உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்படுவது ஏன் ?

mahinda maithiri nimalகொழும்பு: ஜனாதிபதி என்ற நாட்டின் தலைமைத்துவப் பதவியை விடவும் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிதான் மைத்திரிபால சிறிசேனாவுக்குப் பாரமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. மஹிந்தவின் வடிவில் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு நெருக்கடி வரும் என்று மைத்திரி எதிர்பார்த்திருக்கவில்லை.

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதிவிக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்வதன்மூலம்தான் ஜனாதிபதி என்ற நாட்டின் தலைமைத்துவப் பதவிக்குத் தான் தகுதியானவன்தான் என்று மைத்திரியால் நிரூபிக்க முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான் மைத்திரியின் ஆளுமையை வெளிக்காட்டப்போகின்றது.நீண்ட காலம் எடுத்தாவது இந்தத் தேர்தலை வெற்றிகொள்ளவேண்டும் என்பதற்காகவும் எந்த வகையிலும் மஹிந்த தரப்பு இத்தேர்தலில் வென்றுவிடக்கூடாது என்பதற்காகவும் மைத்திரி தேர்தலுக்கான காலத்தை இழுத்தடித்துக் வியூகம் வகுத்துக்கொண்டு செல்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோற்று மீண்டும் அரசியலுக்குள் நுழைந்த மஹிந்தவையும் அவரது சகாக்களையும் அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்காக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரி சுதந்திரக் கட்சியின் வெற்றியைக் கூடத் தவிர்த்தார்.பிரதமர் கனவுவுடன் தேர்தல் களத்தில் குதித்த மஹிந்தவை வெறும் எம்பி என்ற வட்டத்துக்குள் கட்டுப்படுத்தி சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவால் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையை மைத்திரி உருவாக்கினார்.

இந்த நிலை தொடர்ந்தால் மஹிந்தவும் அவரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றவர்களும் அரசியல் அனாதைகளாக ஆக வேண்டி வரும் எனப் பயந்து புதுக் கட்சி ஒன்றை உருவாக்க மஹிந்த அணியினர் திட்டமிட்டனர்.

mahinda maithiri nimal

புதுக் கட்சி உருவாவதில் சுதந்திரக் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால்,சுதந்திரக் கட்சியில் உள்ள பலரைக் கழட்டிக் கொண்டு-அந்தக் கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டு உருவாவதுதான் பிரச்சினை.அவ்வாறான விதத்தில் கட்சி உருவாவதைத் தடுப்பது அல்லது உருவானாலும் மக்கள் செல்வாக்கு அதற்கு கிட்டாமல் செய்வது இப்போது மைத்திரி மீது சுமத்தப்பட்டுள்ள கட்டாய பணியாகும்.

எந்தவொரு கட்சியையும் கட்டிஎழுப்புவதற்கு-மக்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்வதற்கு அடி மட்ட அரசியலே முக்கியமாகும்.குறிப்பாகக் கிராம மட்டத்தில் கட்சி கட்டி எழுப்பப்பட வேண்டும்.மஹிந்தவுக்கு கிராம மட்டத்தில் மக்கள் செல்வாக்கு அதிகம் என்று எனச் சொல்லப்படுகின்றது.தேர்தல் ஒன்று வரும்போதுதான் உண்மை நிலை தெரியும்.சிங்களப் பகுதிகளில் இருந்த மஹிந்தவின் செல்வாக்குச் சரிந்துவிட்டது என்பது 2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்தான் தெரிந்தது.அவ்வாறுதான் இந்தக் கதையும்.

அதிகமான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து வந்து கிராம மட்டத்தில் மஹிந்தவுக்கு அதிகமாக ஆதரவு இருப்பதாகக் காட்டினார்கள்.அதிகமான உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு சார்பானவர்கள் என்பது உண்மை என ஏற்றுக்கொண்டாலும் அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்களா-அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அப்படியே இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.மஹிந்தவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தபோது வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.அதேசெல்வாக்கு இப்போது இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இருந்தாலும்,மஹிந்த அணியைக் குறைத்து மதிப்பிடாது சுதந்திரக் கட்சியை கிராம மட்டத்தில் புனர்நிர்மாணம் செய்வதானது மஹிந்த அணியை கிராமங்களில் இருந்து விரட்டியடிக்கும் ஆயுதமாக அமையும்.மஹிந்த அணி அதிகம் குறி வைப்பது கிராம மக்களைத்தான்.

இப்போது இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே மைத்திரி களமிறங்கியுள்ளார்.கிராம மட்டத்தில் கட்சியை மீளக் கட்டியெலுப்பும் பனி தொடங்கப்பட்டுள்ளது.அதன் முதல் கட்டமாக சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மஹிந்தவுக்கு ஆதரவான அமைப்பாளர்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களை மைத்திரி அமைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

கட்சியை எப்படிப்பட்ட புனர்நிர்மாணத்துக்கு உட்படுத்தினாலும் முதலில் மஹிந்த ஆதரவாளர்களை முக்கிய பதவிகளில் இருந்து நீக்கி தனக்கு விசுவாசமானவர்களை நியமிக்க வேண்டும்.அவ்வாறு செய்யாது எவ்வகையான புனரமைப்புக்களைச் செய்தாலும் அது வெற்றியளிக்காது.இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது மைத்திரிக்கு சாதகமாக அமையாது என்பதை உணர்ந்து சாதகமான மாற்றத்தை உருவாக்கும்வரை மைத்திரி தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றார்.

மஹிந்த தரப்பு பாத யாத்திரை உட்பட பல போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றது.எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவே இருக்கின்றனர்.அவ்வாறு நடந்தால் அது மைத்திரியின் தலைமைத்துவத்துக்கு சவாலாக அமைந்துவிடும்.மஹிந்த எழுச்சி பெற்றுவிடுவார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெளிப் பார்வைக்கு சிறிய தேர்தலாகத் தெரிந்தாலும் , ஒரு கட்சி கிராம மட்டத்தில் பலமாக இருப்பதை அந்தத் தேர்தல் வெற்றிதான் உறுதிப்படுத்துகின்றது.ஒரு கட்சியின் கிராம மட்டத்திலான பலமே கட்சியின் ஆணி வேராகும்.

இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றாலும் அது மைத்திரியின் தலைமைத்துவத்துக்கு சவால்தான் மஹிந்த தரப்பு வென்றாலும் சவால்தான்.ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து இப்போது யாருக்கு மக்கள் பலம் அதிகம் இருக்கின்றது என்பதை அறியும் தேர்தலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைய போகின்றது.

இனி வரப் போகின்ற மாகாண சபைத் தேர்தகள் உள்ளிட்ட அனைத்துவிதமான தேர்தல்களிலும் யார் வெற்றி பெறப் போகின்றார் என்பதை இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான் தீர்மானிக்கப்போகின்றது.ஐக்கிய தேசிய கட்சி வெற்றியை நோக்கி இனி நகரப்போகின்றது என்று ஊவா மாகாண சபைத் தேர்தலின் முடிவு எதிர்வு கூறியதுபோல்தான் இதுவும்.

மஹிந்தவின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவும்முடியாது.அது சுதந்திர கட்சியின் தனித்துவத்தை இழக்கச் செய்துவிடும்.கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அதற்கு இணங்கவுமாட்டார்கள்.தனித்துக் களமிறங்கி வெல்வதுதான் ஒரே வழி.

எவ்வாறேனும் இந்தத் தேர்தலை வென்றுவிடவேண்டும் என்பதற்காகவே மைத்திரி ஒரு வருடமாக தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கின்றார்.எல்லை நிர்ணய விவகாரம் இதற்குஅவருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.தனது கட்சி வெற்றி பெறக்கூடிய ஒரு தளத்தை அவர் தயார் செய்து வருகின்றார்.தான் வெல்லமுடியும் என்ற சாதகத்தன்மை தெரிந்தால்தான் தேர்தலைநடத்துவது என்ற முடிவில் அவர் இருக்கின்றார்.ஆனால்,இவ்வாறு தொடர்ந்தும் தேர்தலை இழுத்தடிக்க முடியாது என்பதையும் அவர் உணராமல் இல்லை.

உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்கு காலம்முடிவடைந்து இப்போது ஒரு வருடமாகுவதால் இனித் தேர்தல்உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றன.மஹிந்த தரப்பினர் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் பாத யாத்திரையின் முக்கிய நோக்கமும் இதுதான்.

இந்த விவகாரம் மைத்திரியின் ஆளுமைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவாலாகும்.இதை அவர் எப்படி வெற்றிகொள்ளப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

[ எம்.ஐ.முபாறக்]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s