“நியாஸின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மாத்திரமின்றி விஷமத்தனமானவையுமாகும்” IWARE பெண்கள் அமைப்பின் பகிரங்க விளக்கம்

A-hand-writing-with-a-pen-006[1]நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.?

காத்தான்குடிப் பிரதேசத்தில் IWARE ( Islamic Women’s Association for Research and Empowerment ) என்ற பெயரில் பெண்களை வலுவூட்டுவதற்கான அமைப்பாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நாம், நமது சமூகத்தில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துக்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் தொடர்பிலும் கடந்த 2014 முதல் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சமூகத்தில் எவராலும் கண்டு கொள்ளப்படாத ஆனால் இஸ்லாமிய சமூகக் கட்டுக் கோப்பில் பாரிய சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற இந்த விடயங்கள் தொடர்பில் முறையான கவனத்தினை எவருமே செலுத்தாதிருந்த வேளையிலேயே நாம் இந்த சமூக கடமையினை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்தோம்.

இந்த விடயத்தின் உண்மையான பாரதூரத்தை விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொள்ளும் வகையில் மிகப் பொறுப்புடன் நாம் மேற் கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

உதாரணமாக, கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமணங்களின எண்ணிக்கை 381 ஆகும். அதே ஆண்டில் நடந்த விவாகரத்துக்கள் 106 ஆகும். அது போலவே 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணங்களில் எண்ணிக்கை 333 ஆகும். ஆனால், அதே ஆண்டில் 141 திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளன. ஆக, கடந்த இரு ஆண்டுகளையும் ஒப்பிடும் போது நம் சமூகத்தில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் நிலையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. (33% அதிகரிப்பு) .

இந்தத் திருமண முரண்பாடுகளின் பின்னணிகளையும் இந்த விவாகரத்துக்கள் ஏற்படுத்தியுள்ள பின்விளைவுகளையும் தனித்தனியாக ஆராயும் போது நமது சமூகத்தில் அது ஏற்படுத்தும் பயங்கரமான விளைவுகளை எம்மால் காண முடிந்தது. விவாகரத்துக்களினால் ஏற்படக்கூடிய சமூக சீரழிவுகளைக் கருத்திற் கொண்டே விவாகரத்து என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட அது இறைவனால் வெறுக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது என்பது இங்கு நினைவு படுத்தத்தக்கது. அந்த வகையில், கடந்த 2 வருட ஆய்வுகளில் எமக்குக் கிடைத்த அனுபவங்களையும் தகவல்களையும் எமது சமூக நிறுவனங்களுக்கும், உலமாக்களுக்கும் மற்றும் ஏனைய சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கும் அறிவுறுத்தி கலந்துரையாடி பொருத்தமான தீர்வுகளை காணும் நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

இது போன்று, பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலும் ஏனைய பல முக்கிய சமூகப்பிரச்சினை தொடர்பிலும் நாம் மேற்கொண்டுவரும் ஆய்வு மற்றும் தீர்வு நடவடிக்கை வேலைத்திட்டங்களுக்கான நிதி மற்றும் ஏனைய அனுசரணைகளை பல்வேறு நிறுவனங்களும் உத்தியோக பூர்வமாக எமது அமைப்பிற்கு வழங்கியுள்ளன. அத்தோடு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இதுபோன்ற நிதி அனுசரணையோடு ஏனைய பல நிறுவனங்களினாலும் பல்வேறு சமூகப்பணிகள் நமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதென்பது வழமையானதே.

(எமது கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் எமது ஆய்வுகளின் அடிப்படையிலான அவதானங்களையும் இதனடிப்படையில் நாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பற்றியும் மிகவிரைவில் விரிவாக தெளிவுபடுத்தவிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்)

நியாஸின் குற்றச்சாட்டுகள் ஏன் அநியாயமானவை? பொய்யானவை ?

இதற்கிடையிலேயே நியாஸ் என்பவர் மிக அநியாயமான அபாண்டங்களைச் சுமத்தி வீண் சந்தேகங்களையும் குழப்பங்களையும் சமூகத்தில் உருவாக்கும் வகையில் குறித்த ஆக்கத்தை வெளியிட்டுள்ளார்.

எனவே, முதற்கட்டமாக குறித்த ஆக்கத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களும் குற்றச்சாட்டுக்களும் எவ்வளவு தூரம் அபாண்டமானதும் பொய்யானதும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

முஹம்மது நியாஸ் என்பவர் எழுதியுள்ள ஆக்கத்தில் பின்வரும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

1. ‘ஆங்கில ஆசிரியர்’ ஒருவர் தனிப்பட்ட முறையிலேயே இந்த ‘விவாகரத்து’ விபரங்களை சேகரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு.

இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில்இ நமது பிரதேசத்தில் எந்தவொரு நபரும் தனிப்பட்ட முறையில் குறித்த விடயம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகின்ற எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எமது அமைப்பே மிகவும் உத்தியோக பூர்வமாகவும் பலதரப்புகளுடன் இணைந்தும் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துத் தொடர்பில் கவனம் செலுத்தி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2. குறித்த இந்த நபர் NGO ஒன்றிடமிருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுத் தகவல்களை விற்பனை செய்கிறார் என்று அடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவும் எந்தவித அடிப்படையோ ஆதாரமோ இல்லாத, யாரும் யார் மீதும் இலகுவாக சுமத்தக்கூடிய கற்பனையான பொய்யான குற்றச்சாட்டேயாகும்.

3. திருமணம் மற்றும் விவாகரத்துத் தொடர்பான தகவல்கள் இரகசியமாக திரட்டப்படுகின்றன என்பது மற்றுமொரு குற்றச்சாட்டாகும்.
நமது சமூகத்தில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்து மற்றும் திருமண வாழ்க்கைச் சீரழிவுகள் தொடர்பான எமது நடவடிக்கைகள் அனைத்தும் அரச மற்றும் சமூக நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்த பின்னர் பகிரங்கமான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன (விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது). எனவே இதுவும் மற்றுமொரு கற்பனையும் அபாண்டமும் அப்பட்டமான பொய்யும் ஆகும்.

4. குறித்த ஆசிரியை ஏனைய சமூக நிறுவனங்களை இணைத்துக் கொள்ளாமல் தனியாக இயங்குகின்றார் என்ற இன்னுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு எந்தவொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட ரீதியில் எந்தவொரு நடவடிக்கைகளையும் தனியாக மேற்கொள்ளவில்லை ; அதே வேளை எமது நிறுவனமே உத்தியோக பூர்வமாகவும் நிறுவன ரீதியாகவும் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்ட வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் எமது சகல நடவடிக்கைகளும் பின்வரும் அரசாங்க மற்றும் சமூக நிறுவனங்களுக்கு முன்னறிவிப்புச் செய்யப்பட்டும் அவர்களது ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்புடனுமேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதனையும் பொறுப்புடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

Ø பிரதேச செயலகம்
Ø பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்
Ø திருமண நல்லிணக்க சபை
Ø முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள்
Ø கிராம உத்தியோகத்தர்கள்
Ø பள்ளிவாயல்களின் நிர்வாகிகள்.
Ø சமைய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய சில சமூக அமைப்புகள்.

எனவே எவரையும் இணைத்துக் கொள்ளாமல் தனிப்பட்ட இலாபத்திற்காக தனியொருவரினால் இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு மற்றுமொரு பாரதூரமான அபாண்டமும் புனையப்பட்ட பொய்யுமாகும்.

5. குறித்த ஆக்கத்தில் தகவல்கள் இரகசியமாக பல இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு கையூட்டல்களும் பணத்தொகைகளும் பெறப்பட்டுள்ளன என பல முறை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான எந்தவொரு ‘விற்பனையும்’ இரகசியமாகவோ பகிரங்கமாகவோ எவராலும் எச்சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு எவ்வித பணத்தொகையுமோ அல்லது கையூட்டல்களுமோ யாரும் பெற்றுக் கொள்ளவும் இல்லை; யாராலும் வழங்கப்படவுமில்லை.

எனவே திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ள இந்த விடயமும் இட்டுக்கட்டப்பட்டுள்ள அபாண்டமும் பொய்யுமாகும்.

6. மேலும், திருமண-விவாகரத்து தொடர்பான தகவல்கள் இறுக்கமாக பேணப்படும் ரகசியங்கள் போலவும் அத்தோடு இவை ‘ரகசியமாக சேகரிக்கப்பட்டு ரகசியமாக வழங்கப்பட்டு வருகின்றன’ என்ற அடிப்படையில் இது ஒரு சமூகத் துரோகமாகவும் சோடிக்கப்பட்டிருக்கிறது.

திருமண மற்றும் விவாகரத்து பற்றிய தகவல்கள் மிகவும் வெளிப்படையானவையே.
விவாகப் பதிவாளர்கள், காழி நீதிமன்றங்கள், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற இடங்களில் இவற்றை மிகத் தாராளமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது பொதுப் புத்தியுள்ள அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதுபோலவே இவ்வளவு சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய தகவலைப் பெற்றுக் கொள்ள விரும்பும் எந்தவொரு அமைப்பும் இதற்காக பல இலட்சங்களை செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்பதும் சராசரியான பொதுப் புத்திக்கு புரியக்கூடிய விடயமுமாகும்.

இது இப்படியிருக்க இதனை ‘பாரதூரமான ரகசியமான’ ஒரு செயற்பாடாக சோடிப்பதற்கு நியாஸ் என்பவர் முனைந்திருப்பதானது அப்பட்டமான பொய் மாத்திரமின்றி கபடத்தனமான உள்நோக்கத்தையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது

எனவே, முஹம்மது நியாஸ் என்பவர் குறித்த ஆக்கத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையும் அபாண்டமான பொய்களுமாகும் என்பதோடு விஷமத்தனமானதுமாகும் என்பதனை பொறுப்புடனும் பகிரங்கமாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நாட்டில் மகளிர் நல தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு பிரதேச செயலகத்தின் முழுமையான அங்கீகாரத்துடன், காதி. SSM முஸ்தபா ஹாஜியார் வீதியில் உத்தியோக பூர்வ அலுவலகத்தையும் ஊழியர்களையும் கொண்டு இயங்கும் எமது அமைப்புடனோ அல்லது எமது அமைப்போடு தொடர்புபட்ட வேறு எவருடனோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு விளக்கத்தையும் கோரவோ அதற்கான முயற்சியினை மேற்கொள்ளவோ முஹம்மது நியாஸ் என்கின்ற நபர் எத்தனிக்கவில்லை என்பதனையும் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

எமது நடவடிக்கை:

அத்தோடு, இது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (21.07.2016) 11.00 மணியளவில் கூடிய எமது நிர்வாகம் இது தொடர்பில் நியாஸ் என்பவரிடம் எழுத்து மூலம் சில விளக்கம் கோருவததோடு அவரை நேரடியாக சந்தித்து உரிய விளக்கங்களை வழங்குவதெனவும் தீர்மானித்து ஒரு கடிதத்தையும் அனுப்பிவைத்திருந்தது.

அக்கடிதத்திற்கு அவர் அளித்திருக்கக் கூடிய நழுவல் பாணியிலான பதிலானது, அவர் நாம் கேட்ட விளக்கங்களை வழங்குவதற்கோ அல்லது எம்மை சந்தித்து உரிய விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்கோ தற்போது தயாரில்லை என்பதையே காட்டுகின்றது.

இதிலிருந்து, பொய்களைப் பரப்புவதில் அவருக்கிருக்கின்ற ஆர்வத்தில் ஒரு சிறு துளி கூட உண்மையைக் உரிய இடத்தில் விசாரித்து கண்டறிவதில் அவரிடம் இல்லை என்பதனையும் கவலையுடன் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தொடரும் எமது பணி:

சமூக ஊடகங்கள் பொறுப்புள்ள முறையில் செயற்பட்டால் பாரிய சமூகமாற்றத்தினையே ஏற்படுத்த முடியும். ஆனால், தனிநபர் ஒருவர் மீது அல்லது அமைப்பின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அல்லது வேறு விசமத்தனமான காரணங்களுக்காக அவதூறான செய்திகளை பதிவேற்றம் செய்வதும் அச்செய்திகளுக்கு Comments என்ற பெயரில் பொறுப்பற்ற வகையில் சில நபர்கள் கருத்து தெரிவிப்பதுமானது ஒரு தனிநபரை மட்டுமல்லாது சமூகத்தின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களையும் பாதிப்பதனை மறந்து விடுகின்றார்கள். சமூகத்திற்கு இம்மியளவும் பங்களிப்புச் செய்யாது தானும் தன் குடும்பமும் என்ற சுயநலப் போக்குடன் சொகுசாக இருந்து கொண்டு வாய்க்கு வந்தபடி மற்றவர்களை விமர்சிப்பவர்கள் எவருக்கும் சமூக நலனில் அக்கறையோடு செயற்படுபவர்கள் சுய இலாபத்திற்காக வேலை செய்வது போன்று தான் தெரியும். இலாபமில்லாது எதையும் இழக்கத்தயாரில்லாத கூட்டம் சமூகத்திற்காக உழைப்பவனை பைத்தியகாரனாகப் பார்ப்பதும் அவதூறு கூறுவதும் எமது சமூகத்திலொன்றும் புதிதுமல்ல.

ஒரு இஸ்லாமிய பெண்கள் அமைப்பு என்ற வகையில் மிகவும் நிதானப் போக்கை கடைப்பிடிப்பவர்கள் நாங்கள். பெண்கள் சமூக வேலைத் திட்டங்களில் ஈடுபடும் போது வரக்கூடிய சவால்கள் பற்றி எமக்கு போதிய அனுபவம் உள்ளது. பல கட்டங்களைத் தாண்டித்தான் எமது IWARE அமைப்பானது இன்று இந்த சமூகத்தில் இன்னல்படும் பெண்களுக்கு ஒருவரப்பிரசாதமாக மாறியுள்ளது.

ஏதோ ஒரு தேசத்தில் எந்த மனித சமூகத்திற்கும் பலனற்ற சாதனைகளை மேற்கொள்பவர்களுக்கு பக்கம் பக்கமாக பாராட்டுப் புராணம் பாடும் நம்மவர்களுக்கு நமது பெண்களின் பிரச்சினைகளுக்காகவும் நமது பெண் குழந்தைகளின் வன்முறையற்ற எதிர்கால சமூகச் சூழலுக்காகவும் எந்த விளம்பரமோ பாராட்டோ எதிர்பார்ப்போ இல்லாமல் பாடுபடும் சகோதரிகளின் உழைப்பு கண்ணுக்கு கந்தலாக தெரிவது ஒரு துரதிஷ்டம்தான்.

இருப்பினும், எம்மைப் பொறுத்தவரையில் எமது இந்தப் பணியனது மறுமைக்கான உழைப்பேயாகும். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் சமூக பாதுகாப்பையும் மறுதலிக்கும் கூட்டத்தினரிடமிருந்து அவற்றை மீளப்பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். இவ்வுழைப்பில் இன்ஷா அல்லாஹ் நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். எமது இந்த நோக்கத்திற்காக எம்மோடு சேர்ந்து உழைக்கும், எமது உழைப்பிற்கு அங்கீகாரம் வழங்கும், தட்டிக்டிகொடுக்கும் பெரும்பான்மையான சகோதரர்களை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவு கூறுகின்றோம். பொறுப்பு வாய்ந்த சமூக நிறுவனங்கள் எமது அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவும், தேவைப்படும் போதெல்லாம் ஆலோசனைகளையும் வழங்கி வழிகாட்டுவதையம் இங்கு நன்றியுடன் குறிப்பிடுகின்றோம்.

இந்நிலையில் கோழைத்தனமாக பொறுப்பில்லாத முறையில் சுயவிளம்பரத்திற்காக வதந்திகளைப் பரப்பும் விசமிகளுக்கு பயந்து எமது செயற்பாடுகளை நாங்கள் முடக்கிக் கொள்ளப் போவதில்லை. இனிமேலும் இது போன்ற போலியான, அபாண்டமான விமர்சனங்கள் வெளியாக வாய்ப்புக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் பதிலளித்துக் கொண்டு நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கவும் நாம் விரும்பவில்லை. எமது அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் பற்றியும் சந்தேகம் எழுமிடத்து நேரடியாக எமது காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இறுதியாக, இறைவனின் உதவியோடு எமது இப்பணி தொடரும்… இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளையும் பாதுகாப்பினையும் பெற்று பெண் சமூகம் விடியல் காணும் வரை…! இன்ஷா அல்லாஹ்.

இவ்வண்ணம்,
இணைப்பாளர்
IWARE

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s