இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே!

mahinda maithiri nimalஅரசியலில் செல்வாக்கு என்பது எப்போது எழும்,எப்போது கவிழும் என்று சொல்ல முடியாது.மிகப் பெரிய அபிவிருத்திப் பணிகளை செய்த அரசியல்வாதிகள்கூட செல்வாக்கை இழந்துவிடுவர்.குறிப்பிடத்தக்க அளவில் சேவைகள் செய்யாதவர்கள்கூட திடீரென செல்வாக்கை அடைந்துவிடுவர். தேர்தலில் வெற்றி பெறுவது செய்த சேவையை அடிப்படையாக வைத்து அல்ல.தேர்தல் களத்தில் வகுக்கப்படும் வியூகம்தான் வெற்றியைத் தீர்மானிக்கின்றது இந்த நாட்டின் பல அரசியல் நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த அபிவிருத்திப் பணிகளை விரல்விட்டுக்கூட என்ன முடியாது.ஆனால்,தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்குத்தான் உண்டு. அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா போன்றோர் அவர்களின் அரசியல் எதிரிகளான முஸ்லிம் காங்கிரஸ்காரர்களை விட சேவையில் கெட்டிக்காரர்கள்.இவர்கள் செய்துள்ள அபிவிருத்திப் பணிகள் சில என்றென்றும் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு நிலைத்து நிற்கக்கூடியவை.ஆனால்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் தோல்வியடைந்துவிட்டனர்.

அதேபோல்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலையும்.சிங்கள மக்களின் பக்கம் இருந்து பார்க்கும்போது மஹிந்த இந்த நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியது.ஆனால்,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரைத் தோற்கடித்துவிட்டனர்.

அரசியலில் இது சிக்கலான விடயம்.தான் செய்த அபிவிருத்திப் பணிகளை வைத்து-அவற்றைத் துருப்புச் சீட்டாகக் கொண்டு தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது;அரசியல் செல்வாக்கை அதிகரிக்க முடியாது.அந்த நேரத்தில் தோன்றுகின்ற அரசியல் நிலைமைக்கு ஏற்ப மக்களின் பக்கம் நின்று தீர்மானங்களை எடுத்தால் மாத்திரமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும்.

குறிப்பாக,அரசியலில் தனி நபருக்கான செல்வாக்கை விட கட்சிக்கான செல்வாக்குதான் அதிகம்.பிரபல்யமிக்க கட்சியாக இருந்தால் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவரால்கூட வென்றுவிடலாம்.அதேபோல்,பிரபல்யமிக்க கட்சியில் இருந்த ஒருவர் தனித்தோ அல்லது வெறுகட்சியில் இணைந்தோ போட்டியிட்டால் தோல்விடைந்துவிடுகிறார்.

முதலில் கட்சி.அதன்பிறகுதான் தனி நபர் என்ற நிலைப்பாட்டில் இந்த நாட்டு இருப்பதைக் காணலாம்.அந்த வகையில்,எவ்வளவு பிரபல்யமிக்க ஒருவராக இருந்தாலும் பிரபல்யமிக்க கட்சி ஒன்றில் இருந்தால் மாத்திரமே அவரது அரசியல் செல்வாக்கைத் தக்க வைக்க முடியும் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.அப்படியான ஒருவராக நாம் இப்போது மஹிந்த ராஜபக்ஸவைப் பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின் அவர் அரசியலில் இருந்து ஒதுங்காமல் பிரதமர் பதவியைக் குறி வைத்து நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தார்.

ஆனால்,நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வட்டத்துக்குள் அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டார்.இதனால் அவரது முழு அரசியல் செல்வாக்கும் இழக்கப்படும் அபாயத்தை உணர்ந்த மஹிந்த வேறு மார்க்கத்தின் ஊடாக அந்த செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்வது பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.அந்தச் சிந்தனையின் விளைவாக உதித்ததுதான் புதிய கட்சி உருவாக்கம் என்ற திட்டம்.

2015 ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் அப்படியே இருக்கின்றன என்று தப்புக் கனக்குப் போட்டுள்ள மஹிந்த புதிய கட்சி ஒன்றின் ஊடாக அந்த வாக்குகள் அனைத்தையும் பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறார்.

இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் இருக்கின்ற வாக்கு வங்கிகள் அந்த கட்சிகளுக்கே உரித்தானவையாகும்.அவை அந்த காட்சிகளில் உள்ள தனி நபர்களுக்கு உரித்தானவை அல்ல.அந்த தனி நபர்கள் கட்சியை விட்டுச் சென்றாலும் அந்த வாக்கு வங்கிகள் அப்படியே இருக்கும்.

ஆனால்,மஹிந்தவோ 2015 ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் அத்தனையும் அவருக்கே உரித்தானவை என்று நினைக்கின்றார்.அது உண்மையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த தரப்புக்கே அத்தனை வாக்குகளும் சென்றிருக்க வேண்டும்.மைத்திரி தரப்பு தோல்வியடைந்திருக்க வேண்டும்.மஹிந்த தனித்துக் களமிறங்கி இருந்தால் இந்த உண்மை இன்னும் ஆழமாக விளங்கி இருக்கும்.

சில நேரங்களில் அரசியல் செல்வாக்குத் தானாகத் தேடி வரும்.சில நேரங்களில் வியூகங்களை வகுத்துத்தான் செல்வாக்கைப் பெற வேண்டும்.அவ்வாறு தானாகத் தேடி வரும் செல்வாக்கை மட்டுமே அடைந்துகொள்ளத் தெரிந்தவர்தான் மஹிந்த.

அவ்வாறு தானாகத் வந்த தேடி செல்வாக்குதான் யுத்த வெற்றி.அந்த வெற்றி மங்கியபோது புதிய செல்வாக்கை திரட்டுவதற்கு வியூகம் வகுக்கத் தெரியாததால்தான் இருந்த செல்வாக்கையும் இழந்தார் மஹிந்த.அவர் அடைந்த செல்வாக்கை மீண்டும் அடைவதாக இருந்தால் அவர் இருக்க வேண்டிய இடம் சுதந்திரக் கட்சிதான்.புதிய கட்சி அல்ல.

கட்சியை விட்டுத் தள்ளி நிற்காமல் கட்சிக்குள்ளேயே இருந்து தலைமைத்துவப் பதவிக்காகப் போட்டியிடும்போது கால ஓட்டத்தில் அவருக்கு அந்தப் பதவி கிடைக்கக்கூடும்.அதை வைத்துக் கொண்டு அவர் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைய முடியும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்து நீங்கும்போது மைத்திரியும் மஹிந்தவும் சம அந்தஸ்தை அடைவர்.அப்போது காணப்படுகின்ற உறுப்பினர்களின் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு மஹிந்தவுக்கு கட்சியின் தலைமைத்துவப் பதவி கிடைக்கக்கூடும்.

மஹிந்த கட்சிக்குள் இருந்துகொண்டு தூரநோக்குடன் காய் நகர்த்தினால் மாத்திரம்தான் இது சாத்தியப்படும்.அப்படி இல்லாது இப்போதே சுதந்திரக் கட்சிக்குத் தலைவராக வேண்டும்;இப்போதே ஜனாதிபதியாக வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவது அவரை அரசியலில் இருந்து காணாமல் செய்துவிடும்.

அரசியலில் அவரவருக்கு என்று ஓர் இடமுண்டு.யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே.

[ எம்.ஐ.முபாறக் ]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s