-
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் (மே) 20ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று 06 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
தரம் 5இல் கல்வி கற்கும் 10வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கைது செய்யப்பட்டு இறுதியாக கடந்த 05ம் திகதி நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்கள் இருவரையும் இன்று 06 வெள்ளிக்கிழமை வரை 1 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று 06 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களிருவருக்கும் பிணை வழங்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை மனு விண்ணப்பம் ஒன்றினை தாக்கல் செய்தனர்.
இந்த பிணை மனு விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிபதி சந்தேக நபர்களான சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் மே 20 ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment