கொழும்பு: பாராளுமன்ற மைதானத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள இராணுவ வெற்றி விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.எனவே இந்த விழாவில் இம்முறை அவர் கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைதியான முறையில் இம்முறை வெற்றி தினம் கொண்டாடப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள இராணுவ வெற்றி தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்வினவிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இராணுவ வெற்றி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த முறையும் அவருக்கு நாம் அழைப்பு விடுக்கவில்லை.
ஏனெனில் யுத்த வெற்றி தின நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் தான் இடம்பெறும். இதில் அரசியல் மேடைகளுக்கு எந்த அனுமதியும் இல்லை.இம்முறை இராணுவ வெற்றி தினத்தில் யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தவும், இராணுவ வீரர்களை கௌரவப்படுத்துவதற்குமான நிகழ்வுகளும் நடைபெறும்.
அது தவிர எவரது புகழும் இதில் பறைசாற்றப்படாது.மேலும் இம்முறை நாம் மிகவும் எளிமையான வகையில் இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடுகின்றோம். அனாவசியமான செலவுகள், அனாவசியமான விளம்பரங்கள் அனைத்தையும் நாம் நிராகரித்துள்ளோம்.அதற்கு பதிலான இன ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட தயாராகியுள்ளோம்.
அதை குழப்பும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றார்.
இதேவேளை குறித்த வெற்றிவிழா நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் இராணுவ சேவைகள் அதிகார சபையின் தலைவர் திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Leave a comment