எமது காத்தான்குடி நகரமானது, இந்த நாட்டிலும் முழு உலகிலும் முன்மாதிரியான ஒரு முஸ்லிம் நகரம் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொண்டாலும், இங்கு நாளாந்தம் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களைப் போன்று, பாலியல் விபச்சாரச் செயற்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஏற்கனவே கர்பலா பாலியல் துஷ்பிரயோகம், அல்அமீன் வித்தியாலய ஆசிரியர்கள் – மாணவிகள் காதல் விவகாரம் என்ற விடயங்களை உலகறிய அம்பலப்படுத்தி ஓய்ந்திருந்த ஊடகங்களுக்கு இன்று 18ம் திகதி நண்பகலில் மற்றுமொரு ஆசிரியர் – மாணவி தகாத உறவு பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று காலை 10 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
வாழைச்சேனையைச் சேர்ந்த சின்னத்தம்பி முகம்மது ஹனீபா (வயது: 58) என்பவர் தொடர்பில் இணைந்தார்.
என்னை நேரில் சந்தித்து சில விடயங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றார். நண்பகல் 12:30 மணிக்கு வீட்டுக்கு வருமாறு அவருக்கு நேரம் கொடுத்தேன்.
குறித்த நேரத்திற்கு வீட்டுக்கு வந்தார். அவரது மகளின் மகளான க.பொ.த. உயர்தர கணிதப் பிரிவில் ஏற்கனவே பரிட்சைக்குத் தோற்றி 2B + 1S பெறுபேறு எடுத்த நிலையில், இரண்டாவது தடவையும் க.பொ.த பரிட்சைக்குத் தோற்றும் எண்ணத்துடன் பிரத்தியேகமாகக் கற்று வருகின்ற தனது பேத்தி, மட்டக்களப்பில் நடாத்தப்பட்டு வரும் பிரபல பிரத்தியேக டியூட்டரி ஒன்றில் இரசாயனவியல் பாடத்தைப் பயின்று வருகிறார்.
காத்தான்குடி 06ம் குறிச்சி ஜின்னாஹ் வீதியைச் சேர்ந்தவரும், மட்/ ஏறாவூர் றஹ்மானியா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கற்பிப்பவருமான எம்.எம்.எம். மர்சூக் B.Sc என்பவரே எனது பேத்திக்கும் இப்பிரத்தியேக வகுப்பில் இரசாயனவியல் பாடத்தைக் கற்பித்து வருகிறார்.
என்னுடையதும், எனது பேத்தியினுடையதும் இரண்டாவது தடவையும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தினால் நான் காத்தான்குடி முதலாம் குறிச்சியில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து எனது பேத்தியையும், எனது பேரனையும் இவ்வூரில் தங்க வைத்துப் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் படிப்பித்து வருகின்றேன். பேரன் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கற்று வருகின்றார்.
இந்நிலையில், இந்த மர்சூக் ஆசிரியர் மட்டக்களப்பு டியூட்டரியில் பாடம் நடாத்துவதோடு, எனது வீட்டுக்கும் வந்து பேத்திக்கு பாடம் கற்பிக்க முன்வந்தார். நானும் அதை நல்லெண்ணத்துடன் வரவேற்றேன்.
ஆனால் அவர் கூடுதலான நேரம் எமது வீட்டில் தங்கியிருப்பதையும், எனது பேத்தியுடன் வித்தியாசமான கதைகள் கதைப்பதையும், நடந்து கொள்வதையும் அவதானித்த எனக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது.
கடந்த வியாழக்கிழமை எனது பேத்தியின் தொலைபேசியை நான் பரீட்சித்தபோது அதில் இவரது குறுஞ்செய்திகளும் காணப்பட்டன.
இதனால் இவரது தொடர்பைத் துண்டிக்குமாறு பேத்திக்கு அறிவுரை வழங்கினேன்.அந்தக் குறுஞ்செய்திகளைப் பார்வையிட்ட நானும், எனது பேரனும் மட்டக்களப்புக்குச் சென்று பாடம் நடாத்திக் கொண்டிருந்த அவரிடம் வினவினோம். இந்த வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு அவரை மாணவர்கள் முன்னிலையிலேயே நாம் எச்சரித்து விட்டு வந்தோம்.
பின்னர் காத்தான்குடி 06ம் குறிச்சி ஜின்னாஹ் ஹாஜியார் வீதியிலுள்ள அவரது வீட்டைத் தேடிச் சென்றேன். அங்கு சென்று இவரது வீட்டைப்பற்றி விசாரித்தபோது, தாருஸ்ஸலாம் பள்ளிவாசலுக்குப் பின்பக்கம் சிவப்பு பெயின்ட் அடித்துக் காணப்பட்ட அழகான பெரியதோர் மாடி வீட்டை அப்பகுதி மக்கள் காட்டினார்கள்.
அவ்வீட்டுக்குச் சென்று மர்சூக் ஆசிரியரின் மனைவி மற்றும் அவரது மாமனாரிடம் இவரது செயற்பாடுகள் குறித்து தெரிவித்தேன்.
மறுநாள் மர்சூக் ஆசிரியர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எனது வீட்டுக்குச் சென்று மனைவியிடமும், மாமாவிடமும் சொல்லி அவமானப்படுத்தி விட்டீர்கள். என்னை வீட்டை விட்டுச் செல்லுமாறு மனைவியும், மாமாவும் சொல்லி விட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்.
அவரால் எனது பேத்திக்கு ஏதும் ஆபத்து நிகழும் என்ற அச்சத்தில் நான் இனி படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று எனது பேத்தியை வாழைச்சேனைக்கு கூட்டிக்கொண்டு சென்று விட்டேன்.
வெளியூர் மாணவிகள் காத்தான்குடியில் தங்கியிருந்து படித்தால் சம்மேளனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அறிவித்ததற்கமைய, நானும் சம்மேளனத்தில் எனது பேத்தியைப்பற்றிச் சொல்லி பதிவு செய்துள்ளேன்.
நேற்று 17ம் திகதி சம்மேளனத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து இந்த விடயத்தை எத்தி வைத்தேன்.
அவர் இன்று சம்மேளன அலுவலகத்தில் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்குமாறு ஆலோசனை கூறினார். இனித்தான் நான் அந்தக் கடிதத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்.
மர்சூக் ஆசிரியர், அவரின் மனைவி மற்றும் மாமனாரின் தொலைபேசி இலக்கங்களையும் நான் உங்களுக்குத் தருகின்றேன். நீங்கள் அவர்களுடனும் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள். நம்பிக்கையுடன் படிக்கவும், மார்க்க்கல்வி கற்கவும் செல்கின்ற எமது பெண்பிள்ளைகளிடம் மௌலவி மார்களும், ஆசிரியர்களும் இவ்வாறெல்லாம் தவறான முறையில் நெருங்கக்கூடாது. மாணவர்களையும், மாணவிகளையும் நாம் கண்காணிப்பதை விட ஆலிம்களையும், ஆசிரியர்களையுமே நாம் எச்சரிக்கையுடன் அவதானிக்க வேண்டியுள்ளது.
இந்த விடயத்தை நீங்கள் உங்களின் பத்திரிகையில் பிரசுரித்து ஆசிரியர்கள், மௌலவிமார்கள், ஊர்த்தலைவர்கள், மாணவ மாணவிகள் மத்தியில் மேலும் விழிப்புணர்வையும், எச்சரிப்பையும் ஏற்படுத்துங்கள் -என அந்த 58 வயது மூத்தவாப்பா மிக உருக்கமாக கேட்டுக் கொண்டார். அவரது அனுமதியுடன் அவரது உரையை நான் ஒளிப்பதிவும் செய்துள்ளேன்.
இதையடுத்து மர்சூக் ஆசிரியரின் 077 433 2665 என்ற இலக்கத்திற்கு பகல் 01:46க்கு அழைப்பை ஏற்படுத்தினேன். மறுமுனையில் மணி ஒலித்து தன்பாட்டில் ஓய்ந்தது. அவர் தொடர்பில் இணையவவில்லை. அதனால் அவரது தரப்பு விளக்கத்தைப் பெற முடியவில்லை.
பின்னர் மர்சூக் ஆசிரியரின் மனைவியின் இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினேன். அவர் பதிலளித்தார். என்னிடம் குறித்த மாணவியின் மூத்தவாப்பா முகம்மது ஹனீபா நேரில் வந்து அவரது கணவரைப் பற்றித் தெரிவித்த விபரங்களைச் சுருக்கமாக விபரித்து, இதுபற்றிய உங்களது கருத்து என்ன? எனக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
அந்த மூத்தவாப்பா வந்து எங்களிடம் விடயத்தைச் சொன்னதும் நானும், வாப்பாவும் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் இதைப்பற்றி விசாரித்தோம். அவள் நடந்ததைச் சொன்னாள். எங்களுக்கு விடயம் உண்மைதான் என்பது தெளிவாகியது.
இதற்கு முன்னரும் அவரால் (மர்சூக் ஆசிரியரால்) இப்படியான பிரச்சினைகள் சிலவற்றுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் நிறைய அவருக்குப் புத்திமதிகள் கூறியுள்ளோம். என்றாலும் அவரது நடத்தையில் திருத்தம் எதுவும் நிகழவில்லை.
இதனால் இந்தச் சம்பவம் எமக்கு ஊர்ஜிதமானதும் அவரை நேற்றே (மே 17) எனது வீட்டில் இருந்து போய்விடுமாறு சொல்லி அனுப்பி விட்டேன். அவர் இப்போது அவருடைய உம்மாவின் வீட்டில்தான் இருக்கிறார்.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்டதற்கு, 6 மற்றும் 5 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னார்.
அதையடுத்து மர்சூக் ஆசிரியரின் மாமாவின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டேன். தொடர்புக்கு வந்த அவரும் மேற்கண்டவாறே கூறினார்.
இனி அவரை இந்த வீட்டுக்குள் எடுத்தால் எமது குடும்பத்திற்கே பெருத்த அவமானம் ஏற்படும் என்றார்.
மட்டுமல்ல, தன்னிடம் கல்வி கற்க வரும் மாணவிகளிடம் இவ்வாறெல்லாம் அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் விடயத்தில் பெண் கொடுத்த தரப்பினர்தான் தீவிரமானதும், தீர்க்கமானதுமான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இவ்வாறான அயோக்கிய ஆசிரியர்களுக்கு கண் திறக்கும் என்றும் திடகாத்திரமாகக் கூறினார்.
பிரதான வீதியில் இடம்பெறும் விபத்துக்களைக் குறைப்பதற்காக கலந்துரையாடல்கள் நடாத்தி, திட்டங்கள் தீட்டி, வரைபடங்கள் வரைந்து, இலவசமாகப் பத்திரிகைகள் அச்சிட்டு விநியோகித்து நீங்க செய்ததா? நாங்க செய்தோமா? என்று அறிக்கைளும் விட்டு மக்களை விழிப்பூட்டிய எமதூர் அரசியல் தலைவர்களும், முக்கிய பொறுப்பிலுள்ளவர்களும் இந்த வாகன விபத்துக்களைப் போல நாளாந்தம் அதிகரித்து வரும் ஆண் பெண் கள்ள உறவுகளையும், மாணவிகளை முறைகேடாகப் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்த எத்தனிக்கும் ஆசிரிய சிந்தாமணிகளின் அட்டகாசங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் முறையான கலந்துரையாடல்களை நடாத்தி, திட்டங்கள் தீட்டி, வரைபடங்கள் வரைந்து, இலவசமாகப் பத்திரிகைகள் அச்சிட்டு விநியோகித்து, அடிக்கடி அறிக்கைகள் விடுத்து எமது மண்ணின் மானத்தையும், மக்களின் மரியாதையையும் காப்பாற்ற முன்வர வேண்டும்.
கொமன்ட்ஸ் அடிக்கும் பேய்புக் போராளிகளின் கவனத்திற்கு:
அடுத்தவரின் மானத்தை நான் துருவி ஆராய்ந்து இங்கே அம்பலப்படுத்தி சகோதரனின் இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தத்தைக் குடிக்கவில்லை. மாறாக, தனது குடும்ப மானத்தையும், தனது பேத்தியின் வாழ்வையும் பாதுகாக்கும் நோக்குடன் பெரும் தலைகுனிவை அடையவிருந்த 58 வயதுடைய ஒரு பொறுப்புள்ள தகப்பன் எனது வீடு தேடி வந்து நேரில் முறையிட்ட அநியாய சம்பவமே இதுவாகும்.
இனி ஊர்கூடி இந்த ஆசிரியரின் நடத்தைக்குத் தீர்ப்பு வழங்கட்டும். அல்லது கண்ணை மூடிக்கொண்டு இருக்கட்டும். –புவி றஹ்மதுழ்ழாஹ்
(வாரஉரைகல்)