NTJ மீதான மல்வானை வன்முறை தொடர்பாக ஊடகவியலாளர் MBM. பைறூஸ் அவர்களுக்கு சில தெளிவுரைகள்

முஹம்மது நியாஸ்.

ntj logoநேற்றையதினம் (24:05:2014ஆம் திகதி) ஜப்னா முஸ்லிம் இணையதளத்தில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம் ஆசிரியர் MBM. பைறூஸ் அவர்கள் “அல்லாஹ்வுக்காக முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்..!” என்னும் தலைப்பில் ஒரு ஆக்கத்தை எழுதியிருந்தார்.

இவருடைய அந்த ஆக்கத்தை வாசித்துபார்த்தபோது இஸ்லாமிய அமைப்புக்கள் தமக்கிடையிலுள்ள இயக்கரீதியான பிரிவினைகளை வெளிக்கொணர்வதன் காரணமாக பாதிக்கப்பட்ட மல்வானை மக்கள் மேலும் பாதிப்படைந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது. உண்மையிலேயே சகோ. பைறூஸ் அவர்களுடைய இந்த ஆதங்கம் நியாயமானதும் மனிதாபிமானம் மிக்கதும்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.

இருந்தபோதிலும் அவர் அந்த ஆதங்கத்தோடு மாத்திரம் அவருடைய கருத்துக்களை நிறுத்தியிருந்தால் அவரை நோக்கி யாரும் கேள்வி எழுப்பப்போவதில்லை. ஆனாலும் அதே மனிதாபிமான உணர்வுடனும் தியாகங்கள் நிறைந்த அர்ப்பணிப்புக்களுடனும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் தன்னலம் பாராது செயற்பட்ட ஒரு தஃவா அமைப்பை பலிகாடாவாக்கிவிட்டு அதன் மூலமாக தன்னுடைய மனிதாபிமான உணர்வையும், சமுதாய அக்கறையையும் வெளிக்காண்பிப்பதற்காக இவர் எடுத்துக்கொண்ட முயற்சிதான் இங்கே பல கேள்விகளையும் பலமான சந்தேகங்களையும் இவர்மீதும் இவருடைய கருத்துக்கள் மீதும் ஏற்படுத்தியுள்ளன.

பொதுவாக ஒரு பிரதேசத்தில் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றால் அதை ஒரு புதினச்செய்தியாக மாத்திரம் வெளியிட்டுவிட்டு தானுண்டு தன்பாடுண்டு என்றிருப்பதில் ஒரு ஊடகவியலாளனுடைய கடமை முடிந்துவிடுவதில்லை.

மாற்றமாக அந்த அசம்பாவிதமானது சமூகத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமிடத்து அது தொடர்பான உண்மை நிலவரங்கள் என்னவென்பதை ஆய்வுசெய்து இருதரப்பு வாக்குமூலங்கள், சம்பவ இடத்தில் கிடைக்கபெற்ற சாட்சியங்கள் போன்றவற்றை தேடித்தொகுத்தெடுத்து அதன்மூலம் குறித்த அசம்பாவிதத்தின் யதார்த்த நிலையை ஒளிவு மறைவின்றி வெகுசனத்திற்கு தெளிவாக எடுத்துக்கூறுவதே ஒரு ஊடகவியலாளனுடைய கடமையும் பணியுமாகும். இது இன்று நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்தில் பிரபல்யமாக பேசப்படுகின்ற ஊடகவியலாளர், இன்னும் இளம் ஊடகவியலாளர்களை சமூகத்தில் உருவாக்குவதற்காக பல கருத்தரங்குகளின் மூலமாக வழிகாட்டல்களை வழங்கிவருகின்ற ஊடகவியலாளர் பைறூஸ் அறியாத ஒன்றுமல்ல.

ஆனால் இங்கே ஊடகவியலாளர் பைறூஸ் அந்த ஊடக சமாந்திரத்தன்மையை முற்றாகப்புறக்கணித்து ஏதோ இரண்டு இயக்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டது போலவும் அதன் மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் முறையாக சென்றடையாதது போலவும் உன்மைக்குப்புறம்பானதொறு வடிவத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

உண்மையில் மல்வானையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பொறுத்தவரைக்கும் நிவாரணப்பணிக்காக சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் யார்?,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய விடாமல் வன்முறையின் மூலமாக தடுத்தவர்கள் யார்?,
இயக்கரீதியான பிரிவினையை, பிரதேசவாதத்தை தூண்டி குறித்த ஜமாஅத்திற்கு கொலை அச்சறுத்தல் விடுத்தவர்கள் யார்?
என்கிற விபரங்கள் எல்லாமே குறித்த அசம்பாவிதம் நடைபெற்று இருபத்திநான்கு மணிநேரத்திற்குள் ஆதாரபூர்வமாகவும் ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயிலுடைய ஊடக அறிக்கையின் வாயிலாகவும் மிகவும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

காத்தான்குடியில் இருந்து நிவாரணப்பணிக்காக மல்வானைக்கு சென்றவர்கள் மீது வன்முறையை பிரயோகித்த விஷமிகள் யாரென்பதையும் மக்கள் அடையாளம் மிகத்துல்லியமாக கண்டுகொண்டார்கள்.

அவ்வாறிருக்கின்றபோது நடைபெற்ற வன்முறையை இருதரப்பிலும் இடம்பெற்ற முறுகல் நிலையாக, முரண்பாடாக சித்தரித்து வன்முறையாளர்களையும் அவர்கள் மேற்கொண்ட வன்முறைகளையும் முற்றாக மூடிமறைத்து அந்த வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்ட, அநீதியிழைக்கப்பட்ட தரப்பினரையும் வன்முறைக்குக்காரணமானவர்களைப்போன்று, குழப்பத்தை தூண்டியவர்களைப்போன்று சமூகத்தின் மத்தியில் சித்தரிக்க முற்பட்டிருப்பது இந்த ஊடகவியலாளர் பைறூஸுடைய பக்கசார்புத்தன்மையை மிகத்தெளிவாகவே படம்பிடித்துக்காட்டுகிறது.

மாத்திரமல்லாது,
நிவாரணப்பணிக்காக சென்ற தஃவா அமைப்பின் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவிருந்த நிவாரண பொதிகளையும் கிடைக்கவிடாமல் செய்த காடையர் கும்பல் சார்ந்திருந்த இயக்கத்தையும் அதன் பணிகளையும் மாத்திரம் வரிவரியாக சிலாகித்துக்கூறி, அதை மிகப்பெரும் தியாகமாக சித்தரித்திருந்ததில் இருந்தும் ஊடகவியலாளர் பைறூஸுடைய ஓரவஞ்சனை மிகவும் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது.

குறித்த அந்த இயக்கத்தவர்கள் மேற்கொண்ட சுத்திகரிப்புப்பணியையோ மனிதாபிமான நடவடிக்கைகளையோ இங்கே யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நிவாரணப்பணிக்காக வருகை தந்திருந்த அமைப்புக்களின் மத்தியில் குறித்த அந்த வன்முறையாளர்களை உள்ளடக்கிய இயக்கத்தவர்கள் மேற்கொண்ட சுத்திகரிப்பு பணி மாத்திரம்தான் ஊடகவியலாளர் பைறூஸ் உடைய கண்களுக்கும் உணர்வுகளுக்கும் புலப்பட்டுள்ளது என்றால், அதை மாத்திரம்தான் இவர் ஊடகங்கள் வாயிலாக தரகுக்குறிப்புக்களுடன் வெளிப்படுத்துகிறார் என்றால் வன்முறையை மேற்கொண்ட அந்த இயக்கத்திற்கும் சகோ. பைரூஸுக்கும் இடையிலுள்ள அந்த “உட்புறத்து” உறவு என்னவென்ற கேள்வி இங்கே தவிர்க்கமுடியாமல் எழுகிறது.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுவிட்டது என்று அறியக்கிடைத்த உடனேயே தேசிய தௌஹீத் ஜமாஅத் தெருத்தெருவாக, வீடு வீடாக, கடை கடையாக, இரவுபகலாக அலைந்து திரிந்து பன்னிரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையினை நிதியாக திரட்டியதே, அது இந்த ஊடகவியலாளர் பைறூஸுக்கு ஏன் சிரமமான பணியாகத்தெரியவில்லை?

அந்த நிதியைக்கொண்டும் சுமார் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பல நூற்றுக்கணக்கான அத்தியாவசியப்பொருட்களை விலைகொடுத்து வாங்கி அப்பொருட்களை இரவுமுழுக்க உட்கார்ந்திருந்து பொதி செய்தது இந்த ஊடகவியலாளர் பைறூஸுக்கு ஏன் சிரமமான காரியமாகத்தெரியவில்லை?

பொதி செய்யப்பட்ட பொருட்களை எல்லாம் லொறியில் ஏற்றிக்கொண்டு இரவு நேரத்தில் தூக்கத்தை, பசிதாகத்தை பொருட்படுத்தாமல் மல்வானை நோக்கி பயணித்துச் சென்றது இந்த ஏன் ஊடகவியலாளர் பைறூஸுக்கு சிரமமான பணியாகத்தெரியவில்லை?

கொண்டு சென்ற நிவாரணப்பொருட்களை பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளுக்கும் கால்நடையாகவும் படகுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுடைய இருப்பிடங்களை தேடிச்சென்று விநியோகித்துவிட்டு உண்ணமால், பருகாமல் உடலில் ஏற்பட காயங்களுக்கு கூட மருந்திடாமல் மனிதநேயம் ஒன்றே நோக்கமாக கொண்டு செயற்பட்டது இந்த ஊடகவியலாளர் பைறூஸுக்கு ஏன் சிரமமான காரியமாகத்தெரியவில்லை?

இப்பேர்ப்பட்ட தியாகங்களையும் சிரமங்களையும் மேற்கொண்டு பசியோடும், தாகத்தோடும், களைப்போடும் காணப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மீது இருள் சூழ்ந்த வேளையில் கொலை வெறித்தாக்குதல் நடாத்திய காடையர் கும்பலுடைய அந்த ஈனத்தனம் இந்த ஊடகவியலாளர் பைறூஸுக்கு ஏன் கேவலமாகத்தெரியவில்லை?

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினரும் அந்த வன்முறைக்கும் தூபமிட்டது போன்றதொரு மாயபிம்பத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டிய இந்த ஊடகவியலாளர் பைறூஸ், நிராயுதபாணிகளாக நின்றிருந்த அதே தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீது கூரிய ஆயுதங்களாலும் கற்களாலும் அநியாயமான முறையில் கொலை வெறித்தாக்குதல் நடாத்திய நபவிய்யா இளைஞர் இயக்க உறுப்பினர்களின் காடைத்தனத்தை சுட்டிக்காட்டுவதில், கண்டிப்பதில் ஏன் கவனம் செலுத்தவில்லை?

உண்மையில் இந்த ஊடகவியலாளர் பைறூஸுடைய “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டு விடக்கூடாது” ஆதங்கம் உண்மையானதாக இருந்தால் நிவாரணப்பணிக்காக காத்தான்குடியில் இருந்து வருகை தந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரை தங்களுடைய கட்டு மீறிய காடைத்தனத்தால் வன்முறைய பிரயோகித்து துரத்தியடித்த நபவிய்யா இயக்கத்தின் மீதே இவருடைய கண்டனங்களும், விசனங்களும் பதியப்படிருக்க வேண்டும்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவிடாமல் தடுத்து நிறுத்தி அதற்காக காடைத்தனத்தை பயன்படுத்திய அந்த நபவிய்யா இயக்கத்தவர்களை பற்றி எதுவித அதிருப்திகளையும் வெளிக்கொணராமல் மாற்றமாக அவர்களுடைய நற்பணிகளை மாத்திரம் பட்டியலிட்டுவிட்டு “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதில் துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுவிடும்” என்று ஊடகவியலாளர் பைறூஸ் கண்ணைமூடிக்கொண்டு பகல் கனவு காண்பதன் மர்மம்தான் என்ன?

அப்படியானால் காத்தான்குடியில் இருந்து பன்னிரண்டு இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட நிவாரணப்பொதிகளை எடுத்துக்கொண்டு மல்வானை நோக்கிச்சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் அங்கே சண்டையிட்டு சமர் செய்வதற்காகத்தான் சென்றார்களா?

“வெளியூர் ஒன்றிலிருந்து நிவாரண பணிக்கு வந்த ஒரு தரப்பினருக்கும் மற்றுமொரு வெளியூரிலிருந்து சுத்திகரிப்பு பணிக்கு வந்த தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு” என்ற மூடலான வாக்கியத்தினூடாக இந்த ஊடகவியலாளர் பைறூஸ் வெளிப்படுத்த விளைகின்ற விடயதானம்தான் என்ன?

நபவிய்யா இளைஞர் அமைப்பினர் நிவாரணப்பொருட்களை முறைகேடாக அபகரிக்கமுற்பட்டுள்ளார்கள். அதற்கு ஒத்தாசை வழங்காத காரணத்தினால் அந்த நபவிய்யா இயக்கத்தை சேர்ந்த பலர் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இந்த யதார்த்தவாத உண்மையை வெளிப்படையாக எடுத்துக்கூறி இனிமேலும் இவ்வாறான இழிசெயல்கள் அப்பிரதேசத்தில் நடைபெறக்கூடாது என்று பிரதேச மக்களையும் மேற்கொண்டு நிவாரணப்பணிக்காக வருகின்ற குழுக்களையும் விழிப்புணர்வூட்டுவதில் நாடறிந்த ஊடகவியலாளரான இந்த பைறூஸுக்கு முன்னால் இருக்கின்ற தடைகள்தான் என்ன?

மனிதாபிமானப்பணிக்காக சென்ற ஒரு தரப்பார் அநீதியான முறையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. உயிரச்சுறுத்தலால் சென்ற நோக்கத்தைக்கூட முழுமையாக நிறைவேற்றாமல் அவசரமாக இடம்பெயரவேண்டிய கட்டாய, நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தனையும் நடந்த பிறகும் உண்மை நிலையை மூடிமறைத்து இருதரப்புக்களுக்கிடையிலான முரண்பாடென்று அப்பட்டமான பொய்யைக்கூறி சமூகத்தை ஏமாற்ற எத்தனித்த இந்த ஊடகவியலாளர் பைறூஸுக்கும்,

அழுத்கம வன்முறையின் போது “முஸ்லிம்களுக்கும் சிங்கள குழுக்களுக்கும் இடையில் இனரீதியான மோதல்” என்று ஈனத்தனமாக செய்தி வெளியிட்ட இனவாத, துவேஷதார ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாடுதான் என்ன?

அழுத்தகம நகர முஸ்லிம்கள் வன்முறையை தூண்டினார்களா?
இனவாதிகளோடு சரி சமமாக நின்று கைகலப்புக்களில் ஈடுபட்டார்களா?
இல்லை. ஆனால் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மாத்திரம் “முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் முரண்பாடு” என்று பொய்யாகப்புனையப்பட்ட கதைகளை கூறி இஸ்லாமிய சமூகத்தின் மீது சேற்றை வாரியிறைத்தன.

இன்று அதே பாணியில்தான் ஊடகவியலாளர் பைறூஸும் “இரு குழுக்களுக்கிடையிலான முரண்பாடு” என்று உண்மைக்குப்புறம்பான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாஅத் என்பது காத்தான்குடியை தளமாகக்கொண்டு இயங்கிவருகின்ற ஒரு ஏகத்துவ பிரச்சார அமைப்பாகும். அவ்வமைப்பானது வெறுமனே இஸ்லாமிய பிரச்சாரத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல் மிகவும் கணிசமான அளவு சமுதாயத்தின் நலன்கருதிய நற்பணிகளிலும் அறவழிப்போராட்டங்களிலும் அர்ப்பணிப்போடு செயலாற்றுகின்ற ஒரு முன்மாதிரிமிக்க அமைப்பாகும். அப்படிப்பட்ட அமைப்பையும் அதன் பணியையும் அதே காத்தான்குடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட ஊடகவியலாளர் பைறூஸ் இதுவரைக்கும் உரியமுறையில் அறியாமல் இவ்வாறான கண்மூடித்தனமான முறையில் கருத்துக்கூறியிருப்பது வேதனையாது மாத்திரமல்லாது வேடிக்கையானதும் கூட.

ஆகவே,
இந்த விவகாரத்தை பொறுத்தவரைக்கும் சமூக வலைத்தளங்களில் இன்னும் ஏனைய முகவரியற்ற அனாமதேய இணையதளங்களில் சாதாரண நபர்கள் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அதற்கு இந்தளவுக்கு நீண்ட, விரிவான ஆக்கத்தின் மூலமாக பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் இங்கே விமர்சனத்தை முன்வைத்திருப்பவரோ இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநித்துவ ஊடகம் என அடையாளப்படுத்தப்படுகின்ற விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்னும் பொறுப்புமிக்க பணியில் இருக்கின்ற ஊடகவியலாளர் பைறூஸ் என்பதாலும் அவருடைய இந்த விமர்சனமானது தமிழ் பேசும் இணையத்தளங்களிலேயே இஸ்லாமிய சமூகத்தின் உரிமைக்குரலாக வெளியிடப்பட்ட காரணத்தினாலுமே இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து விரிவான தெளிவுரை எழுதவேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டது.

எனவே “அல்லாஹ்வுக்காக முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்..!” என ஆதங்கத்துடன் வேண்டிக்கொண்ட ஊடகவியலாளர் சகோதரர் பைறூஸிடம், இனிவரும் காலங்களிலேனும் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுமிடத்து அதன் உண்மை நிலவரம் என்னவென்பதை கண்டறிந்து வெளிப்படையான தகவல்களை வெளியிட்டு “அல்லாஹ்வுக்காக ஊடக நியாயவாதத்தன்மையை நிலைநாட்டுமாறு” அக்கறையுடனும் கண்ணியமான முறையிலும் வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s