“விமர்சனங்களை எப்படி கையாள்வது ..? சில ஆலோசனைகளும் குறிப்புகளும்! ” பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

  • NFGG  ஊடகப் பிரிவு

rahumanசமூக அரசியல் உழைப்பில் ஈடுபடும் போது ‘விமர்சனங்கள்’ தவிர்க்க முடியாதவை.

NFGG  யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் எழுதிய ஆக்கம் ஒன்றினை அனுப்பி வைக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களே சூடான விமர்சனக் களமாக மாறிவருகின்றன.

அந்த வகையில், விமர்சனங்களை கையாளும்போது நமது சகோதரர்கள் கனிக்க வேண்டிய சில குறிப்புகளையும் ஆலோசனைகளும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

1. தவறை ஏற்றுக் கொள்ளும் மனோநிலை எம்மிடம் அடிப்படையில் இருக்க வேண்டும். எம்மைப்பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களில் நியாயமிருப்பின் அதனை ஏற்றுக் கொள்ளும் முதல் நபர்களாக நாம் இருக்க வேண்டும். அதை விடுத்து எல்லா விமர்சனங்களையும் முறியடிக்க நாம் முயற்சிக்கக் கூடாது. எமக்கெதிரான பொய்களுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் போன்றே எம்மைப்பற்றிய குறைகளையும் எமது தவறுகளையும் ஏற்றுக் கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நமது சொந்தத் தவறை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலை கொண்ட மனிதர்களால்தான் சமூக உழைப்பில் நேர்மையான பாதையில் முன்னேறுவதும் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதும் சாத்தியமாகும்.

2. விமர்சனங்கள் பலவகைப் படுகின்றன. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் (Constructive Criticism), அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொண்ட விமர்சனங்கள் (Objective Criticism), நடுநிலையான திறந்த மனதுடனான விமர்சனங்கள் (Open Minded or neutral Criticism), அப்பாவித்தனமான அல்லது பிழையான புரிதலின் அடிப்படையிலான விமர்சனங்கள் (Innocent or Ill-informed Criticism), பிழையான மனப்பதிவின் காரணமாக ஏற்பட்டும் விமர்சனங்கள் ( prejudiced or subjective Criticism), அதே போன்று பகைமையை வெளிப்படுத்தும் விமர்சனங்கள் ( Hostile Criticism) என பல வகையாக அவை அமையலாம்.

அந்த வகையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களின் தரம் பற்றிய மதிப்பீடு நம்மிடம் தெளிவாக இருக்க வேண்டும். எமக்கெதிராக சொல்லப்படும் எல்லாவகை விமர்சனங்களுக்கும் நாம் பதில் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. பல சந்தர்ப்பங்களில் மௌனமே சிறந்த பதில் என்பதை மறந்து விடக்கூடாது.

3. விமர்சனத்திற்குட்படுத்தபடுகின்ற ஒரு விடயம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரமா அல்லது சமூக நலன்சார்ந்த விடயமா என்பதனை எப்படி வரையறை செய்வது என்ற தெளிவீனம் பரவலாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக தனிநபர் விவகாரங்களை குறிவைத்து தாக்குவதாக பலசந்தர்பங்களில் விமர்சனங்கள் அமைந்து விடுகின்றன. ‘ஒருவரின் விமர்சனத்திற்குரிய நடவடிக்கையானது சமூக நலன்களை பாதிக்காத வரை அது சமூக நலன் சார்ந்த விடயமாகாது’ என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

எமக் கெதிரான விமர்சனங்கள் பல நமது தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைப்பதாக அமைந்தாலும்கூட அவற்றிற்கு நாம் பதிலளிக்கும் போது அதே வழிமுறையை கையாளவே கூடாது.

4. விமர்சனங்களுக்கான எமது பதில் கருத்துக்களை எழுதும் போது இரண்டு வகையான கேட்போர் ( audience ) நம்முன்னே உள்ளனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக, அந்தக் கருத்தை எழுதியவர். அடுத்ததாக அந்தக்கருத்தை உண்மையென நம்பி விடக்கூடிய ஏனையோர். முதலாமவர் வேண்டுமென்றே அநியாயமான ஒரு விமர்சனத்தை சொன்னாலும்கூட அதனைப் பொறுமையுடனும் நிதானத்துடனும் கையாள வேண்டும். இங்கு எமது பிரதான நோக்கம் அநியாயமான விமர்சனத்தை முன்வைப்பவருக்கு தெளிவுபடுத்துவதை விடவும், அவரது தவறான கருத்தை நியாயமென நம்பும் ஏனையோர்களுக்கு தெளிவுபடுத்துவதே என்பதை மறந்து விடக்கூடாது.

5. இவ்வாறு எமது கருத்தை அடுத்தவர்களிடம் தெளிவு படுத்த வேண்டும் என்றால் முதலில் அவர்களது உள்ளத்தையும் மனச்சாட்சியையும் தொடுவதாக நமது கருத்துக்கள் இருக்க வேண்டும். அதற்கு நமது எழுத்துக்களில் ஒரு தன்னடக்கமும் பணிவும் சகோதரத்துவ வாஞ்சையும் நாகரீகமும் இருக்க வேண்டும்.

6. எமது பதில் கருத்துக்களால் எமக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டோரை எமது நியாயத்தின் பக்கம் கொண்டு வர முடியாவிட்டாலும் அவர்களை ஒரு நடுநிலை (neutral ) மனோநிலைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். எனவே , எமது பதில் கருத்துக்கள் முரண்பாடுகளையும் பகைமையினையும் வளர்ப்பதாக கண்டிப்பாக இருக்கக்கூடாது.

7. எமது பதில் கருத்துக்கள் ஆதார பூர்வமாகவும், உண்மையான தகவல்கள் அடிப்படையிலும் முடியுமானால் ஆவணங்கள் மூலமான ஆதாரங்களோடும் இருப்பதோடு, அவற்றை புரிந்து கொள்ளத்தக்க உதாரணங்களோடும் எளிமையான முறையில் தர்க்க ரீதியாகவும் முன்வைக்க வேண்டும். இவை எதுவுமற்ற வெற்றுக் கருத்துகளாகவோ அல்லது கிண்டல், கேலிகளாகவோ எமது கருத்துக்கள் ஒரு போதும் அமையக் கூடாது.

8. சமூக அரசியல் மாற்றமொன்றிற்காக ஊடக ரீதியாக நாம் மேற் கொள்ளும் உழைப்பு ஒரு வகை போராட்டமேயாகும். இதற்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. அந்த தர்மத்தின் பிரகாரம் எமது சுய விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமேயில்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது.

9. ஒருவர் மீது அல்லது ஒரு அமைப்பு மீது நாம் கொண்டுள்ள அன்பும் பற்றும் அவர்/அதன் மீதான நியாயமான விமர்சனங்களை மறுக்கச் செய்து விடக்கூடாது. அதேபோன்று, இன்னொருவர் மீதுள்ள வெறுப்பானது அவர் சொல்லும் நியாயமான விமர்சனங்களை ஏற்பதற்கு தடையாகவும் அமைந்து விடக்கூடாது.

10. கடைசியாக, நாம் மேற்கொண்டு வரும் சமூக அரசியல் மாற்றத்திற்கான உழைப்பு இறைவனின் பொருத்தத்தையும் கூலியையும் நாடியது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் எம்மை நோக்கி சொல்லப்படும் வசைகளும் அபாண்டங்களும் கூட நமக்கு நன்மையைப் பெற்றுத் தரும் விடயங்களே என்பதனை மனதிற் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s