கொழும்பு: நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட FCID எனப்படும் நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் விரைவில் நீக்கப்படவுள்ளதாக, திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நீக்கப்படவுள்ளது. அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியும் அதற்காக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் நீக்கப்படுவதுடன், அதற்கு இணையாக நாடாளுமன்றத்தில் சட்டத்தின் மூலம் நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது வரையில் தீர்மானித்துள்ளது.
அதன் புதிய பிரிவு நிதி மற்றும் பொருளாதார புலனாய்வு அமைப்பு (Financial & Economic Investigation Agency) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. FCIDயின் பிரதானியாக செயற்படும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவிந்திர வித்யாலங்கார இந்த புதிய பிரிவின் பிரதானியாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வரையில் பாரிய குற்றங்களை இழைத்த ராஜபக்ச குடும்பத்தினரை கைது செய்ய கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ள புதிய நிறுவனத்தின் ஊடாக ராஜபக்சாக்களை வேட்டையாட கூடிய வாய்ப்பு அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Published by

Leave a comment