துண்டு துண்டாகுமா பிரிட்டன்?

Rainy-Britain[1]லண்டன்: ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான். ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற அதிர்ச்சிக்குரிய முடிவை அந்த நாடு எடுத்திருப்பதுதான் இதற்கு காரணம்.

பிரிட்டன் மக்கள் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த முடிவு அமைந்துள்ளது.இந்த முடிவால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிதல் என்ற ஒரு பாதகத்தன்மையை மாத்திரம் எதிர்கொள்ளவில்லை.அந்த முடிவால் பல பக்க விளைவுகளையும்தான் எதிர்கொள்ளப் போகின்றது.

முதலில் பிரிட்டன் மக்கள் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.கட்டுக்கடங்காமல் போகும் குடியேற்றவாசிகளின் ஊடுருவல்தான் இதற்கு முதல் காரணம்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகினால் மாத்திரம்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற வழி இருந்ததால்தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

புது மணப் பெண்களாக அல்லது புது மாப்பிள்ளைகளாக வருடம் தோறும் 30,000 பேர் பிரிட்டனுக்குள் பின் வழியாக நுழைகின்றனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட ஏற்பாடுகளே இதற்குக் காரணமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் மாத்திரமே இந்தக் குடிவரவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருக்கின்றது.

ஆனால்,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளை உறவினர்களாகக் கொண்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.இவர்கள் மூன்றாம் தரப்பு நாடுகளின் பிரஜைகள் என அறியப்படுவதோடு டேவிட் கேமேரோன் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது முதல் இவ்வாறான 140,921 பேர் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால்தான் பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்தனர்.ஆனால்,இந்த முடிவால் ஏற்படப் போகும் பல பாதகமான விளைவுகள் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.தொழில் இழப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட மேலும் பல பாதகமான விளைவுகளை பிரிட்டன் எதிர்கொள்ளக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே நின்று முன்னேற முடியும் என்ற பிரிட்டன் மக்களின் தன்நம்பிக்கையை இது காட்டுகிறதா அல்லது உணர்ச்சிக்கு இடங்கொடுத்துவிட்டார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றொரு தரப்பும் வெளியேறக் கூடாது என்றொரு தரப்பும் கடந்த நான்கு மாதங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வந்தன.பிரிட்டன் வெளியேறுவதை எதிர்த்த தரப்பு அது வெளியேறினால் ஏற்படப் போகும் ஆபத்துக்களைப் பட்டியல்படுத்தி மக்களைத் தெளிவுபடுத்தி வந்தது.அதில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தொழில் இழப்பு புள்ளி விவரங்களுடன் முன்வைக்கப்பட்டன.

மறுபுறம்,பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று கூறிய தரப்பு பொருளாதார வீழ்ச்சியை விடவும் குடியேற்றவாசிகள் ஊடுருவலையே மிகப் பெரிய ஆபத்தாகக் காட்டியது.கிட்டத்தட்ட அவர்கள் இனவாதத்தையே விதைத்து வந்தனர்.

இறுதியில் பிரிட்டன் மக்கள் இனவாதத்துக்கே அடிபணிந்துள்ளனர்.ஆனால்,இந்த முடிவு பிரிட்டனைத் துண்டு துண்டாக உடைத்து பல பக்க விளைவுகளைக் கொண்டு வரக்கூடியது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

ஸ்கொட்லாந்து,அயர்லாந்து

பிரிவதற்கு முயற்சி

===========================

பிரிட்டன் என்பது ஸ்கொட்லாந்து,அயர்லாந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றைக் கொண்ட பெரும் நாடாகும்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றின் மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்துள்ள அதேவேளை,ஸ்கொட்லாந்து,வட அயர்லாந்து மற்றும் லண்டன் மக்கள் பிரிட்டன் விலகக்கூடாது என்றே வாக்களித்துள்ளனர்.

இந்த இரண்டு வெவ்வேறு நிலைப்பாடுதான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை அந்த இரண்டு நாடுகளும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வதற்கான நிலைப்பாடாக அந்த நாடுகளின் அரசுகள் பார்க்கின்றன.ஸ்கொட்லாந்து இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது.தாம் பிரிந்து செல்வதற்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைக்காதா என்று காத்துக் கிடக்கும் ஸ்கொட்லாந்து அரசுக்கு இந்த நிலைமை பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்காக 2014 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அந்த நாட்டு மக்கள் தொடர்ந்தும் பிரிட்டனுடன் இணைந்திருக்கவே வாக்களித்திருந்தனர்.ஆனால்,இந்த முறைத் தேர்தலில் 60 வீதமான ஸ்கொட்லாந்து மக்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்ததால் ஸ்கொட்லாந்து மக்கள் பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டனர் என்றும் அவர்கள் ஸ்கொட்லாந்து தனி நாடாகுவதை ஆதரிக்கின்றனர் என்றும் ஸ்கொட்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையை சாதகமாகக் கொண்டு ஸ்கொட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து அரசு தயாராகி வருகின்றது.அந்த நாட்டின் முதலமைச்சர் நிகோலா ஸ்டேஜன் இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்.தேர்தலுக்கான ஏற்பாடுகளை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டார்.

மறுபுறம், இந்தத் தேர்தலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று லண்டன் மக்களும் வாக்களித்துள்ளதால் லண்டன் சுயாதீன பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும்;அதற்காக இப்போதே விண்ணப்பிக்க வேண்டும் என்று லண்டன் மக்கள் கோரிக்கை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை உள்ளடக்கிய மஹஜரில் லண்டன் மக்கள் 65 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு லண்டன் மேயர் சாதிக் கானிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு லண்டனும் ஸ்கொட்லாந்தும் வட அயர்லாந்தும் பிரிட்டனில் இருந்து பிரிந்து சுயாதீனமாகச் செயற்படும் முயற்சியில் இறங்கியுள்ளதால் பிரிட்டன் பெரும் தலையிடியை இப்போது எதிர்நோக்கத் தொடங்கியுள்ளது.பிரச்சினைகள் இவ்வாறெல்லாம் தோன்றும் என்று பிரிட்டன் மக்கள் நினைத்திருக்கவில்லை.

கெமெரோனின் பதவி விலகல்

===========================

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தாலும் சரி அதனுடன் இணைந்துள்ள ஏனைய நாடுகள் பிரிட்டனில் இருந்து பிரிந்தாலும் சரி பிரிட்டன் எல்லாத் துறைகளிலும் கணிசமான அளவு பலமிழந்துவிடும் என்பது நிச்சயம்.

இவ்வாறான ஒரு மோசமான நிலைமை தனது தலைமையின் கீழ் ஏற்படக்கூடாது என்று விரும்பிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமெரோன் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரதமர் பதிவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு வாக்களிக்குமாறு கெமெரோன் விடுத்த கோரிக்கையை மக்கள் நிராகரித்ததால் அவர் விரக்தியடைந்துள்ளார்.

பிரிட்டன் இனி என்ன பாடுபடப் போகின்றது என்று இப்போது முழு உலகமும் உற்றுநோக்கத் தொடங்கியுள்ளது.அடுத்து வருகின்ற பிரதமர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடுமையாகப் போராட வேண்டி வரும்.இதேவேளை,வாக்களிப்பு நிராகரிக்கப்பட்டு மீண்டும் புதிதாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பிரிட்டனுக்குள் இப்போது எழுந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகுது என்று.

[எம்.ஐ.முபாறக்]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s