ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதற்கான காரணங்கள் இவைதான்..

uk-flag-3[1]லண்டன்: இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்… உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன.

முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை.

இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிடும். அதனால், பிரிவினை என்பதற்கான முடிவை எடுப்பது பெரிய சிக்கலாகவே பிரிட்டன் அரசுக்கு இருந்தது.

ஆனால் இப்போது, 2017-ம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துவிட வேண்டுமென்று பெரும்பாலான பிரிட்டன் மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பிரிவதற்குக் காரணங்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் அனைத்தும் தங்களுக்கான எல்லைகளை ஏனைய நாடுகளுக்காகத் திறந்துவிட்டுள்ளன.

ஒரு நாட்டிலிருந்து அடுத்த நாட்டுக்குச் செல்ல எந்தவிதமான பாஸ்போர்ட் அனுமதியும் தேவையில்லை.

ஒருநாட்டில் வாழ்பவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று தொழில் செய்யவும், கல்வியைத் தொடரவும், வாழவும் தடையில்லா அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதுதான் பிரிட்டனின் பிரிவுக்கான முதல் பிரச்னையாகக் கருதப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வேலைகள் தேடியும், வளமான வாழ்வைத் தேடியும் மக்கள் செழுமையான நாடுகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொதுவாக, இந்தப் பிரச்சினை ஜெர்மனி, பிரான்ஸ், ஹோலந்து போன்ற நாடுகளுக்குமான பொதுப் பிரச்சினைதான்.

ஆனாலும் பிரிட்டனின் பெரும்பான்மையான மக்கள் இதை வெறுக்கிறார்கள்.

பிரிட்டனை நோக்கிப் படையெடுக்கும் மக்கள், அங்கு வேலைவாய்ப்புகளை மட்டும் பெற்றுக்கொள்வதில்லை. வேலை கிடைக்கும் வரை குடும்பமாக அரசின் உதவிப் பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தைகளுக்கான உதவித் தொகையும் இதில் அடங்குகிறது. உதவித் தொகையைத் தங்கள் சொந்த நாடுகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

இதனால் பிரிட்டனின் பெருந்தொகையான பணம் வெளியே செல்கிறது என்ற எண்ணம் மக்களிடையே வளர்ந்துவிட்டது.

பிரிட்டன் என்பது இரண்டரை லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்ட பெரிய நாடு. ஆனால், அங்கு வரும் மக்கள் அனைவரும் பிரிட்டனின் தலைநகரமான லண்டன் நகரை நோக்கியே படையெடுக்கிறார்கள். இதுவும் மிகப் பெரும் பிரச்னையாக மாறிப்போய் இருக்கிறது.

லண்டன் மாநகரத்தைப் பழைமை வாய்ந்த கட்டமைப்புடன் பேணிக் காக்கவே பிரிட்டன் விரும்புகிறது. அதற்கு இந்த மக்கள் தொகைப் பெருக்கம் பெரும் இடையூறாக இருக்கிறது.

இவையெல்லாம் மேலோட்டமான காரணங்களாகத் தெரிந்தாலும், உண்மையான சில காரணங்களும் இருக்கின்றன.

அண்மையில் அதிகரித்திருக்கும் சிரிய நாட்டு மக்களின் பெருந்தொகைப் படையெடுப்பு, மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கள் அமைதியான வாழ்க்கையை இவர்களால் இழந்துவிடப் போகிறோம் என்ற தேவையற்ற பயம் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

இதே நேரத்தில், தவிர்க்க முடியாமல் குடியேறிய சிலரால் நடத்தப்படும் சமூக விரோதச் செயல்கள், மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு, வெறுப்பு உணர்வை விதைத்து விட்டிருக்கிறது.

இந்தக் காரணங்களால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நினைக்கிறது பிரிட்டன்.

பிரிட்டனின் பிரதமரான டேவிட் கமரன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டிய அவசியத்தைப் பலவிதங்களில் புரிய வைத்தாலும், அவரது கட்சியிலேயே, பாராளுமன்றப் பிரதிநிதிகள் பலரும், மந்திரிகள் சிலரும் பிரிட்டன் விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க் கட்சிகளோ இந்த விஷயத்தில் முழுமூச்சுடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றன.

பிரிட்டனின் கட்டுப்பாடு முழுவதும் பிரிட்டன் அரசிடம் மட்டுமே இருக்கவேண்டும், வியாபார ஒப்பந்தங்களில் சுதந்திரம் வேண்டும், எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு கட்டுப்பாடுள்ள வரவுகள் இருக்கவேண்டும், ஸ்டெர்லிங் பவுண்ட், தொடர்ந்து பிரிட்டனின் பணமாக இருக்க வேண்டும் என்னும் நிலைப்பாடுகளில், பிரிவினை என்ற குரல் பரவலாக எழ ஆரம்பித்துவிட்டது.

எதிர்வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் பிரிட்டன் மக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s