ஐவெயார் அமைப்பின் மறுப்பறிக்கைக்கான பதிலறிக்கை

  •  முஹம்மது நியாஸ்

யானை அடிப்பதற்கு முதல் தானே அடித்துக் கொண்டு தற்கொலை செய்த கதையானது! கடந்த 22: 07: 2016 அன்று இரவு சுமார் பத்துமணி அளவில் காத்தான்குடியைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் பலருடைய முகநூல் பக்கங்களிலும் ‘நியாஸின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மாத்திரமின்றி விஷமத்தனமானவையுமாகும் –

IWARE பெண்கள் அமைப்பின் பகிரங்க விளக்கம்’ என்னும் தலைப்பின் கீழ் ஒரு மறுப்பறிக்கை வெளியாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (23.07.2016) காலை அவ்வறிக்கை சில பிரபல இணையத்தளங்களிலும் வெளியானது.

குறித்த அறிக்கையை வாசித்தபோது, அது கடந்த 20: 07: 2016 அன்று என்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும், சில செய்திச்சேவை இணையத்தளங்களிலும் வெளிவந்த ‘காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?’ என்னும் தலைப்பைக் கொண்ட எனது சமூக விழிப்புணர்வுக் கட்டுரைக்கான மறுப்பறிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

என்னுடைய குறித்த ஆக்கத்தைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு முதற்கட்ட விசாரணை அறிக்கை என்பதால், அது காத்தான்குடிப் பிரதேசத்தில் நடைபெற்றுவருகின்ற ஒரு சமூக விரோதச் செயற்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் மாத்திரமே அமைந்திருந்தது.

அதன் காரணமாகவே அந்த விவகாரத்தில் குறித்த நபருடைய பெயர், விபரங்களை வெளியிடாமல் சம்பவத்தை மாத்திரம் மூடலாக தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக பலரும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தாமும் அவ்வாறான சில செயற்பாடுகளை ஆங்காங்கே அவதானித்ததாக என்னிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து என்னுடைய கட்டுரை வெளியாகிய இரண்டு நாட்களின் பின்னர் அதாவது, 23.07.2016 அன்று காத்தான்குடியிலுள்ள ஐவெயார் என்னும் பெயர் கொண்ட ஒரு திடீர் அமைப்பினால் அக்கட்டுரையிலுள்ள வாசகங்கள் தங்களுடைய அமைப்பிலுள்ள ஒரு உறுப்பினரைத்தான் குறிக்கிறது என்றும், தாங்கள் அவ்வாறான ஒரு சமூக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டு ஒரு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அம்மறுப்பில் இவ்வமைப்பினர் என்னோடு நேரடிக் கலந்துரையாடல் ஒன்றுக்கான கடிதம் ஒன்றை காலை பதினொரு மணிக்கே எனக்கு அனுப்பியதாகவும், அதற்கு சமூகமளிக்காமல் நான் நழுவல் போக்கைக் கையாண்டதாகவும் முற்றிலும் உண்மைக்குப்புறம்பான தகவலொன்றினை பொதுமக்களிடத்தில் கொண்டு சென்று தங்களை நேர்மையாளர்களாகவும், என்னைப் பொய்யனாகவும் சித்தரிப்பதற்கு அதிகபட்ச பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர்.

கல்வியாளர்கள் வரைந்த கடுகதிக்கடிதம்.

இந்த அமைப்பினரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது உண்மை. ஆனால் இவர்கள் கூறுவது போன்று அக்கடிதம் அன்றையதினம் காலை பதினொரு மணிக்கு வரவில்லை. மாறாக 21: 07: 2016 அன்று வியாழக்கிழமை மாலை ஏழு மணியளவில், அதாவது மஃரிப் தொழுகையும் முடிந்ததன் பின்னர்தான் இவர்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திய ஒரு நபர் என்னுடைய வீட்டில் இக்கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அக்கடிதத்தை கையளிப்பதற்கு முன்னர் நான் காங்கேயன் ஓடையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிய பத்து நிமிடங்களில் குறித்த அந்த நபரே எனக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பை ஏற்படுத்தி என்னுடைய வீட்டின் முகவரியை கேட்டுப்பெற்றுக்கொண்டார்.

எனவே இவர்கள் குறித்த கலந்துரையாடலுக்கான அழைப்பை இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்னரே எனக்கு அனுப்பியது போன்றும், அதை நான் புறக்கணித்து நழுவிக் கொண்டது போன்றும் ஒரு பொய்யான மாயையை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களைப் பரிசுத்தமானவர்கள் என்று சமூகத்தின் முன்னால் வஞ்சகத்தனமான முறையில் நிரூபிக்க முற்பட்டிருக்கின்றார்கள்.

இவர்கள் அனுப்பிய அக்கடிதத்தை வாசித்துப்பார்த்தபோதே இந்த ஐவெயார் அமைப்பினருடைய நிதானமாகச் சிந்திக்கத் தவறிய அவசரப் புத்தியையும், வெளியில் உள்ள ஒரு நபருக்கு கலந்துரையாடலுக்கான அழைப்புக் கடிதத்தை எவ்வாறு வடிவமைப்பது?, அதில் எவ்வாறான விடயங்களை உள்ளடக்குவது? என்பன போன்ற மிகச்சாதாரணமான உலக நடைமுறையே தெரியாது போயிருப்பதையும் என்னால் தெளிவாகவே அறிந்துகொள்ள முடிந்தது.

‘ஆய்வுக்கும், மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம்’ என்று பெயர் நாமம் சூடிக் கொண்டிருக்கும் இந்த அமைப்பின் கடிதத் தலைப்பில் ‘மு.அ.மு அப்கார்’ என்பவரே குறித்த கடிதத்தை வரைந்து ‘ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவிப் பெயரில் கையெழுத்திட்டிருந்தார். ‘இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தில்’ ஒரு ஆணுக்கு என்ன வேலை?, அந்த ஆண் அப்பெண்கள் அமைப்பில் எவ்வாறு இணைந்து எதனை “ஒருங்கிணைத்து”க் கொண்டிருக்கிறார்?’ என்ற கேள்விகளுக்கெல்லாம் நாம் இனிமேல்தான் தனித்தனியாக விடைகளைக் கண்டறிய வேண்டும்.

இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் என்ற பெயர் நாமத்தையும், மகுட வசாகத்தையும் சுமந்து கொண்டு சமூக ஆய்வுகளை நடாத்தி பெண்களின் மேம்பாட்டிற்காக பணிசெய்வதாகக் கூறிக் கொள்கின்ற இவ்வமைப்பினருக்கு, ஒரு இஸ்லாமிய சகோதரனுக்கு இஸ்லாமிய முகமனான ஸலாத்தைக் கொண்டு பேச்சையோ, எழுத்தையோ ஆரம்பிக்க வேண்டும் என்கிற அடிப்படை இஸ்லாமிய நாகரீகம் கூடத் தெரியாமல் போனதையிட்டும் நான் மிகவும் கவலை கொண்டேன்.

மாத்திரமல்லாது, ஒரு நபருடனான அமைப்பு ரீதியான சந்திப்பின்போது பேசப்பட வேண்டிய விடயங்களை அந்த நபர் முன்கூட்டியே தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளாத பட்சத்தில், பேசப்பட விரும்பும் விடயங்கள் அனைத்துமே கலந்துரையாடல் சபையில்தான் பேசப்படும்.

ஆனால் இந்த ஐவெயர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ‘மு.அ.மு அப்கார்’ என்பவர் கலந்துரையாடலுக்காக எனக்கு அனுப்பிய அழைப்பிலேயே, எனது குறித்த ஆரம்பக் கட்டக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பது ஐவெயார் அமைப்பின் உறுப்பினரான ‘அனீஷா ஆசிரியையைத்தான்’ என அவராகவே தன்னிச்சையாக முன்கூட்டி முடிவெடுத்துக் கொண்டு, சம்பந்தமில்லாத கேள்விகளையெல்லாம் அதில் முன்வைத்து அக்கடிதத்தை வரைந்திருப்பதைப் பார்த்தவுடன், இவ்வாறான வெளி நபர்களுடனான கலந்துரையாடல் விடயத்தில் இவர்களுக்கு இதுதான் ‘முதல் அனுபவமாக இருக்கும்’ என்று நான் உறுதியாக நம்புகின்ற அளவுக்கு அக்கடிதத்தின் “அமைப்பு இலட்சணம்” காணப்பட்டது.

மேலும், இவர்கள் நமது சமூக ஆய்வுக்கும், முஸ்லிம் பெண்களின் மேம்பாட்டிற்குமான ஒரு அமைப்பை நடாத்துவதற்கோ எதுவித தகுதி தராதரமோ, போதிய அனுபவமோ, கல்வியறிவோ, உலகப் பொது அறிவோ இல்லாதவர்கள் என்பதற்கு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மற்றுமொரு வாசகமும் தக்க சான்றாகக்காணப்பட்டது.

அதாவது, நாம் நமது தேவைக்காக ஒரு நபரைச் சந்திக்க விரும்புகின்றபோது, அச்சந்திப்புக்கு வசதியான கால நேரத்தைத் தீர்மானிப்பதை அந்நபரிடமே வேண்டிக்கொள்வதுதான் உலக நடைமுறையிலுள்ள வழக்கம் மாத்திரமல்லாது நாகரீகமான வழிமுறையுமாகும். குறைந்தபட்சம் இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு அதிகமான காலக்கெடுவையாவது வழங்கி அந்த கால எல்லைக்குள் சந்திப்பதற்கு முடியுமான நேரத்தை தெரிவு செய்யுமாறேனும் குறித்த நபரை வேண்டிக்கொள்வதே முறையானது, நாகரீகமானது.

ஆனால் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பென்று உச்சந்தலை வாசகத்தைச் சுமந்து கொண்டு பலதரப்பட்ட சமூக ஆய்வுப்பணி(?)களையும் மேற்கொள்வதாக கூறிப் படங்காட்டிகொள்கின்ற இந்த ஐவெயார் அமைப்பினரோ இந்த உலக நடைமுறைக்கும், நாகரீக வழிமுறைக்கும் மாற்றமாக, அவர்களாகவே தன்னிச்சையாகத் தீர்மானித்து, வரையறுத்து கால நேரத்தையும், இடத்தையும் குறிப்பிட்டு ‘இந்தத் தினத்தில், இந்த நேரத்தில், இந்த இடத்தில் எங்களை வந்து சந்தியுங்கள்’ என்று பயங்கரவாத விடுதலைப் புலிகளின் கப்பம் கோரும் பாணியில், சர்வாதிகாரத்தனமாக அழைத்திருந்ததே இவர்களுடைய அறிவீனத்திற்கான சான்றிதழை சாதாரணமாகவே எடுத்துக்காட்டியது.

மட்டுமல்லாது, இவர்கள் குறிப்பிட்டிருந்த அச்சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்குமான நேரம் வெள்ளிக்கிழமை காலை பத்து மணியாகும். ஜும்ஆ தினமான வெளிக்கிழமைகளில் காலை பத்து மணி என்பது, காத்தான்குடியில் மட்டுமல்லாது எந்தவொரு கிராமத்திலும், நகரத்திலும் வாழுகின்ற ஆண்களுக்கு எப்பேர்ப்பட்டதொரு நெருக்கடியான நேரம் என்பது இந்தப் பெண்கள் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதே பெண்கள் அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக(!) பணியாற்றுகின்ற ‘அப்கார்’ என்கிற அந்த ஆண் மகனுக்கும், இந்த அமைப்பினருக்கு ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கி வரும் ஆண் பிரமுகர்களுக்கும் தெரியாமல் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விடயமாகும்.

அனீஷா ஆசிரியையை பலிக்கடாவாக்கி ஐவெயார் அமைப்பு பிரபலமாக எத்தனம்.

என்னுடைய குறித்த ஆக்கத்தில் நான் எந்தவொரு அமைப்பையும், நபரையும் பெயர் குறிப்பிட்டு அடையாளப்படுத்தவில்லை. மாறாக ‘ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த ஒரு ஆசிரியை’ என்றுதான் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தேன்.

காத்தான்குடியின் கல்விக் களத்தையும், சூழலையும் பொறுத்தவரை ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த ஆசிரியைகள் சுமார் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்டோர் பிரபலமான பாடசாலைகளிலும், தனியார் வகுப்புக்களிலுமாகப் பணியாற்றி வருவதை என்னால் அடையாளப்படுத்த முடியும். என்னுடைய குறித்த கட்டுரை வெளியாகி இன்று வரைக்கும் அவர்களில் ஒருவர் கூட என்னைத் தொடர்பு கொள்ளவுமில்லை. அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ‘ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த ஆசிரியை நானாக இருப்பேனா?’ என்று என்னிடம் கேட்கவுமில்லை.

ஆனால் காத்தான்குடியில் ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த ஒரேயொரு ஆசிரியையாக இந்த அனீஷா ஆசிரியை மாத்திரம்தான் பணியாற்றிவருவது போன்றும் நான் குறிப்பிட்டிருகின்ற அடையாளங்கள் ஐவெயார் அமைப்பையும், அவ்வமைப்பில் உறுப்பினராகவுள்ள அனீஷா ஆசிரியையும்தான் குறிக்கிறது எனவும் எழுத்து மூலமாக அவர்களாகவே எனக்கு அசட்டுத்தனமாக அறிவித்து விட்டு, இது தொடர்பாக ஒரு கலந்துரையாடலை நாம் மேற்கொள்வோம் என்று கடிதம் அனுப்பி இருப்பதைப் பார்க்கின்றபோது, இவர்களும் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த சமூக விரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டவர்களாக இருப்பார்களோ…? என்ற புதியதொரு சந்தேகம் இப்போது காத்தான்குடிச் சமூகத்தின் மத்தியில் தானாகவே எழுந்துள்ளது.

‘குற்றமுள்ள மனமே குறுகுறுக்கும், மடியில் கனமிருந்தாலே வழியில் பயமிருக்கும்’ என்பன போன்ற அனுபவ மொழிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எனது குறித்த கட்டுரை வெளியானதன் பின் அதைப்பற்றி காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள எந்தவொரு ‘ஆங்கில மொழிப்புலமை வாய்ந்த ஆசிரியையும்’ இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமலும், எந்த எதிரொலியையும் வெளிக்காட்டாமலும் தானுண்டு, தன்பாடுண்டு என்று அமைதிகாத்து இருக்கும் நிலையில், இந்த ஐவெயார் பெண்கள் அமைப்பினர் மாத்திரமே தடாலடியாக வீழ்ந்தடித்துக்கொண்டும், ‘வாலில் தீச்சுவாலைபற்றிக் கொண்ட வானரங்கள்’ போன்றும், தலை கால் புரியாமல் தட்டுத்தடுமாறித் திரிந்ததில் இருந்தும், அரைவேக்காட்டுத்தனமான ஒரு அழைப்புக் கடிதத்தை அவசரம் அவசரமாக வரைந்தனுப்பி என்னுடன் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டுமென்று அந்தத் ‘தனிப்பட்ட’ சந்திப்பில் ஆர்வம் காட்டியதில் இருந்தும், ‘கிணறு வெட்டப் போய் பூதம் வெளிப்பட்ட’ கதையாக இவர்களிடத்திலும் ஏதோவொரு கனதியான சமூக மோசடிச் சமாச்சாரம் புதைந்து கிடைக்கிறதோ..? என நானுட்பட பலரையும் இப்போது சந்தேகிக்கச் செய்துள்ளது.

ஐவெயார் அமைப்பு பத்து வருடங்களாக இயங்குகிறதா?

இந்த ஐவெயார் என்னும் பெண்களை வலுவூட்டுவதற்கான அமைப்பானது, காத்தான்குடியில் கடந்த பத்து வருடங்களாக இயங்கி வருவதாக அவர்களின் மறுப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக காத்தான்குடியில் இயங்கி வருவதாகக் கூறியிருக்கும் இவ்வமைப்பு, இந்நீண்ட காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் வாழும் நமது முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் செலுத்தியுள்ள செல்வாக்கின் விகிதாசாரம் என்னவென்பது குறித்து இப்போது பொதுமக்களே கேள்வியெழுப்ப முன்வந்துவிட்டார்கள்.

இப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிராக சூல்கொண்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக கடந்த பத்து வருடங்களாகப் பணியாற்றுகிறோம் எனப் பீத்திக்கொள்கின்ற இவ்வமைப்பானது, அவ்வாறான வன்முறைகளில் இருந்தும் இப்பிரதேசத்தின் பெண்களை மீட்டெடுப்பதற்காக முன்னெடுத்த முயற்சிகள்தான் என்ன?

காத்தான்குடிப் பிரதேசத்தில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படுகின்ற சீரழிவுகள் விடயத்திலும் தாங்கள் ‘தீவிரமாக’வும் “விஞ்ஞான(?)” ரீதியாகவும் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டிருக்கின்ற இவ்வமைப்பினர், அவ்வாறான சீரழிவுகள் தொடர்பாக இப்பிரதேச மக்கள் மத்தியில் அறிவியல்ரீதியாக துணிந்து முன்வைத்த தீர்வுத் திட்டங்கள்தான் எத்தனை? விழிப்புணர்வு நடவடிக்கைள்தான் என்ன?

மேலும் தமது சகல நடவடிக்கைகளும் பிரதேச செயலகம், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், திருமண நல்லிணக்க சபை, முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், சமய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய சில சமூக அமைப்புக்கள் போன்ற அரசாங்க மற்றும் சமூக நிறுவனங்களுக்கு முன்னறிவிப்புச் செய்யப்பட்டும், அவர்களது ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்புடனுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ‘பொறுப்புடன்’ தமது மறுப்பறிக்கையில் தெரிவித்திருக்கின்ற இந்த ஐவெயார் பெண்கள் அமைப்பினர், இவர்கள் சமர்ப்பித்த தீர்வுத்திட்டங்களில், ஆய்வறிக்கைகளில் எத்தனை தீர்வுத்திட்டங்களையும், ஆய்வறிக்கைகளையும் எந்தெந்த அரசாங்க மற்றும் சமய – சமூக நிறுவனங்கள் அங்கீகரித்து பெண்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த மண்ணில் அமுல்படுத்தியிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாகத் தெளிவுபடுத்துவார்களா?

அல்லது, தமக்காக ஆதரவுக்குரல் கொடுப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு, நம்பிக்கையில் தமது மறுப்பறிக்கையில் நன்கு திட்டமிட்டுக் கோர்த்துக் கொழுவிவிடப் பட்டிருக்கும் மேற்குறிப்பிட்ட அரசாங்க மற்றும் சமய – சமூக நிறுவனங்களாவது இந்தப் பெண்கள் அமைப்பினர் முன்வைத்த ஆய்வறிக்கைகளையும், தாம் அங்கீகரித்துச் செயற்படுத்திவரும் தீர்வுத் திட்டங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்த முன்வருவார்களா?

இவர்களின் மறுப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இத்தனை அரசாங்க மற்றும் சமய – சமூக நிறுவனங்களிடமும் தமது சகல நடவடிக்கைகளையும் முன்வைத்தும், அவர்களின் ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனுமே செயற்பட்டு வருவதாகக் கூறும் இந்த இஸ்லாமிய மகளிர் ஒன்றியம், இப்பிரதேசத்தின் சமய, சன்மார்க்க வழிகாட்டிகளான காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையை நிராகரித்துவிட்டுச் செயற்படுவதன் மர்மம்தான் என்ன?
அவர்களின் ஒப்புதலும், ஒத்துழைப்பும் இந்த இஸ்லாமிய மகளிருக்குத் தேவைப்படாமல் போனது ஏன்?

பெண்கள் உரிமை என்றும், பெண்களுடைய சுதந்திரம் என்றும், பெண்களை வலுப்படுத்துவதாகவும் நீலிக்கண்ணீர் வடித்து, ஒன்றுகூடி, ஒப்பாரி வைத்து அழுது புலம்பியிருக்கின்ற இவ்வமைப்பினர், காத்தான்குடிப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்ற அடிப்படை உரிமைகளாக எவற்றையெல்லாம் இந்தப் பத்தாண்டு காலத்திலும் அடையாளம் கண்டுள்ளார்கள்?

இந்த பிரதேசத்தில், இஸ்லாமிய சமூகத்தில் காலாதி காலமாகக் கோலோச்சி வருகின்ற சீதனம் என்னும் இஸ்லாமியச் சமூகத்தின் சீரழிவுக் கலாச்சாரத்தினால் எத்தனையோ பெண்கள் காழி நீதிமன்றத்தில் வைத்து கைவிடப்பட்டு நடுத்தெருவுக்கு வந்து நிற்கின்றனரே, அந்தச் சீதனம் என்னும் சமுதாயக் கொடுமைக்கு எதிராக இந்த ஐவெயார் பெண்கள் அமைப்பு இதுகால வரை முன்னெடுத்துக் கிழித்திருக்கின்ற நடவடிக்கைகள்தான் என்ன?

பெண்களைச் சீரழிக்கின்ற, பெண்களுடைய வாழ்க்கையை நிர்க்கதியாக்குகின்ற, பெண்களைப் பெற்ற தாய், தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதரர்களை, பாரிய, நிரந்தர கடனாளிகளாக்கி நடுத்தெருவுக்கு விரட்டி வருகின்ற இந்தச் சீதனம் எனும் சமுதாயத்தின் சாபக்கேட்டுக்கு எதிராக இந்த ஐவெயார் எனும் பெண்களை வலு(?)வூட்டுவதாகக் கொக்கரிக்கும் அமைப்பினர் ஊரும் உலகும் அறியும் வண்ணம் பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு சிறிய வரலாற்றுக் குறிப்பைத்தானும் எனக்கும், இக்காத்தான்குடிச் சமூகத்திற்கும், இவர்களுக்காக முன்வந்து துணிந்து குரல் கொடுப்பார்கள், கண்டனம் தெரிவிப்பார்கள் என்கிற அபாரக் கற்பனைக் கனவுகளுடன் ‘காக்கா’ பிடித்துக் காட்டியிருக்கின்ற முன்கூறப்பட்ட அரசாங்க மற்றும் சமய – சமூக நிறுவனங்களுக்கும் பதிவு செய்து காட்ட முன்வருவார்களா?” என நான் பகிரங்கமாகவே இவர்களுக்குச் சவால் விடுக்கின்றேன்.

குறைந்த பட்சம் பெற்றோர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான ஒரு கருத்தரங்கு, இளைஞர்களுக்கான வழிகாட்டல் மாநாடுகள் போன்ற ஏதேனும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைதானும் இவர்களால் இதுகால வரைக்கும் இந்த சமூகத்தின் மத்தியில் நடாத்த முடியாமல் போனதன் மர்மம்தான் என்ன?

அல்லது குறைந்த பட்சம் இந்த ஐவெயார் அமைப்பிலுள்ள ஆண் ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், ஒத்துழைப்பவர்கள், ஒப்புதல் அளிப்பவர்களாவது பெண் தரப்பாரிடம் சீதனமாக எதுவும் பெறாமல் தமது சொந்த வீட்டில் திருமணம் முடித்துள்ளார்களா?
எதிர்காலத்திலாவது முடிப்பதற்கு முன்வருவார்களா? என்றும் கேட்க விரும்புகின்றேன்.

இன்று இந்த சமூகத்திலும், உலமாக்கள் மத்தியிலும் பெண் தரப்பாரிடம் வீடு வாங்குவது சீதனம் இல்லை என்றொரு வாதம் வெகுவாக வலுப்பெற்று வருகின்றதே..! இது தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்னவென்பதையாவது பகிரங்கமாகவும், துணிவாகவும் அறிவிப்பதற்கு இந்த ஐவெயார் எனும் இஸ்லாமியப் பெண்களுக்கான வலுவூட்டல் அமைப்பு முன்வருமா?

சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளில்….

பெண்களோடு சேர்த்து பெண் குழந்தைகளின் வன்முறையற்ற எதிர்கால சூழலுக்காகவும் பத்து வருடங்களாக படாதபாடு படுவதாக்கூறி பறைசாற்றிக் கொள்கின்ற இந்த ஐவெயார் அமைப்பினர், இந்தப் பிரதேசத்தில் கடந்த பத்தாண்டுகளுக்குள் இடம்பெற்ற சிறுவர் -சிறுமியர்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோக மற்றும் வன்முறைகளின் விடயத்தில் இதுகால வரைக்கும் காட்டிய அக்கறைமிக்க நடவடிக்கைகள்தான் என்ன?

கடந்த வருடம் சீமா என்றொரு சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த பிரதேசமுமே அதிர்ச்சியில் உறைந்து நின்றதே, அப்போது இந்த ஐவெயார் என்னும் அர்ப்பணிப்புள்ள தியாகிகள் எங்கே சென்று ஒளிந்திருந்தார்கள்?

பாலமுனைப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சிறுவன் அவனுடைய குடும்பத்தவர்களால் கரண்டிச் சூட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவமாவது
இந்த ஐவெயார் அமைப்பினருக்கு தெரியுமா?, தெரியாதா?

கடந்த வருடம் காத்தனகுடியை சேர்ந்த ஒரு சிறுவன் இப்பிரதேசத்திலுள்ள ஹாமிது லெவ்வை என்னும் ஒரு காமக்கொடூரனாலேயே துஷ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டானே, அப்போது இந்த குழந்தைகள், சிறுவர்களின் வரப்பிரசாதம் என வெட்கமில்லாமல் பீத்திக்கொள்கின்ற மகளிர் அமைப்பு ஏன் குறட்டை விட்டுத்தூங்கியது?

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சிறுமி யுஸ்ரி அவளுடைய வளர்ப்புத்தாயினால் கரண்டிச் சூடிட்டு கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டபோது இந்த நாடே அதிர்ச்சியில் கொத்தளித்ததே..!
இந்த சிறுவர்கள் நலன்பேணும் பெயர் தாங்கிப் பெண்கள் ஒன்றியம் அப்போது எங்கே சென்று ஒழிந்திருந்து, எதனைப் பார்த்துக் கொண்டிருந்தது?

குறைந்தபட்சம் இந்த இஸ்லாமியப் பெண்கள் ஒன்றியத்தின் பெயரில் உத்தியோகபூர்வமாக ஒரு கண்டன அறிகையைத்தானும் பதிவு செய்ய இவர்களுக்கு திராணி வந்ததா?

இப்போது அந்தச் சிறுமி யுஸ்ரியின் மீதான தீச்சூட்டுக் கொடூரத்திற்கு உறுதுணையாக இருந்த அச்சிறுமியின் தந்தை மஜீத் ரப்பானி, தன்னுடைய இரண்டாவது மனைவி மும்தாஜை ஒரே இரவில் மூன்று தலாக்குகளையும் கூறி மார்க்கத்திற்கு விரோதமான முறையில் விவாகரத்து செய்துள்ளாரே..! இது குறித்து இந்த ஐவெயார் என்னும் இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் எனும் பெயர் தாங்கி அமைப்பின் நிலைப்பாடு என்ன? ஆய்வு என்ன? முன்சொன்ன அரசாங்க மற்றும் சமய – சமூக நிறுவனங்களுக்கு முன்மொழியும் அறிக்கைதான் என்ன?

இவை மாத்திரமல்லாது, விவாகரத்துக்கள் விடயத்தில் காத்தான்குடி காழி நீதிபதி அல்ஹாஜ் எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி) தொடர்பாக நாள்தோறும் எண்ணற்ற குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறதே..!

அதுவும் பெண்களுக்கு எதிராக மிகவும் கேவலமான ஒரு போக்கை அவர் கையாள்வதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கிறார்களே…!
நமது பிரதேச முஸ்லிம் பெண்களுக்கு வரப்பிரசாதமாக வந்துதித்ததாக வாய்கூசாமல் பொய்யுரைக்கின்ற இந்த ஐவெயார் அமைப்பினர் இப்பொதுமக்களின் விசனம் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்திய வரலாறுகள் ஏதேனும் கைவசம் உண்டா?

சமூக நல அமைப்பும் சமூகத்தினுடனான தொடர்பாடலும்.

இன்றைய நாட்களில் நான்கு நபர்களை கொண்டியங்குகின்ற ஒரு சாதாரண அமைப்பை நாம் எடுத்துக்கொண்டாலும் அவர்கள் ஏதோவொரு விதத்தில் சமூகத்தோடு தொடர்பு
கொள்ளக்கூடிய வகையில் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் இயங்கி வருகிறார்கள்.

ஆனால் கல்வியாளர்கள், சமூகப்பணியாளர்கள், ஆய்வாளர்கள், அறிக்கைகளை முன்வைப்பவர்கள் என்றெல்லாம் தமக்குத்தாமே கூறிக்கொண்டு தலைகால் புரியாமல் தம்பட்டம் அடித்திருக்கின்ற இந்த ஐவெயார் அமைப்பிற்கு இதுகால வரைக்கும் ஒரு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லாதது, யாவரும் வாய்பிளந்து பார்க்க வேண்டிய ஓர் ஆச்சரியமான விடயமாகும். பத்தாண்டு காலமாக இப்பிரதேசத்தில் பணியாற்றி வருவதாகப் பறையடித்துள்ள இந்த ஐவெயார் அமைப்புக்கென்று குறைந்த பட்சம் ஒரு இலவச முகநூல் கணக்கேனும் இருந்ததாக அதன் நீண்டகால வரலாற்றில் தெளிவான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை.

என்னுடைய ஆக்கத்திற்கு மறுப்பறிக்கையொன்றை வெளியிடும் தேவையேற்பட்ட அன்றைய தினத்தில்தான் தடாலடியாக ஒரு முகநூல் “லைக்” பக்கத்தைத் தயாரித்து முதன் முதலாக அதில் அந்த மறுப்பறிக்கையைப் பிரசுரித்து இருந்தனர்.

இவர்கள் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் தொடர்பாடல் திறனோடு அமைப்பு நடாத்துகிறார்கள், இவர்களுடைய வெளிப்படைத்தன்மையின் வறுமை நிலையும் கையறு நிலையும் எத்தகையது என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

மாத்திரமன்றி, பத்து வருடங்களாக அமைப்பு நடாத்துகிறோம் என்று பீத்திக்கொள்கின்ற இந்த அனாமதேய அமைப்பின் பெயரால் இதுகால வரைக்கும் எந்தவொரு இணையதளத்திலும் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையோ, செய்திக் குறிப்போ வந்ததில்லை என்பது மற்றுமோர் அதிர்ச்சியான விடயமாகும்.

“கூகுள்” தேடு பொறியில் ஐவெயார் என்று ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் தட்டச்சு செய்து நான் தேடியபோதுகூட, அது இவர்களது அமைப்பின் பெயரை மாத்திரம் தவிர்த்து உலகத்தில் ஐவெயார் என்னும் பெயரில் இருக்கின்ற விடயங்கள் மற்றும் மக்கள் நலப்பணிகளில் செயற்படும் சகல அமைப்புக்களின் விவகாரங்கள் அனைத்தையுமே தெளிவாக காண்பிக்கிறது. ஆனால் இவர்கள் பத்து(?) ஆண்டுகளாக நடாத்தி வருவதாக கூறுகின்ற இவ்வமைப்பை பற்றி ஒரு வரிச்செய்தியோ ஒரு இலட்சினையோ எந்தவொரு இணையத்தளத்திலும் கிடைக்கவில்லை.

அப்படியானால் இந்த காத்தான்குடி ஐவெயார் அமைப்பானது இதுவரைக்கும் வெகுசனத்திற்கு ஆற்றிய பகிரங்க சேவைகள், செய்திகள் எதுவுமே இல்லையா?
இந்த இலட்சணத்தில்தான் “நாங்கள் இப்பிரதேசப் பெண்களின் வரப்பிரசாதம்” என இவர்கள் வாய்க்கு வந்தவாறெல்லாம் பெருமையடிக்கிறார்களா?

அதனால்தான் என்னுடைய கட்டுரை வெளியான மறுகணமே மறுப்பறிக்கை(?) வெளியிடுகிறோம் பேர்வழி என்று அந்த மறுப்பறிக்கையினை தங்களுடைய அனாமதேய அமைப்பினுடைய சுய விளம்பரத்திற்காக பயன்படுத்திக்கொண்டார்களா?

அப்படியானால் இதைவிடவும் ஒரு பரிதாபகரமான நிலைமை இந்த ஐவெயார் அமைப்பைத்தவிர வேறு எந்தவொரு அமைப்பிற்கும் இந்நாட்டில் இருக்கவே மாட்டாது என்று என்னால் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக கூறிவிடமுடியும்.

மறுப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தற்காப்புடன் கூடிய முன்னறிவிப்பு

இந்தப் பெண்கள் அமைப்பினர் என்னுடைய கட்டுரைக்கெதிரான விடயதானங்கள் எதுவே இல்லாமல் வெறும் எழுத்துக்களாலும், வார்த்தைகளாலும் மாத்திரமே பக்கங்களை நிரப்பி வெளியிட்டுள்ள நீண்ட மறுப்பறிக்கையின் இறுதியில், ‘இனிமேலும் இது போன்ற போலியான, அபாண்டமான விமர்சனங்கள் வெளியாக வாய்ப்புக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் பதிலளித்துக் கொண்டு நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கவும் நாம் விரும்பவில்லை’ என்று கனகச்சிதமாக கதையை முடிப்பதற்கும் முற்பட்டுள்ளார்கள்.

இதன் பிறகு சமூகத்தில் இந்த அமைப்பைப்பற்றி நேரடியாகவும் நியாயமாகவும் எழும்புகின்ற பொதுமக்களின் விமர்சனங்களை கூட கண்டுகொள்ளாமல் நழுவிக்கொண்டு ஓடுவதற்கு இந்த முன்னறிவிப்பு இவர்களுக்கு ஒரு கேடயமாகவே பயன்படப்போகிறது. அந்த வகையிலும் இவர்கள் மறுப்பறிக்கை என்னும் பெயரால் ஐவெயார் அமைப்பு வெளியிட்டது கலப்படமற்ற ஒரு சுயவிளம்பரம்தான் என்பதும் தெளிவாகிறது.

எனவே, நான் ஆய்வுக்குட்படுத்தி வரும் மேற்படி தலைப்பிலான விடயம் தொடர்பாக போதிய ஆதாரங்கள் நாளாந்தம் கிடைத்தே வருகின்றன. அவை முற்றுப் பெற்று முடிவான
அறிக்கையொன்றை நான் வெளிப்படுத்துவதற்கு முன்னரே, இவர்கள் இவ்வாறு இவ்விவகாரத்தைத் தொடர விரும்பாமல் ஒதுங்கிக் கொள்ள முனைவதொன்றே, ‘யானை அடித்துச் சாவு வர முன்னர், தானே அடித்து தற்கொலை செய்து கொண்ட’ அனுவப மொழியையே எனக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s