துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

turkeyஅரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும்,அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது.

அந்த வரிசையில் இப்போது துருக்கியும் சிக்கியுள்ளது.இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் துருக்கி இப்போது இராணுவ சதிப் புரட்சி ஒன்றில் சிக்கி உடனே மீண்டுள்ளது.இராணுவப் புரட்சி ஒன்றும் துருக்கிக்குப் புதிது அல்ல.இதற்கு முன் 1960, 1971, 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் பல இராணுவ சதிப்புரட்சிகளை துருக்கி சந்தித்துள்ளது.

துருக்கி அரசுக்கு ஆதரவான மக்கள் இப்போதைய இராணுவப் புரட்சிக்கு எதிராகக் களமிறங்கியதாலும் துருக்கிய இராணுவத்தில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானோரே இந்தப் புரட்சியில் இறங்கியதாலும் இந்தப் புரட்சி முறியடிக்கப்பட்டது.இருந்தாலும்,அதை முறியடிப்பதற்கு 200 இற்கு மேற்பட்ட உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன.

இந்தப் புரட்சி முறியடிக்கப்பட்டபோதிலும்,துருக்கி அரசுக்கான ஆபத்து முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதை மறுக்க முடியாது.இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை செய்து மீண்டுமொரு புரட்சி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் துருக்கி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சதிக்கான காரணம் என்ன?இதன் சூத்திரதாரிகள் யார்?போன்ற கேள்விகளுக்கு சரியான பதில்கள் இப்போது கிடைக்காதபோதிலும்,துருக்கியின் எதிரிகளை அடிப்படையாக வைத்து இப்போது பல சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக,சிரியா யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு துருக்கி குறுகிய காலத்துக்குள் பல எதிரிகளை பெற்றுள்ளது.அதேபோல்,துருக்கிக்கு உள்ளேயும் நீண்ட கால எதிரிகள் இருக்கின்றனர்.இந்த எதிரிகளில் யாராவது இந்த புரட்சியின் பின்னணியில் இருக்கின்றனரா என்று சந்தேகிக்கப்படுகின்றது.

குர்திஷ் போராளிகள்

===================

துருக்கியுள்ள குர்திஷ் மக்கள் சுயாட்சி கோரி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துருக்கிய அரசுடன் யுத்தம் செய்து வருகின்றனர்.இதனால்,குர்திஷ் மக்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இவர்கள் கெரில்லா பாணியில் துருக்கி அரசுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

turkey

இந்த குர்திஷ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்குமிடையில் 2013 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோதிலும்,அது நீடிக்கவில்லை.இதனால்,இரு தரப்புகளுக்குமிடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போர் இடம்பெறவே செய்கின்றது.

சிரியா ஜனாதிபதி பஸார் அல்-அஸாத்

===================================

சிரியா யுத்தம் துருக்கிக்கு அதிக எதிரிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளதை அவதானிக்கலாம்.சிரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்ததும் பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்துகொண்டன.அந்த வகையில்,துருக்கிதான் முதலிடத்தில் உள்ளது.

சிரியா அரசைக் கவிழ்க்கப் போராடி வரும் ஆயுதக் குழுக்களுக்கு துருக்கி எல்லா வகையான உதவிகளையும் செய்து வருகின்றது.சிரியா ஜனாதிபதியைக் கவிழ்க்க வேண்டும் என்பதில் துருக்கி ஊதியாக இருக்கின்றது.இதனால்,சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் துருக்கியின் நிரந்தர எதிரியாக மாறிவிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

===============================

சிரியா யுத்தம் துருக்கிக்கு உருவாக்கிக் கொடுத்த மிக முக்கியமான எதிரிதான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.இந்த போரில் சிரியா அரசை காப்பாற்றுவதற்கு விளாடிமிர் புடின் முன்வந்தமை துருக்கிய ஜனாதிபதி ஆதுர்கானுக்குப் பிடிக்கவில்லை.இதனால்,ரஷ்யாவைப் பலி வாங்குவதற்கு அவர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தார்.

சிரியாவில் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரஷ்யாவின் யுத்த விமானம் துருக்கியின் வான் எல்லைக்குள் நுழைந்தது என்று குற்றஞ்சாட்டி துருக்கி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது.இதனால்,துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பகைமை மேலும் வளரத் தொடங்கியது.துருக்கியைப் பலி வாங்க ரஷ்யா சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள்

======================

சிரியா யுத்தத்தால் துருக்கி சந்தித்துள்ள அடுத்த எதிரி ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமாகும்.அமெரிக்காவுடன் இணைந்து துருக்கி ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.இதனால் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துருக்கிமீது பல தடவைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இறுதியாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தின்மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தி பலரைக் கொலை செய்ததை நாம் அறிவோம்.இந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளும் துருக்கியின் எதிரிகளாக மாறியுள்ளனர்.

சிரியா குர்திஸ் போராளிகள்

==========================

சிரியா யுத்த களத்தில் நின்று போராடும் மற்றுமோர் ஆயுதக் குழுதான் சிரியா குர்திஸ் ஆயுதக் குழு.இவர்களையும் இன்னும் பலரையும் உள்ளடக்கி ”சிரியா ஜனநாயக படை” என்ற பெயரில் அமெரிக்கா ஆயுதக் குழுவொன்றை உருவாக்கி அவர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றது.

துருக்கியில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் குர்திஸ்களின் சிரியா பிரிவாக இந்த சிரியா குர்திஸ் படை இருப்பதால் அவர்கள் மீதும் துருக்கி தாக்குதல் நடத்தி வருகின்றது.இந்த ஆயுதக் குழு சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் ஒரு பகுதியை அண்மையில் கைப்பற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துருக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு தனது நேச நாடான அமெரிக்கா ஆதரவு வழங்குவதை துருக்கி விரும்பவில்லை.இந்த விவகாரத்தால் அமெரிக்காவும் துருக்கியும் முரண்பட்டுக்கொண்டே நிற்கின்றன.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாம் போராடுவதால் எமது எதிரிகளை ஐ.எஸ்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை என்பதே துருக்கியின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு துருக்கி பல எதிரிகளை உருவாக்கியுள்ளதால் இராணுவப் புரட்சியின் பின்னணியில் இந்த எதிரிகள் இருக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இருப்பினும்,இந்த இராணுவ புரட்சிக்கு அமெரிக்காதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.துருக்கி முழுமையான அமெரிக்கா சார்பு நாடாக இருப்பதால் இந்த ஊகம் முழுமையாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

இருந்தாலும்,இந்தப் புரட்சியின் பின்னணியில் இருப்பவர் பெத்துல்லா குலேன் என்ற மதப் போதகர்தான் என்று துருக்கிய ஜனாதிபதி ஆதுர்கான் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் இவர் ஆதுர்கானின் பழைய நண்பராவார்.2013 இல் இடம்பெற்ற ஊழல்,மோசடி விசாரணை தொடர்பில் அவர் ஆதுர்கானுக்கு எதிராக நின்றதால் இருவரும் எதிரிகளாக மாறினார்.அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இராணுவப் புரட்சியில் இவரது பங்களிப்பு உண்டா என்று விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.இருப்பினும்,உண்மையான சூத்திரதாரிகள் மிக விரைவில் கண்டறியப்படுவர் என்று நம்பப்படுகின்றது.

[ எம்.ஐ.முபாறக் ]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s