முடிச்சிடப்பட்ட கைறுகளுக்கு முன்னால் நிற்கும் மாணவர்களுக்கு பதில் கூறுமா அரசு?

  • நிரோஸா இஸ்ஸதீன்

government logoஎண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாக்கிற்கமைவாக இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூக வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்பு செய்யும் அம்சமாக கல்வியும் அதனோடு இணைந்ததான அரச பதவிகளும் காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையில் உயர் கல்வியையும் பயிற்சியையும் அதன் நிறைவாக அரச ஆசிரிய நியமனங்களையும் வழங்கும் நிறுவனங்களாக தேசிய கல்வியியற் கல்லூரிகள் மிளிர்கின்றன.

பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக் கல்வியைப் பயின்று அதன் நிறைவாக ஒவ்வொரு வருடமும் தேசிய ரீதியில் இலங்கைப்பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற உயர்தரப் பரீட்சையில் உயர்ந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற திறமையான மாணவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு ஆசிரிய பயிற்சிகளை வழங்கி சிறந்த ஆசிரியர்களாக அவர்களை பிரசவிக்கும் மகத்தான பணியை இக்கல்வியியற் கல்லூரிகள் ஆற்றி வருகின்றன.

இலங்கையில் தேசிய கல்வியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த வருடம் வரை அதற்கான பயிலுனர்கள் தெரிவு என்பது இன. மத. மொழி. பால். பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி உயர்தரப்பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகள் மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு தகுதியான திறமையான மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இலங்கையிலுள்ள 18 கல்வியியற் கல்லூரிகளும் இத்தெரிவை முறையாக மேற்கொண்டு செயற்பட்டமையினால் கடந்த வருடம் வரை தேசிய கல்வியியற் கல்லூரிகள் எதற்காகவும் யாராலும் விமர்சிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனினும் இவ்வருடம் இக்கல்வியியற் கல்லூரிகள் பெரும் விமர்சனத்துக்கு ; உள்ளாகியிருப்பது நிகழ்கால நிதர்சனமாகும். இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது இவ்வருடம் பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டவிதமாகும். அதாவது இதுவரை காலமும் பயிலுனர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட முறை இவ்வருடம் மாற்றப்பட்டு ஆசிரிய நியமனங்களுக்கான வெற்றிடங்களை கொண்ட பிரதேசங்கள் கணிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆசிரிய நியமனங்களுக்கான வெற்றிடங்கள் இல்லாத பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சையில் உயர்ந்த வெட்டுப்புள்ளிகளைப் பெற்ற திறமையான மாணவர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர் தெரிவில் இவ்வருடம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விடயமாகும்

இலங்கையின் கல்வித்திட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு இறுக்கமான திட்டமென்றே பலராலும் விமர்சிக்கப்பட்ட வருவதுண்டு அதன் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2016 ஆம் ஆண்டு மே மாதம்தான் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்குள் உள்வாங்கப்பட இருக்கிறார்கள். எனின் ஏற்கனவே இரண்டு வருடங்கள் ‘கல்லூரிகளின் அனுமதிக்கான காத்திருப்பு’ என்ற பெயரில் மாணவர்களது பொன்னான காலத்தை வீணடித்துவிட்ட இலங்கை அரசாங்கம் தற்போது இம்மாணவர்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் தெரிவில் புறக்கணிப்பதானது மிகப்பெரிய நம்பிக்கை துரோகமாகும். இவ்விரண்டு வருட காலப்பகுதியில் இலங்கையிலுள்ள அரச சார்பற்ற உயர் தொழில் கல்வி வழங்கும் நிறுவனங்களில் பாடநெறிகளை பயின்று வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால்கூட இம்மாணவர்கள் அங்கு உயர் தொழில் வாய்ப்புக்களை பெற்று வெற்றியடைந்திருப்பார்கள். இதற்கு இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆக வேண்டும். மாணவர்களை காத்திருக்கச் செய்துவிட்டு தற்போது புறக்கணித்துவிடப்பட்டிருப்பதன் உள்நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.

மேலும் கடந்த காலங்களுக்கு மாற்றமாக இவ்வருடம் மாணவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள தேர்தல் வாக்காளர் இடாப்பிலிருந்து பெறப்படுகின்ற படிவம் கச்சேரிகளில் இருந்து பெறப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்வருடம் தேசிய கல்வியியற் கல்லூரிகளின்; நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்த அனைத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கச்சேரிகளில் கால்கடுக்க காத்து நின்றதுடன் கையறு நிலையிலுள்ளவர்கள்கூட அதனை பணம் செலுத்தி பெற்றுக்கொண்டமையும் அத்தகைய மாணவர்கள் இன்று கைவிடப்பட்டுள்ளமையும் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கல்விக்கல்லூரிகளுக்கு திறமைகள் புறக்கணிக்கப்பட்டு வெற்றிடங்களை மையப்படத்தி பயிலுனர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் அப்பிரதேசங்களுக்கு வெற்றிடங்களை நிவர்த்தி செய்வது என்பது அரசின் எதிர்கால நோக்காக இருந்தாலும் இம்முறையின் முலம் இலங்கை திறமையற்ற ஒரு கல்விச் சமூகத்தையே கண்டுகொள்ளும் என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி. அதுமட்டுமன்றி ஒவ்வொரு வருடமும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற ஆசிரியர்கள் அவர்கள் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக கஸ்டப்பிரதேசங்களுக்கே நியமிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் மறுக்கின்ற போது அவர்களது நியமனம் இரத்துச்செய்யப்படுவதும் அதற்கான நஸ்டயீட்டை பயிலுனர்கள் செலுத்துவதும் உண்மையாகும். இவ்வாறான ஒரு நிலை காணப்படும் போது பயிலுனர்கள் தமது நியமனங்களை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர். எனவேதான் வெற்றிடங்கள் உள்ள இடங்களில் இருந்துதான் பயிலுனர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது ஒரு தேவையற்ற விடயமாகும்.

ஒரு நாட்டில் உரிமைகளைப்போராடி பெறவேண்டிய நிலை காணப்படுமாயின் அந்நாட்டில் நல்லாட்சி மிளிர வாய்ப்பில்லை. அந்த வகையில் இலங்கையில் மாணவர்கள் தமது கல்வி உரிமைக்காக போராட வேண்டியதொரு நிலை தற்போது எழுந்துள்ளது. எனவே இது குறித்து அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். மேலும் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு திறமையானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். இவ் அடிப்படையில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட பயிலுனர் தெரிவு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொறுப்புவாய்ந்த தீர்வொன்றினை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கையாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s