மல்வானையில் நிவாரணப்பணியில் ஈடுபட்ட NTJ உறுப்பினர்களுக்கு நடந்தது என்ன?

  • முஹம்மது நியாஸ்

ntj logoமல்வானை: காத்தான்குடியில் இருந்து சுமார் பன்னிரண்டு இலட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப்பொருட்களுடன் மல்வானை பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினை மல்வானையை நெருங்கும் வழியில் அங்கே மீட்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் “நீங்கள் ஏதாவது பிரதேசங்களுக்கு செல்லவேண்டியிருந்தால் வாருங்கள் நாங்கள் உங்களை அழைத்துச்செல்கிறோம்” என்று மிகவும் வரவேற்புடன் வாக்களித்துள்ளார்கள்.

அவர்களைக்கடந்து சற்று தூரம் சென்றபோது மஸ்ஜிதுன் நபவிய்யா இளைஞர் இயக்கம் என்னும் ஒரு குழுவினரால் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் வழி மறிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வழிமறித்த குழுவினர் நிவாரணத்திற்காக நீங்கள் கொண்டுவந்திருக்கின்ற பொருட்களை தங்களிடம் தருமாறும் அப்பொருட்களை தாங்களே உரிய பிரதேசங்களுக்கு கொண்டு விநியோகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் பொருட்களை கொண்டு சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் சகோதரர்கள் “முதலில் நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காணவேண்டும். அத்தோடு இந்த பொருட்களை எங்களுக்கு வழங்கியவர்கள் நீங்களே உங்களுடைய கைகளால், உங்களுடைய மேற்பார்வையின் கீழ் வழங்கிவிட்டு வாருங்கள் என்று எங்களிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளார்கள். உங்களால் முடிந்தால் நீங்களும் எங்களோடு கூட வந்து பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதைக்கேட்ட அந்த குழுவோ “அவ்வாறில்லை, இந்தப்பிரதேசத்தில் நாங்கள் ஒரு முறைமையினூடாக நிவாரணங்களை வழங்கி வருகிறோம், எனவே நீங்கள் எங்களிடமே பாரமளிக்க வேண்டும்” என் விடாப்பிடியாக வற்புறுத்தியுள்ளது. ஆயினும் இந்த வெள்ள நிவாரணத்தின்போது ஏற்பட்டுள்ள சில முறைகேடுகள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டு அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் யாருமே தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை யாரிடமும் ஒப்படைக்காமல் நேரடியாக ரக்ஷபான பெரிய ஜும்ஆ பள்ளிவாயிலை சென்றடைந்துள்ளனர்.

குறித்த ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயிலைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு தப்லீக் ஜமாஅத்தின் ஆளுகைக்குட்பட்ட பள்ளிவாயிலாக இருந்தபோதிலும் அப்பள்ளிவாயிலுடைய நிருவாகத்தினர் கொள்கைரீதியான எதுவித பாகுபாடுகளையும் வெளிக்காண்பிக்காமல் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினுடைய நிவாரணக்குழுவை மிகுந்த மரியாதையுடனும் சகோதர வாஞ்சையுடனும் வரவேற்று உபசரித்துள்ளனர்.

அந்த ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகிகளுடைய உதவியோடுதான் அப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கும் நூற்றுக்கும் அதிகமான சிங்கள குடும்பங்களுக்கும் நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விஜய மாவத்தை என்னும் பகுதியிலும் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இந்த நிவாரணப்பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கையளிக்கப்படதன் பின்னர் மல்வானை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் நாற்புறமும் நீரால் சூழப்பட்டு ஒரு குட்டித்தீவாக மாறிப்போய்விட்ட காந்திவெவ என்னும் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அப்பகுதிக்கு குறிப்பிடத்தக்க அளவில் எந்தவொரு நிவாரண உதவியும் சென்றடையவில்லை என்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் காந்திவெவ பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தங்களுடைய உதவிகளை மேற்கொள்ளும் நோக்கில் இருள் சூழத்தொடங்கிய மஃரிப் நேரம் ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகத்தை சேர்ந்த சில நிருவாகிகளுடன் வள்ளங்களில் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தப்போதுதான் குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே மல்வானையை நெருங்கும்போது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவிடம் பொருட்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த நபவிய்யா இளைஞர் இயக்கம் என்னும் குறித்த அந்த காடையர் கூட்டம் தற்போது நிவாரணக்குழு வள்ளங்களில் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கின்ற இடத்திற்கு வந்து சேர்ந்து காந்திவெவ பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் காந்திவெவ பகுதி நிலவரத்தை எடுத்துக்கூறியும் இந்த நிவாரணத்தினுடைய அவசியப்பாட்டை விளக்கியும் அக்காடையர் கூட்டம் அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காது தகராறு செய்வதிலேயே குறியாக இருந்துள்ளது.

இந்தத்தகராறுக்கு குறித்த காடையர் கூட்டம் முழுக்க முழுக்க கபுறு வணக்க சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த கூட்டம் என்பதும், ஏற்கனவே தேசிய தௌஹீத் ஜமாஅத்திடமிருந்து பொருட்களை கையகப்படுத்தும் தமது முயற்சியில் ஏற்பட்ட தோல்வியின் வெளிப்பாடுமே காரணம் என அப்பிரதேசவாசிகளாலேயே கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கும்பல் காலி, பேருவலை போன்ற பிரதேசங்களில் இருந்து மல்வானை பகுதிக்கு வந்து சேர்ந்த காடையர் கும்பல் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஆத்திரமடைந்த அந்த காடையர் கும்பல் தமது வன்முறையின் முதற்கட்டமாக தௌஹீத் இயக்கங்களை தூற்றியவாறே தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரண லொறியில் முன்பக்கமாக கட்டியிருந்த விளம்பர பேனரை கிழித்து வீசியுள்ளது.

இதன் போது பொறுமைகாத்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் அந்த சந்தர்ப்பத்தில் திடீரென பெய்த மழையின் காரணமாக லொறிக்குள் ஏறி கீழ்த்தட்டை இழுத்து மூடியுள்ளனர். அப்போது கீழே நின்றுகொண்டிருந்த அக்காடையர் கும்பல் குப்பை வாரியொன்றை வீசிஎறிந்ததில் லொறிக்குள் இருந்த MSM. அஜ்வத் என்னும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த உறுப்பினருக்கு கையில் இலேசான வீக்கமொன்று ஏற்பட்டதுடன் மேலும் ஒரு கண்ணாடி போத்தலொன்றை அக்காடையர் கும்பல் வீசியபோது அது தலையில் பட்டு இலேசான வீக்கமொன்றும் அதே சகோதரருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு கனமான பொருள் ஒன்றை அக்காடையர் கூட்டம் தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களை நோக்கி வீசிய போது அது லொறியில் பட்டு திரும்பி அலாவுதீன் என்னும் ஓர் உறுப்பினருடைய கண்ணுக்கு அருகில் சிறிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

காடையர் கூட்டத்தின் வன்முறைகள் எல்லைகடந்து செல்லவே லொறிக்குள் அகப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழு மிகப்பாரியதொரு உயிரச்சுறுத்தலை உணர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சிலர் ஒன்றுகூடி காடையர் கும்பலை கட்டுப்படுத்த முயற்சித்தும்கூட முடியாமல் போகவே காந்திவெவ பகுதிக்கு செல்வதற்காக தேசிய தௌஹீத் ஜமாஅத் எடுத்த முயற்சி கைவிடப்பட்டது. அத்துடன் எப்படியாவது அவ்விடத்தை விட்டும் வெளியேறி உயிரை பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்த நிலையை உணர்ந்ததால் மல்வானையை விட்டும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அவசரமாக வெளியேறியது.

அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து வெளியேறி கொழும்பை நோக்கிச்செல்வதற்காக வரும் வழியில் பூகொட பிரதேசத்தில் உள்ள ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகிகளுக்கு அறிமுகமான முஸ்லிம் சகோதரர்களிடத்தில் மீதமிருந்த நிவாரணபொதிகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சரியாக இனங்கண்டு ஒப்படைக்குமாறு அமானிதமாக கையளித்துவிட்டு தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.

இதுதான் நேற்றையதினம் காத்தான்குடியிலிருந்து வெள்ள நிவாரண உதவிக்காக மல்வானை பிரதேசத்திற்கு சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் அங்கே சந்தித்த பிரச்சினைகளின் சாராம்சமாகும்.

இந்த அறிக்கையானது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமைப்பிரச்சாரகரும் குறித்த நிவாரணப்பணியில் தலைமை வகித்தவருமான மௌலவி அல் ஹாபிழ் MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி) தொலைபேசியூடாக என்னிடம் பிரத்தியேகமாக வழங்கிய தகவல்களில் இருந்தே தொகுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுதவிர ரக்ஷபான பெரிய ஜும்ஆ பள்ளிவாயிலுடைய ஆலோசனையை மதிக்காமல் தன்னிச்சையாக, வீடு, வீடாக கொண்டு சென்று நிவாரண பொதிகளை கையளித்ததால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்பதையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் அவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்பறிக்கையாக தற்போது ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் ஊடாகவே உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த சம்பவத்தை பொறுத்தவரைக்கும் இன, மத பேதங்களை கடந்து காத்தான்குடியில் இருந்து பல இலட்ச ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப்பொருட்களுடன் மனிதாபிமான உதவிக்காக சென்ற சகோதர்களை இஸ்லாமியர்கள் என்று தமக்குத்தாமே கூறிக்கொள்கின்ற சில ஈனப்பிறவிகள் மேற்கொண்ட இழிசெயல்தான் என்பது இங்கே மிகத்தெளிவாகவே அடையாளங்காணப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்நாட்டில் எரிந்துகொண்டிருக்கின்ற இனவாதத்தீயை இவ்வாறான அனர்த்தங்களின் போது மேற்கொள்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் மூலமாகவேனும் தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மிகப்பாரிய முயற்சிகள் சில மனிதநேயமும் சமுதாய அக்கறையுமற்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளால் இடைநடுவில் கை நழுவிப்போய் விடுகின்றன என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுகொண்டேதான் ஆகவேண்டும்.

One Response to “மல்வானையில் நிவாரணப்பணியில் ஈடுபட்ட NTJ உறுப்பினர்களுக்கு நடந்தது என்ன?”

  1. Salih Khan Naleemi Says:

    Zahran

    Organize a meeting next week to talk about this. You are showing the weakness of our muslim community to non- muslims.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s