வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா? தமிழர்களின் சம்மதமின்றி தீர்வு சாத்தியப்படுமா? இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன?

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

iqbal-sainthamaruthuஇனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வில் முஸ்லிம் மக்களுக்குரிய தீர்வு என்ன என்ற தெளிவான ஓர் தீர்வுத்திட்டம் இதுவரையில் எட்டப்படாமல் உள்ளது. வடக்கும், கிழக்கும் இணைக்கபட வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில், முஸ்லிம் மக்களுக்கு எப்படியான நிலைப்பாட்டின் மூலம் அதிக நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்று விவாதிப்பதே பொருத்தமானது.

வடக்கும் கிழக்கும் நிபந்தனையின் பேரில் இணைக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்ற அதேவேளை, அவை இணைக்கப்படக்கூடாது என்றும் அப்படி இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்து அரசியல் தனித்துவம் பலமிளக்கப்பட்டுவிடும் என்பதனால் கிழக்கு மாகாணம் வடக்குடன் சேராது தனியாக பிரிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் ஏகபோக அரசியல் உரிமையுடன் வாழ்வார்கள் என்று இன்னுமொரு பிரிவனர் விவாதிக்கின்றார்கள்.

தற்போது கிழக்குமாகான சபையை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்வதனால் முஸ்லிம்களின் அதிகாரத்தின் கீழ் கிழக்கு மாகாணம் உள்ளது என்ற தோற்றப்பாட்டின் காரணத்தினாலேயே இம்மாகாணம் தனியாக இருக்கவேண்டும் என்று கூறுபவர்களின் நிலைப்பாடாகும். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் பங்குதாரராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முட்டுக்கொடுக்காவிட்டால் முஸ்லிம் காங்கிரசினால் ஆட்சி செய்ய முடியாது என்பதனை இவர்கள் கணிக்க தவறியுள்ளார்கள்.

இவ்விரு மாகாணங்களின் இப்போது இருக்கின்ற பிரதேச நிருவாக எல்லைகளை இறைவேதம் போன்று, மாற்ற முடியாத எல்லைகளாக கருதும்போதுதான் இவ்வாறான விவாதங்கள் எம்மத்தியில் எழுகின்றது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகானசபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு தனித்தனியாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டபோது முஸ்லிம் மக்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி இருக்கவில்லை.
அதனால் இந்நாட்டில் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் சம்மதமின்றி இரவோடு இரவாக இவ்விரு மாகானங்களும் இணைக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. முஸ்லிம் மக்களின் ஏகபிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அதனால் முஸ்லிம் காங்கிரசின் சம்மதமின்றி எந்தவொரு தீர்வு திட்டத்தினையும் நிறைவேற்ற முடியாது. அதேவேளை தமிழர்களின் ஏகபிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒப்புதல் இன்றி எந்தவொரு தீர்வுக்கும் வந்துவிடவும் முடியாது.

இணைந்திருந்த இரு மாகானங்களும் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 2007 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதுடன், கிழக்குமாகாணத்தில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிரதேசங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டது. அதன்பின்பு 2008 இல் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் தனியாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பிள்ளயான் அவர்கள் முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டார்.

இங்கே கேள்வி என்னவென்றால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக சனத்தொகயினராக இருந்தும் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் பிரதிநிதியால் ஏன் வரமுடியவில்லை? அதுவும் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகானசபை தேர்தல் என்பதனாலும், அங்கு முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற மாகாணம் என்பதனாலும் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்று உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச சமூகத்தினர்களும் எதிர்பார்த்திருந்தார்கள்.

அவ்வாறு வரலாற்று முக்கியத்துவமிக்க முதலாவது கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்குரியது என்று மார்தட்டி உரிமை கொண்டாடி இருக்கலாம். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு அரசியல் உரிமையும் உறுதிப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணம் எங்களுக்குரியது என்று எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்?

இணைந்த வடகிழக்கு மாகாணம் என்ற அடிப்படையில்தான் தமிழர் தரப்பினர் இறுதித்தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு சம்மதிபார்கள். இவ்விரு மாகானங்களின் இணைப்புக்கு சம்மதிக்காவிட்டால் இனபிரச்சினைகான தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்படும் போதுதான் முஸ்லிம்களுக்கும் அது வழங்கப்படும். தமிழர்களுக்குரிய அரசியல் உரிமையினை வழங்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் மிகவும் ஆர்வமாக இருக்கின்ற அதேவேளை இலங்கை அரசுக்கு பலவித அழுத்தங்களையும் வழங்கி வருகின்றது.

இன்நிலையில் வடக்குடன் கிழக்குமாகாணம் இணையக்கூடாது என்று அர்த்தமில்லாது வெற்றுக்கோசமிடுவதில் எந்தவித பிரயோசனமுமில்லை. இதனை ஊகித்துத்தான் நிபந்தனையுடனயே வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்று மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கூறியிருந்தார்.

இங்கே நிபந்தனை என்பது இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தினை மையமாகவைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களையும், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர், கிண்ணியா, புல்மோட்டை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களையும், மற்றும் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையினை மையமாகவைத்து அங்குள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அவைகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்து தனியான நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்று அமைக்கப்படுவதே முஸ்லிம் மக்களுக்கான ஆகக்குறைந்த அரசியல் தீர்வாகும்.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தினை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஊவா மாகாணத்தின் சில சிங்கள பிரதேசங்கள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட சிங்கள கிராமங்களை மீண்டும் ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாது வடகிழக்கு மாகாணத்தின் எல்லைகள் மீல்நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.

முஸ்லிம் மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, தமிழீழத்தில் வாழுகின்ற முஸ்லிம்களின் உரிமைகளை தமிழீழ அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் வடகிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம் மக்களின் உரிமையினை சிங்கள அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதுவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s