“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கம் துஆக்களை இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள், அதனை நானும் நம்புகின்றேன்”- மஹிந்த ராஜபக்ஷ

  • எம்.எஸ்.எம். சாஹிர்

mahindaகொழும்பு: அளுத்கமை சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்? உண்மையான சூத்திரதாரிகள் யார்? சதித்திட்டங்களை வகுத்தவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் இன்னும் கொஞ்ச நாளில் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெஹிவளை நகர பிதா தனசிரி அமரதுங்கவின் இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்துரையாற்றுகையில்,

சிங்கள, முஸ்லிம் நல்லிணக்கம் எமக்குப் புதிதான ஒன்றல்ல. ஆரம்ப காலம் முதல் நாம் முஸ்லிம்களோடு இணக்கமாக வாழ்ந்திருக்கின்றோம். எமது மூதாதையர்கள்தான் எமது மெதமூலன கிராமத்துக்கு வயலுக்கு அப்பால் இருக்கின்ற மெத்தஸ்முல்ல கிராமத்தில் ஆரம்பத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றினார்கள். என்ற வரலாறை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இது மட்டுமல்ல, சிறு வயது முதல் நான் முஸ்லிம்களோடு நெறுங்கிப் பழகி இருக்கின்றேன். எனவே, சில பொய்ப் பிரசாரங்களின் காரணமாக சென்ற தேர்தலின் போது எமக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், திருக் குர்ஆன் கூறிய படி இது பொய்யாகத்தான் இருக்கும். பொய் ஒரு காலமும் மெய் ஆகாது. ஆகவே, பொய் அழிந்தே தீரும். அளுத்கமை சம்பவம் தொடர்பாக முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதற்காக வேண்டி இப்படியான பொய்ப் பிரசாரங்களைத்தான் கட்டவிழ்த்து விட்டார்கள். அதில் பொய்யர்கள் ஒருவாறு வெற்றியும் கண்டார்கள்.

இணையத் தளம் மூலமாக உலகமெல்லாம் எனக்கு விரோதமாகப் பரப்பினார்கள். ஆனால், அளுத்கமை சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தவர் யார்? உண்மையான சூத்திரதாரிகள் யார்? சதித்திட்டங்களை வகுத்தவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் இன்னும் கொஞ்ச நாளில் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். எனவே, முஸ்லிம்கள் எப்போதும் என்னை நம்பலாம். இந்த நாட்டிலே முஸ்லிம்கள், அரபிக்கள் வந்த காலம் தொடக்கம் நாங்கள் அவர்களோடு மிக நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்கள். முஸ்லிம்கள் சம்பந்தமாக நான் என்றும் குரல் கொடுத்திருக்கின்றேன். முஸ்லிம் நாடுகள் இன்றும் என்னோடு தொடர்பு வைத்துள்ளன.

பலஸ்தீனத்துக்காக வேண்டி கடந்த 25 வருடங்களாக பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக, நாம் ஒவ்வொரு முறையும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற போதெல்லாம் பலஸ்தீனத்தைப் பற்றி பேசியிருக்கின்றேன். அதற்கு மரியாதை செலுத்தும் முகமாக பலஸ்தீனத்தில் ஒரு நகரத்திலே என்னுடைய பெயரைக் கூட ஒரு பாதைக்கு சூட்டியிருக்கின்றார்கள். அவ்வளவு மதிப்பு உலக முஸ்லிம்களிடத்தில் இருக்கின்றது. இதனை இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் இப்பொழுது புரிந்து கொண்டு வருகின்றார்கள். பொய்யை உதறித் தள்ளிவிட்டு உண்மையை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

வர்த்தகத்துறையில் அவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிருந்து அவர்களை மீட்குமாறு அவர்கள் என்னிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்கு ஏனைய சிங்கள, முஸ்லிம், தமிழர்களோடு ஒன்றிணைந்து உண்மையான நல்லாட்சியை உருவாக்குவதற்கு எல்லோரும் எமக்கு உதவி செய்ய வேண்டும்.

இது புனிதமான ரமழான் மாதம் என்னை நோன்பு திறக்கும் நிகழ்வுக்காக அழைத்திருக்கின்றீர்கள். மூன்றாவது முறை நான் வந்திருக்கின்றேன். நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கம் துஆக்களை இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்.அதனை நானும் நம்புகின்றேன்.

ஆகவே, இந்தக் காலங்களில் நோன்பு திறக்கும் நேரங்களில் இந்த நாட்டிலே ஒரு நல்லாட்சியும் உருவாக வேண்டும். முஸ்லிம்களும் பலமிக்கவர்களாக, செல்வமிக்கவர்களாக , குறைவின்றி வாழக் கூடிய ஒரு ஆட்சியை எங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பிரச்சினைகள் இல்லாத ஆட்சி யை ஏற்படுத்த வேண்டும் என்று உங்களுடைய ஏனைய பிரார்த்தனைகளோடு எம் நாட்டுக்காகவும் நம் நாட்டு நல்லாட்சிக்காகவும் துஆக் இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அத்தோடு, இப்பொழுது மக்களுடைய வாழ்கைச் சுமை தாங்க முடியாது கஷ்டப் படுகிறார்கள். எனவே மீண்டும் மீண்டும் நான் வருவேன். என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில், கலீல்மௌலவி சிங்களத்தில் ஒரு விசேட பயான் செய்தார். அதனை முன்னாள் ஜனாதிபதி, “இப்படியான மௌலவிமார்கள் இருப்பதன் மூலமாக நல்லிணக்கத்தோடு சகலரும் வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு எந்தவிதமான தடையும் இருக்காது என்று வெகுவாகப் பாராட்டினார்.

அங்கு மேயர் தனசிரி அமரதுங்க உரையாற்றும் போது,

அளுத்கமை சம்பவம் நடைபெற்ற பொழுது, நான் இரவு பகலாக ஐந்து நாட்கள் தெஹிவளையை சுற்றி வளைத்து வந்தேன். முஸ்லிம்களுக்கு எந்த விதத்திலும் ஒரு தீங்கு ஏற்படக் கூடாது என்ற நம்பிக்கையோடுதான் நான் இரவிலே உலா வந்தேன். சில ஹாஜியார்மார்கள் வீடுகளில் தூங்கும் பொழுது அவர்களைத் தட்டியெழுப்பி, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நானும் ஊரில் உலா வருகின்றேன். நீங்களும் வாருங்கள் என்று கூறினேன். அவர்கள் நடுநிசி நேரத்திலும் கூட எனக்கு கோப்பி வகைகள் தந்தார்கள். ஆகவே, இது இலங்கையில் இருக்கின்ற ஏனைய மாநகரசபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு உதாரணமான பிரதேசம்தான் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை பிரதேசம் என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.

பாத்தியா மாவத்தையில் ஆரம்பத்திலே ஒரு சமயப் பாடசாலையை அமைப்பதற்கு எனக்கு முன்பிருந்த மேயர் அனுமதி அளித்திருந்தார். என்னுடைய காலத்தில் அது பள்ளிவாசலுக்காக வேண்டி அனுமதியைக் கோரி, அதனை நானே கையொப்பமிட்டு வழங்கினேன். ஆகவே, நான் கையொப்ப மிட்டு வழங்கியதை என்னால் ரத்து செய்ய முடியாது. ஆகவே, இந்தப் பள்ளிவாசல் சம்பந்தமாக பழைய பல அழுத்தங்களும் எந்நாளும் வந்த வண்ணமாக உள்ளன. நான் சொன்னேன் அவர்களுக்கு “நீங்கள் கூ வைப்பது, கூக்குரல் இடுவது, கல் வீசுவது, பள்ளிவாசலுக்கு வந்து இப்புனித மாதத்தில் தொழுகின்றார்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு நான் இடம் தரமாட்டேன்” அதைக் கண்டிப்பாகச் சொல்லி இருக்கின்றேன்.

ஏதாவது பிரச்சினை இருந்தால் நாங்கள் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவோம். இறுதி முடிவை எடுப்போம். நாங்கள் ஒரு தீர்வைப் பெறுவோம்.அது வரையில் நீங்கள் அவசரப்பட்டு கலகம் விளைவிக்கின்ற இடமாக, தளமாக இந்தப் பள்ளிவாசலையும் சுற்றுப் புற இடங்களையும் ஆக்குவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

இது 6ஆவது முறையாக இவ்வருடம் இப்தார் வழங்குகின்றேன். அடுத்த முறை நான் மேயராக இருப்பேனோ என்ன வென்று தெரியாது. எப்படியாக இருந்தாலும் தனசிரி அமரதுங்க என்ற நான், உங்களை என்றும் அழைப்பேன். நீங்கள் எல்லோரும் இப்தாருக்கு வாருங்கள்.

இவ்விப்தார் நிகழ்வில், அனைத்துப் பள்ளிவாசல் மௌலவிமார்கள், கதீப்மார்கள். முஸ்லிம் பிரதானிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s