திருகோணமலை: மாகாண முதலமைச்சர் ஒருவருக்கு முப்படை தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கெப்டன் அஹ்ரம் அலவி உறுதிப்படுத்தினார். இந்த தடை காரணமாக கடற்படை, விமானப் படை மற்றும் இராணுவ படைத் தளங்களுக்குள் அவர் பிரவேசிக்க முடியாது என்றும் கூறினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் எந்தவித நிகழ்வுகளுக்கும் முப்படையினரின் ஒத்துழைப்புகளை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கெப்டன் அஹ்ரம் அலவி குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டம், சம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையின் அனுசரனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்னான்டோ , கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தன்னை அவமதிக்கும் வகையில் நிகழ்வுக்கு பொறுப்பான கடற்படை அதிகாரி நடந்து கொண்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமத் கூறினார்.நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முதலமைச்சர் கடற்படை அதிகாரியை ” என்னை நிறுத்துவதற்கு நீ யார் ? முட்டாளே, ஒழுங்கு முறை தெரியா விட்டால் வெளியே போ! ” , என்பது உட்பட கடும் வார்த்தைகளால் கடிந்து கொண்ட காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியுடன் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார். இது குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment