உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பலஸ்தீன மக்கள்

palestine_flag[1]பலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம் கேட்காமல் ஐ.நா பாலஸ்தீனின் 55 வீத நிலத்தை யூதர்களுக்கு பறித்துக் கொடுத்தது.அது போதாது என்று அன்றிலிருந்து இன்று வரை யூதர்கள் பாலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றனர்.

இஸ்ரேல் கைப்பற்றிய அதிகமான நிலங்களுள் அதிகமான நிலங்களில் யூத குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன;இஸ்ரேலிய தொழில்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன;யூதர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பங்களிப்புகள் இந்த நிலங்களில் இருந்துதான் பெறப்படுகின்றன.மறுபுறம் இந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் இந்த நிலங்களிலேயே இஸ்ரேலின் கை கூலிகளாக-அடிமைகளாக பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறானதொரு பொருளாதாரக் கட்டமைப்பை-யூத குடியிருப்புகளை சிதைத்து விட்டு அந்த நிலங்களை பாலஸ்தீனிடம் இஸ்ரேல் மீள ஒப்படைக்கும் என்பது கனவிலும் நடக்காத ஒன்று.அவற்றைக் கைப்பற்ற பாலஸ்தீன மக்கள் இன்னும் போராட வேண்டும்.

யூதர்களால் பறிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில்1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சியோனிச தலைவர் டேவிட் பேங்கியூரியனால் இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது.மறு நாளே யூதர்கள் சுமார் 500 பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து 7 லட்சம் முஸ்லிம்களை வெளியேற்றி அந்த நிலங்களைக் கைப்பற்றினர்.அதே கால பகுதியில் பல நாடுகளில் இருந்து 7 லட்சம் யூதர்கள் வரவழைக்கப்பட்டு அந்த நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இதனால்,இஸ்ரேலுக்கும் அதனைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது.அந்த யுத்தத்தின் பின் பாலஸ்தீனின் காஸா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும்-அல்-அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட மேற்குக் கரை ஜோர்தானின் நிர்வாகத்தின் கீழும் வந்தன.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது யுத்தத்தின் முடிவில் காஸா,அல்-அக்ஸா உள்ளிட்ட மேற்குக் கரை,எகிப்துக்குச் சொந்தமான சினாய் பாலைவனம்,ஜோர்தானுக்கு சொந்தமான ஜோர்தான் பள்ளத்தாக்கு,சிரியாவுக்குச் சொந்தமான கொலன் ஹெய்ட்ஸ்,லெபனானுக்கு சொந்தமான ஷெபா விவசாய நிலங்கள் போன்றவை இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டன.

1978 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் சினாய் பாலைவனத்தை எகிப்திடம் மீள ஒப்படைத்தது.2005 ஆம் ஆண்டு காஸாவை விட்டும் வெளியேறியது.காஸாவில் நிறுவப்பட்டிருந்த யூத குடியேற்றங்களை மேற்குக் கரைக்கு மாற்றியது.

மேற்குக் கரை,ஜோர்தான் பள்ளத்தாக்கு,சிரியாவின் கொலன் ஹெய்ட்ஸ்,லெபனானின் செபா விவசாய நிலங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

கைப்பற்றப்படட அந்த நிலங்களை மீட்டெடுக்க அந்தந்த நாடுகள் ஏதோவொரு வகையில் முயற்சித்துக் கொண்டு இருக்கின்ற போதிலும் மேற்குக் கரையை மீட்கும் போராட்டமே முக்கியமானதாகும்.

மேற்குக் கரையை-அல்-அக்ஸா பள்ளிவாசலை மீட்கும் போராட்டம் விரைவில் வெற்றி பெற வேண்டும் என்பதே உலக முஸ்லிம்கள் அனைவரினதும் விருப்மாகும்.இதை மீளக் கைப்பற்றும் பாலஸ்தீன போராட்டத்துக்கு கை கொடுக்க வேண்டியது உலக முஸ்லிம் நாடுகளின் கடமையாகும்.இந்தக் கடமை சரியாக நிறைவேற்றப்பட்டால் பாலஸ்தீன் இஸ்ரேலிடமிருந்து மிக விரைவில் முழுமையாக மீட்கப்படும் என்பது நிச்சயம்.

ஆனால்,இந்த விடயத்தில் உலக முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் காட்டும் அசமந்தப் போக்கால் பாலஸ்தீன் தினம் தினம் அழிவைச் சந்தித்து வருகின்றது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலைகளும் நில ஆக்கிரமிப்புகளும் நாளுக்கு நாள் தொடரவே செய்கின்றன.

உலக முஸ்லிம்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்கின்ற ஆயுதக் குழுக்களும் சரி.முஸ்லிம் நாடுகளும் சரி பாலஸ்தீன் விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன.முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றன.இது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட சதியாகும்.இது விரிவாக ஆராயப்பட வேண்டியது.

பலஸ்தீனின் நிலத்தில் 55 வீதமான நிலத்தைத்தான் ஐ.நா சபை 1947 இல் யூதர்களுக்குப் பறித்துக் கொடுத்து.ஆனால்,அந்த நிலம் போதாது என்று கூறி மறு நாள் முதலே அவர்கள் மேற்கொண்ட நில ஆக்கிரமிப்பின் விளைவாக இப்போது 85 வீதமான நிலங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

அந்த நிலங்களில் வசித்து வந்த பாலஸ்தீன மக்களை விரட்டியடித்துவிட்டு அங்கு தொழில்சாலைகளும் யூதக் குடியுருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன;அமைக்கப்பட்டு வருகின்றன.அண்மைக்காலமாக நில ஆக்கிரமிப்பும் யூதக் குடியிருப்புக்கள் அமைப்பதும் தீவிரமடைந்துள்ளன.சர்வதேசத்தின் எதிர்ப்புகளையும் மீறி இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டே இருக்கின்றது.

தினமும் பாலஸ்தீன மக்கள் அகதிகளாகிக் கொண்டே இருக்கின்றனர்.தினமும் யூதக் குடியிருப்புக்கள் இருக்கின்றன.மேற்குக் கரையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள 60 வீதமான நிலங்களுக்குள் பாலஸ்தீன அதிகார சபையால் கூட நுழைய முடியாதுள்ளது.கிழக்கு ஜெருசலத்தின் நிலைமையும் படு மோசமானது.அங்கும் வீடுகள் உடைக்கப்படுவதும் யூதக் குடியிருப்புகள் அமைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன.

2009 முதல் 2014 வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 23 வீதமான யூதக் குடியிருப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.இன்னும் 55,548 வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் இப்போது வரை தினமும் சராசரி 460 வீடுகள் என்ற அடிப்படையில் வீடுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.2014 இல் 3100 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டன.ஜெருசலத்தில் மிக விரைவில் 90,000 மக்கள் விரட்டப்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு இஸ்ரேலின் யூதக் குடியிருப்பு விஸ்தரிப்பும் நில அபகரிப்பும் தொடர்ந்த வண்ணமேதான் உள்ளன.சர்வதேச நாடுகளும் முஸ்லிம்களும் இதற்கு எதிராகக் கண்டனங்களை மாத்திரம் தெரிவிக்கின்றதே தவிர இவற்றுக்கு எதிராக-இவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து அவர்களுக்கு மத்தியில் யூதக் குடியிருப்பை நிறுவி பாலஸ்தீனர்களின் பலத்தை வெகுவாகக் குறைத்துவிடும் வேலையை இஸ்ரேல் கட்சிதமாகச் செய்து வருகின்றது.இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாலஸ்தீனர்களின் ஜனநாயகப் போராட்டத்தை வெகுவாகக் குறைப்பதே இஸ்ரேலின் ஒரே நோக்கம்.

அது மாத்திரமன்றி,”அகன்ற இஸ்ரேல்” என்ற இஸ்ரேலின் அந்த நாசகாரத் திட்டத்துக்குள் பாலஸ்தீன் உள்வாங்கப்பட்டு பாலஸ்தீன் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும்.அதன் பின் பாலஸ்தீனர்கள் அவர்களின் மண்ணுக்காகப் போராட முடியாமல் போய்விடும்.இதனால்,இஸ்ரேல்-பாலஸ்தீன் என்ற இரு நாட்டுத் திட்டம் வலுவிழந்து போய்விடும்.

உலக நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் தொடர்ந்தும் இவ்வாறு பாராமுகமாக இருந்தால் பாலஸ்தீன் என்ற நாடு விரைவில் இல்லாமலே போய்விடும்.இனிமேலாவது முஸ்லிம் நாடுகள் சிந்தித்து முடிவெடுக்குமா?

[எம்.ஐ.முபாறக்]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s