முஸ்லிம்களுக்கான தேவை என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! வட மாகாண சபை சொல்லவேண்டியதில்லை: ரிசாட்

rishadவவுனியா: முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் சதொச விற்பனை நிலையத்தின் 317 வது கிளையினை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபையில் ஒரு பிரேரணையை முன்வைத்திருப்பதாக அறிகின்றோம். வடமாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு முதலமைச்சர், தமிழரசுக் கட்சி ஆகியோர் தங்களுக்கு என்ன தேவை என கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என சொல்வதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பல ஆயுதக்குழுக்கள் தனிநாடு கேட்டு போராடினார்கள்.

அதன்பின்பு இந்தியாவுடன் இணைந்து வடகிழக்கு இணைக்கப்பட்டு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.கிழக்கு மாகாண மக்களுடைய எந்தவொரு கருத்தும் பெறப்படாது வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது. அதன்பின் நீதிமன்றத்தின் ஊடாக வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டது. இன்று இந்த நிலையிலே ஒரு தீர்வை எவ்வாறு அடைவது என நாங்கள் மிக நீண்டநாட்களாக எமது கட்சியின் கூட்டங்களைக் கூட்டி ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரை வடகிழக்கில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதற்கு வெளியே அனுராதபுரம், கொழும்பு ஆகிய பகுதிகளிலும் பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.

rishad

அந்த வகையில் நாங்கள் ஆராய்ந்து எமது தீர்வுத் திட்டத்தின் இறுதி நிலையை அடைந்திருக்கின்றோம். என்றாலும் இதை இன்னும் மெருகூட்டி மக்களிடத்திலும், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாராளுமன்றம், அரசியலமைப்பு சபை ஆகியவற்றிடம் சமர்ப்பிக்க முன்னர் நாங்கள் சிறுபான்மை கட்சிகளோடு பேச இருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டனி, ஈபிடிபி, மனோகணேசன் தலைமையிலான மலையக கூட்டமைப்பு, தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதேபோல் இன்னும் இருக்கின்ற ஜேவிபி போன்ற சிறிய கட்சிகளுடன் பேசி தேர்தல் முறைகளில் சிறுபான்மை கட்சிகள், சிறுபான்மை சமூகம் என்பவற்றுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் இருப்பதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம்.

அதையும் மீறி எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவும் தாயாரகவுள்ளோம். அது மட்டுமல்லாமல் அரசியலமைப்பு மாற்றத்திலே ஒரு நியாயபூர்வமாக எல்லா இனமும், மதமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஒழுங்கான அரசியலமைப்புக்காக பூரண ஒத்துழைப்பைக் கொடுப்போம்.

வடக்கு மாகாண சபை எடுத்த எடுப்பில் தங்களுடைய தீர்வாக தங்களுக்கு என்ன வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இஸ்லாமியருக்கு அதைக் கொடுங்கள், மலையகத்தவர்களுக்கு இதைக் கொடுங்கள், அதேபோல் வேறு மாகாணத்தவருக்கு இதைக் கொடுங்கள் எனக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அது நியாயமும்மில்லை.

இந்த நாட்டடில் வாழுகின்ற 10 வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அழிவுற்றிருக்கிறார்கள், ஊனமுற்றிருக்கிறார்கள், இன்னும் காணாமல் போனவர்களாக இருக்கிறார்கள், வெளிநாடுகளில் இருந்து கஸ்ரப்படுகிறார்கள்.

ஆகவே, அவர்களுக்காக நியாயமான கருத்தினை, தீர்வினை கோருக்கின்ற, முன்வைக்கின்ற பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் 9.6 வீதத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்ற உரிமை இவர்களுக்கு இல்லை.எனவே அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சி உட்பட பல கட்சிகள் இருக்கின்றன. நாங்கள் அதைப் பார்த்துக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s