மக்களுக்கு தேவைகள் இருக்கின்ற இடத்தில்தான் சேவைகளைச் செய்ய வேண்டும்! மட்டக்களப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ

  • புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ்

unpமட்டக்களப்பு:  மக்களுக்கு தேவைகள் இருக்கின்ற இடத்தில்தான் சேவைகளைச் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு முடிவடைவதற்குள் மேலும் இவ்வாறான 10 எழுச்சிக் கிராமங்களை உருவாக்கி வறிய மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள காமாட்சிக் கிராமத்தில் ‘மீள் எழுச்சி கம்உதாவ’ திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் விழா  (15.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் சஜித் பிறேமதாஸ தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

unp

‘நாட்டு மக்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் இருந்து, கிடைக்கும் நன்மைகளையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். 2025ம் ஆண்டாகும்போது இம்மாவட்டத்தில் வீடற்றவர்கள் என்கின்ற நிலைமை இல்லாதளவுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலே நாம் அக்கறை எடுத்துள்ளோம்.’

‘மக்களுக்குத் தேவைகள் இருக்கின்ற இடத்தில்தான் சேவைகளைச் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைத் திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட ஒரு இலட்ச ரூபாவுக்கு மேலதிகமாக, அந்த வீடுகளை முழுமையாகத் திருத்தம் செய்வதற்கான உதவிகளும் வழங்கப்படும். இவ்வாறு பத்தாயிரம் வீடுகளை முழுமையாகத் திருத்தம் செய்வதற்கான இந்த உதவிகளை வழங்குவதற்கும் நாம் முயற்சிகளை எடுத்துள்ளோம்’ என்றார்.

sajith musthaffa

இந்த வீடமைப்புத் திட்டமானது, முன்னாள் ஜனாதிபதி ஆர். பிறேமதாஸவினால் அவர் இந்த நாட்டின் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சராக இருந்தபோது முன்னெடுக்கப்பட்ட ‘கம் உதாவ’ நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தற்போது வீடமைப்பு அமைச்சராகவுள்ள அவரது மகன் சஜித் பிறேமதாஸவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘மீள் எழுச்சி கம் உதாவ’ திட்டத்தில் அமைக்கப்பட்ட இலங்கையின் 06வது எழுச்சிக் கிராமமாகும்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் அரச காணி 15 பேர்ச்சஸ் வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்காக இலகு கடன் அடிப்படையிலான நிதி உதவியையும் வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, வி. யோகேஸ்வரன், ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபா, காத்தான்குடி ஐ.தே.கட்சி மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார், செயலாளர் எம்.பி.ஏ. கையூம், தவிசாளர் எம்.பி.எஸ். முபாறக் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், பயனாளிக் குடும்பங்கள் உட்பட பல அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment