லண்டன்: லண்டன் மேயரான சாதிக் கான் ஒரு பெருமைக்குரிய இஸ்லாமியர் என பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் புகழாரம் சூட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா ஒரு உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிரதமர் கமெரூன் ஒரு ஊர்வலத்தை இன்று ஏற்பாடு செய்துள்ளார்.
தென் மேற்கு லண்டனில் அமைந்துள்ள Roehampton என்ற பகுதியில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும் லண்டன் நகருக்கு முதன் முதலாக தெரிவு செய்யப்பட்டுள்ள இஸ்லாமியருமான சாதிக் கானும் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய சாதிக் கான், ‘பிரதமர் கமெரூனிற்கும் எனக்கும் சில விடயங்களில் ஒற்றுமை இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், இப்போதைய சூழ்நிலையில் லண்டன் நகர மக்களின் வளர்ச்சிக்காக நான் அரசுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதேபோல், லண்டன் நகரில் உள்ள தொழில்களில் 50 சதவிகிதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா உறுப்பினராக இருப்பதால் மட்டுமே இயங்கி வருகிறது.
பிரித்தானிய வெளியேறினால் இந்த 50 சதவிகித தொழில்களும் பாதிக்கப்படும். எனவே, பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா தொடர்ந்து நீடிக்க வாக்களிக்க வேண்டும்’ என சாதிக் கான் பேசியுள்ளார்.
இதற்கு அடுத்ததாக பேசிய பிரதமர் கமெரூன் மேயரான சாதிக் கானை புகழ்ந்துள்ளார்.
அப்போது ‘மேயராக தெரிவாகியுள்ள சாதிக் கானை நான் மனமார வாழ்த்துகிறேன். நான் இங்கே மேயருடன் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
சாதிக் கான் ஒரு பெருமைக்குரிய மேயர், பெருமைக்குரிய பிரித்தானிய குடிமகன். உலகிலேயே மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றான லண்டன் நகருக்கு முதன் முதலாக ஒரு இஸ்லாமியர் மேயராக தெரிவாகியுள்ளது மூலம் நமது நாடு ஒரு மதச்சார்ப்பற்ற நாடு என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளோம்.
பின்னர், பிரித்தானிய நாடு மேன்மேலும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, பொதுமக்களின் வாழ்வாதாரம் செலுமையடைய ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும்’ என அனைவரும் வாக்களிக்களிப்பது அவசியம் என பிரதமர் கமெரூன் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.