சிறுநீரக வியாபாரம்: கைதான இந்தியப் பிரஜை சிறையிலிருந்து தப்பியோட்டம்!

Escape%20Logo[1]கொழும்பு: இலங்கை – இந்தியா இடையே நடப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டிருந்த இந்திய பிரஜைகளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்பை அண்டியுள்ள மிரிஹான தடுப்புநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தப்பியோடியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றபட்டுள்ள மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சர்வதேச காவல்துறை மற்றும் இந்த அரசின் உதவியை நாடியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனிடையே, இலங்கையின் சட்டங்களுக்கமைய உடல் உறுப்புக்களை தானம் செய்வது சட்டவிரோதமானது அல்ல என சந்தேகநபர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக குடிவரவு சட்டத்தின் கீழ் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் கூறினார். இருதரப்பு வாதங்களை அடுத்து மே மாதம் 2ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Published by

Leave a comment