இனமதவாத சக்திகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்

  • மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

inamullahஹலால் முதல் அழுத்கமை வரையிலான அனைத்து காழ்ப்புணர்வு வன்முறை கட்டவிழ்ப்புகளிற்கும் பின்னால் தேசிய பிராந்திய பூகோல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதனை அவ்வப்போது சுட்டிக்காட்டினோம். அதே போன்றே இந்தநாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அத்தகைய நிகழ்ச்சி நிரல்கள் ஒருபொழுதும் காலாவதியாவதில்லை என்பதனையும் நீறுபூத்த நெருப்பாக இருந்து காலத்துக்குக் காலம் சந்தர்பங்கள் சாதகமாக அமைகின்ற பொழுதெலாம் அவை தலை விரித்து தாண்டவமாடும் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவ்வப்போது சந்தர்பங்களை சமாளிக்கவும் பின்னர் மறந்துவிடவும் கூடிய உஷார் மடையர்கள் போல் செலாற்றுவதில் அல்லது எதிர்வினையாற்றல்களோடு நின்று கொள்வதில் பிரசித்தமாக இருக்கின்றோம்.

அண்மைக் காலமாக தலைதூக்கும் இனமத வெறி சக்திகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை, அரச ஊடகங்கள் அவர்களுக்கு ஏன் சந்தர்பங்களை வழங்குகின்றார்கள், தனியார் ஊடகங்கள் காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை தடைசெய்கின்ற சட்டங்கள் ஏன் அமுலாக்கப் படுவதில்லை ? என பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

தற்போதைய தேசிய அரசில் ஜனாதிபதி மைத்ரி, பிரதமர் ரணில் ஆகியோர் புரிந்துணர்வுடன் செயற்பட்டாலும் அவ்விருவரும் இரு பிரதான தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் ஆவர்.

இன்று தேசிய அரசியலில் குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் மூன்றாவது அணியாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவர்களோடுள்ள கடும் போக்கு உதிரிக் கட்சிகளும் களமிரங்குகின்ற சமிக்ஞைகளை வெளியிட்டு வருவது அரசிற்கு பன்முக சவால்களை தோற்றுவித்துள்ளது.

மேற்படி தரப்பினர் மீண்டும் தமது பலமான அரசியல் பிரவேசத்திற்கு கடும்போக்குவாத இனமதவெறி பரப்புரைகளில் தங்கியிருப்பதனை குறிப்பாக சிறுபான்மை இனங்களுக்கெதிரான அரசியல் பரப்புரைகளில் ஈடுபாடு காட்டுவதனை நாம் அறிவோம்.

அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மஹிந்த அணி பிளவு படுவதை ஏதேனும் வகையில் கையாள்வதன் மூலம் மாத்திரமே உள்ளூராட்சி தேர்தல்களில் மாத்திரமன்றி எதிர்கால பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முகம்கொடுக்கும்வகையில் பலப் படுத்திக் கொள்ளும் கடப்பாடு இருக்கின்றது.

அதேபோன்றே ஏதோ ஒரு வகையில் சுதந்திரக் கட்சியை பலவீனப் படுத்தவேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சியிற்கு இருப்பதனை அண்மைக்கால நகர்வுகள் உணர்த்துகின்றன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ அணியினரை பிரித்தெடுப்பதில் அவர்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் தான் பல்வேறு பாரிய ஊழல் மோசடி குற்றங்களுக்காக பிடிக்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்ட பின்னரும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் புரிந்துணர்வுகளில் பெரும்நம்பிக்கைகளுடன் ஈடுபாடுகாட்டி வருகின்றனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அரசியலுக்கு வருவாரா ? அதிபர்ம ஹிந்த பிரதமர் வேட்பாளராக வருவாரா..? அவர்கள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்டால் சந்திரிக்கா அம்மையார் தேசிய அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்வாரா ? என்றெல்லாம் செய்திகள் அடிபடுகின்றன.

இவ்வாறான அரசியல்கள நிலவரங்களில் மூன்றாம் அணியினருக்கும் கடும்போக்கு உதிரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சாதகமான சந்தை வாய்ப்புக்கள் அவர்களுக்கு துணை போகும் இன மத வெறிக் கும்பல்களிற்கு மிகச் சாதகமான களநிலவரங்களை தோற்றுவித்துள்ளன.

எனவே, இவ்வாறான தேசிய அரசியல் கள நிலவரங்களை, தேசிய அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் அரசியல்
சிவில் சன்மார்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புணர்வுடன், சாணக்கியமாகவும், சாதுரியமாகவும் சமூகத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும்!

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.

இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள் அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும். அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை,அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!”

“போக்கிரிகளின் இறுதி அபயம் தேசப்பற்றேனும் போர்வை” என்பது போல் அங்காங்கே பேரினப் பற்றாளர்கள் பட்டாளங்கள் புறப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது, இந்த இன மத வெறியர்களின் பின்னால் பல சர்வதேச சதிகார நாசகார சக்திகள் கவனாமாக காய்களை நகர்த்தி வருகின்றமை கடந்த காலங்களில் வெகுவாக உணரப்பட்டது, மேற்படி இரண்டு சாராரும் அவர்களது பரஸ்பர நலன்களை அடைந்து கொள்ளும் வரை ஒரு பொழுதும் ஓய்வெடுக்கப் போவதில்லை.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்ற முஸ்லிம்கள் காட்டு தர்பார் நடத்த விரும்புகின்ற எந்த சக்தியிற்கும் அஞ்சி வாழப் போவதில்லை, ஜனநாயக மரபுகளை மதிக்கும் முஸ்லிம் சமூகம் எந்த வொரு நெருக்கடியான கால கட்டத்திலும் வன்முறையை நாடியதுமில்லை, இனியும் அதற்கான தேவை எமக்கு இல்லை, இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற சக்திகளுடனும் கைகோர்த்து குறுக்கு வழியில் கோலோச்ச விரும்புகின்ற சக்திகளை தோற்கடிப்போம் இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s