். தானுண்டு தன்பாடுண்டு என்று சுயநலமாகச் செயற்படும் தலைமைகள் நிறைந்திருக்கும் இப்பாரில் முற்றிலும் வித்தியாசமாக தானுண்டு தனக்கொரு பொறுப்புண்டு இவ்வூரின் தன் உடன்பிறவா சொந்தங்களுக்கு தான் செய்யவேண்டிய கடமையுண்டு என மார்க்கத்திற்காகவும் இவ்;வூருக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த மணிவிளக்கு.

இவ்வுலகச் செல்வமும் ஆடம்பர வாழ்வும் தன் காலடி தேடிவந்தும் கூட, அவற்றை ஏறெடுத்தும் பார்க்காது, தனக்கென தன் குடும்பத்துக்கென எதுவுமே சேர்த்து வைக்காது கலீபா அபூபக்கர்(றழி) அவர்களின் பாணியில் எனக்கு அல்லாஹ்வும் றஸூலும் போதும் என்று வாழ்ந்த மாமனிதர்.

அவர்கள் தமது சேவையை மார்க்கக் கல்வியோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக இவ்வூரையும் ஊர்மக்களையும் தன்னிரு கண்விழிகளை விடவும் பெரிதாக நேசித்தார்கள். தம்மை இவ்வூர் மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார்கள். இவ்வூர் மக்களுக்காக அவர்கள் ஆற்றியுள்ள சமூக சேவைகளில் ஒரு சிலவற்றையாவது நம் இளைய தலைமுறைகளுக்காக நினைவூட்ட விரும்புகின்றோம்.

• ஜாமிஅதுல் பலாஹ் எனும் உயர் மார்க்கக் கலாபீடம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பிரபலமும் புகழும் பெறுவதற்கு வழிசமைத்த பெருந்;தகை.

• காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா உத்வேகத்துடன் செயற்பட்டு இலங்கை முழுவதிலும் பலமிக்க ஒரு நிறுவனமாக விளங்குவதற்கு அதன் ஆலோசகராக வழிகாட்டியாக நின்று நெறிப்படுத்திய பேரறிஞர்.

• ஊரின் பல்வேறு விவகாரங்களை நிர்வகிப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தை அஷ்ஷஹீத் ஏ. அஹ்மது லெப்பை போன்ற தலைவர்களுடன் இணைந்து உருவாக்கியமை.

• சமூகத்தின் வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு உருவான-இன்றுவரை பல்லாயிரம் குடும்பங்கள் பயன்பெற்றுவரும் கூட்டு ஸகாத் முறையை அறிமுகப்படுத்தியது ஷைகுல் பலாஹ் அவர்களே.

• அவ்வாறே ஊர்மக்கள் அனைவரும் பயன்பெறும் பொருட்டு கூட்டு உழ்ஹிய்யா முறையையும் அவர்களே ஆரம்பித்து வைத்தார்கள்.

• இவ்வூர் சிறார்களை குர்ஆன், தீனிய்யாத் கல்வியில் தேர்ச்சியுள்ளவர்களாக தரப்படுத்தும் நோக்கில் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சபையை உருவாக்கி அதன் தலைவராக ஷைகுல் பலாஹ் அவர்களே செயற்பட்டு வந்தார்கள். இச்சபை நடத்தும் பரீட்சையில் வருடாந்தம் சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

• அல்குர்ஆனைத் திருத்தமாக ஓதப்பயிற்சியளிக்கும் நோக்கில் தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சிக்கலாசாலையை ஸ்தாபிக்க காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

• தப்லீக் பணி இவ்வூரில் வேரூன்றுவதற்கு காரணமாக இருந்து பல்லாயிரம் மக்களின் ஹிதாயத்துக்கு வழிசமைத்தவர்கள்.

• முஸ்லிம்-தமிழ் மக்களிடையே இன நல்லுறவை மேம்படுத்த பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்ட புனிதர்.

• பயங்கரவாத மேகம் சூழ்ந்திருந்த 1988-2008 காலப்பகுதியில் பயங்கரவாதிகள் காத்தான்குடியைத் தாக்க முடிவுசெய்து ஆயுதமுனையில் அனைவரையும் விரட்டியடிக்கத்திட்டம் தீட்டியபோது, தம்முயிரைத் துச்சமாக மதித்து பயங்கரவாதக் கோட்டைக்குள் சமாதானக் கொடியேந்திச் சென்று, பேச்சுவாத்தை நடாத்தி இவ்வூரை மீட்டுத் தந்தவர்கள். அக்காலப்பகுதியில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் முன்னின்று தீர்த்துவைத்து, நம்மூரின் சரித்திர நாயகர்களுக்குத் தலைமை வகித்த செம்மல். இவ்வூர் மக்களுக்காக அல்லாஹ்விடம் கண்ணீர் வடித்து அழுது தொழுது பிரார்த்தித்த மாமனிதர் செய்குல் பலாஹ் அவர்கள்.

– ஜம்மிய்யத்துல் உலமா காத்தான்குடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s