இராணுவத்திடம் மண்டியிடுகிறதா அரசு?

  • எம்.ஐ. முபாறக்

maithiri armyமைத்திரி-ரணில் அரசு உருவானது முதல் அது எதிர்கொண்டு வந்த பல சவால்களை அது சுலபமாக வெற்றி கொண்டுவிட்டது. ஆனால்,மிகப் பெரிய சவாலாக-ஆட்சியின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சவாலாக இருப்பது இந்த அரசு தொடர்பான இராணுவத்தின் நிலைப்பாடுதான்.அது மறைமுகமான சவாலாகவே இருக்கின்றது.

இராணுவத்திற்குள் காணப்படுகின்ற முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான நிலைப்பாடும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த அரசு இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிடும் என்ற இராணுவத்தின் அச்சமுமே இந்த அரசு இராணுவத்திடம் இருந்து மிரட்டல் பாணியிலான சவால்களை எதிர்நோக்குவதற்குக் காரணம்.

புலிகளுடனான யுத்தம் 2009 இல் இராணுவத்துக்கு வெற்றியைக் கொடுத்து முடிவடைந்ததால் இராணுவத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.சிங்களவர்கள் மத்தியிலும் சர்வதேசத்திலும் இராணுவத்தின் வீரம் புகழப்பட்டது.இதனால்,இராணுவத்தினர் ஒருவகையான கௌரவத்தை உணர்ந்தனர்.இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்சதான் என்று ஏற்றுக்கொண்டனர்.இதனால்,அகிகமான படையினருக்கு மஹிந்தமீது பாசம் ஏற்படவே செய்தது.

2015 இல் மஹிந்தவின் ஆட்சி கவிழ்கப்பட்டதை மஹிந்தவுக்கு ஆதரவான இராணுவத்தால் ஜீரணிக்க முடியவில்லை.அவர்கள் புதிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

புதிய அரசு நாட்டின் நிர்வாகத்தைக் கையேற்று தமிழர்கள் சார்பில் செய்த சில பணிகள் நேரடியாக இராணுவத்தின் மீது கை வைப்பதாகவே அமைந்தன.

maithiri army

வடக்கு-கிழக்கில் ஆளுநர்களாக இருந்த முன்னாள் இரானுவ அதிகாரிகளை நீக்கி சிவில் ஆளுநர்களை நியமித்தமையை இராணுவத்துக்கு வீழ்ந்த முதல் அடியாக இராணுவத்தினர் கருதினர்.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டமை இராணுவத்தினரை மேலும் வெருப்பேற்றுவதாக இருந்தது.வடக்கு-கிழக்கில் தமது அதிகாரங்களை மெல்ல மெல்ல பிடுங்கி தம்மை வெறும் பொம்மைகளாக வைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கிறது என்று இராணுவத்தினர் கருதத் தொடங்கினர்.

மூன்றாவதாக, இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு இராணுவத்தால் இழைக்கப்பட்டது என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக உள்ளகப் பொறிமுறை அமைக்கும் முயற்சி இராணுவத்தினரை மேலும் அதிருப்தியடையச் செய்தது.

மஹிந்தவின் ஆட்சியில் அவர் முழு நாட்டையும் இராணுவமயப்படுத்தியே வைத்திருந்தார்.வடக்கு-கிழக்கு ஆளுநர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.அங்கு இராணுவத்தால் ஹோட்டல்கள் நடத்துவதற்குக் கூட அனுமதிக்கப்பட்டது.துப்புரவுப் பணி உட்பட அனைத்து அரச பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற அனைத்துவிதமான அபிவிருத்திப் பணிகளிலும் இராணுவத்தினரின் பங்களிப்பு முழுமையாக இருந்தது.அத்தோடு,சில நாடுகளுக்கு வெளி நாட்டுத் தூதுவர்களாகவும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் விரும்பிய அளவுக்கு மக்களின் காணிகளை அபகரிபதற்கு மஹிந்த அனுமதி வழங்கி இருந்தார்.சிவில் நிர்வாகம் எல்லாவற்றிலும் இராணுவத்தின் தலையீடு தாராளமாக இருந்ததால் அது தமக்குக் கிடைத்த கௌரவம் என இராணுவத்தினர் நினைத்தனர்.

ஆனால்,புதிய ஆரசு இந்த நிலைமையை மாற்றியது.இதனால்,படையினர் புதிய அரசுடன் அதிருப்திகொள்ளத் தொடங்கினர்.அத்தோடு, அவர்களுக்கு எதிரான உள்ளகப் பொறிமுறையால் அவர்கள் மேலும் அச்சமடைந்தனர்.

இந்த உள்ளகப் பொறிமுறையால் இராணுவத்தினர் குற்றவாளிகளாகக் கண்டறியப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு ஏற்பட்டது.தமக்கு சாதகமாக அந்த பொறிமுறை செயற்பட வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளாகவே கொஸ்கம இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவமும் கப்பல் தீப் பிடித்த சம்பமும் இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

இருந்தும்,இராணுவத்துக்குச் சாதகமான போக்கைக் கொண்டிராவிட்டால் இராணுவத்திடமிருந்து தொடர்ச்சியான பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்த அரசு உள்ளகப் பொறிமுறையின் ஊடாக அரசு தொடர்பான இராணுவத்தின் நிலைப்பாட்டை மாற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டது.

இராணுவத்தினர் முழுமையாகத் திருப்திப்படும் வகையில்,ஒரு நிலைப்பாட்டை அரசு இப்போது எடுத்துள்ளது.இறுதிப் போரில் படையினர் யுத்தக் குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களைத் தண்டிப்பதில்லை. அதற்கு பதிலாகப் பொறுப்புக் கூறலை உரிய முறையில் நிறைவேற்றுதல் என்பதே அந்த நிலைப்பாடாகும்.

ஆரம்பத்தில் அரசு போர் குற்றச்சாட்டு என்ற பதத்தை நீக்கி மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு என்று அதை மாற்றியபோதிலும்,படையினர் அதில் திருப்திகொள்ளவில்லை.இராணுவம் எந்த வகையிலும் தண்டிக்கப்படாமல் இருப்பதையே அவர்கள் விரும்பினர்.

படையினர் தண்டிக்கப்பட்டால் அது படையினரை அரசுக்கு எதிராகத் திருப்புவது மாத்திரமன்றி ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் அது அரசுக்கு எதிராக மாற்றிவிடும் என்பதை உணர்ந்த அரசு மேற்படி நிலைபாட்டை இராணுவத்துக்கு சாதகமாக எடுத்தது.

இதை நாம் ஆழமாகப் பார்த்தால் அரசு இராணுவத்திடம் மண்டியிட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.அரசு இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றால் பெரும் பெரும் தலையிடுகளை -ஆட்சியின் இருப்புக்கு எதிரான சம்பவங்களை சந்திக்க வேண்டி வரும் என்று அரசு அஞ்சுகின்றது.

இந்த நிலைப்பாட்டால் தமிழர்கள்தான் ஏமாறப் போகிறார்கள்.இறுதிப் போரில் தமது 40,000 இற்கு மேற்பட்ட உறவினர்கள் இறப்பதற்குக் காரணமான இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு தமக்கு சாதகமாகச் செயற்பட வேண்டும் என்பதற்காக அரசுடன் இணங்கிச் செயற்படும்-எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியலை செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப் போகின்றது?

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s